full screen background image

‘கென்னடி கிளப்’ – சினிமா விமர்சனம்

‘கென்னடி கிளப்’ – சினிமா விமர்சனம்

நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.என். தாய் சரவணன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, சசிகுமார், சூரி, மாக் பந்த், முரளி சர்மா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கபடி வீராங்கனைகளாக மீனாட்சி, ஆர்.சௌந்தர்யா, எஸ்.ஜீவா, எம்.அருள்மொழி, கே.ஸ்வேதா, வி,வித்யா, வி.விருந்தா, பி.சித்ரா, ஏ.மகாலட்சுமி, எஸ்.ஹேமலதா, கே.செல்வராணி,  ஆர்.ஆஷா, எஸ்.பிருத்வி, திவ்யா மற்றும் பல மாநில கபடி வீராங்கனைகள் நடித்திருக்கிறார்கள்.

இசை – டி.இமான், ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ், கலை இயக்கம் – பி.சேகர்,  படத் தொகுப்பு – ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், வசனம் – எம்.ராஜபாண்டியன், பாடல்கள் – விவேகா, இணை இயக்கம் – திருப்பதி ராஜா, சண்டை இயக்கம் – தினேஷ் காசி, உடைகள் வடிவமைப்பு – கனிதிரு, கிராபிக்ஸ் – ஹரிஹரசுதன், புகைப்படங்கள் – ரங்கராவ், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், தயாரிப்பு நிர்வாகம் – முருகன், விளம்பர வடிவமைப்பு – சின்னா சுரேஷ், நிர்வாகத் தயாரிப்பு – சுந்துரு, எம்.சரவணன், நேரடி தயாரிப்பு – கே.வி.மோதி, இணை தயாரிப்பு – இளங்கோ கரிகாலன், செந்தமிழ்ச் செல்வி, தயாரிப்பு நிறுவனம் – நல்லுசாமி பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – டி.என்.தாய் சரவணன், கதை, திரைக்கதை, இயக்கம் – சுசீந்திரன்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது.

படத்தின் கதை தமிழர்களின் ஆதி கால விளையாட்டான கபடி விளையாட்டை மையமாகக் கொண்டது. ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கபடி விளையாட்டு பற்றி முதல்முறையாக தமிழ் சினிமாவில் கதை சொன்ன இயக்குநர் சுசீந்திரன், அதையடுத்து ‘ஜீவா’ படத்தில் கிரிக்கெட் விளையாட்டின் மர்மங்களைப் பற்றியும் சொன்னார். இப்போது மூன்றாவது முறையாக கபடியை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

திண்டுக்கல் அருகேயிருக்கும் ஒட்டன்சத்திரம் ஊரில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ‘சவடமுத்து’ என்னும் பாரதிராஜா. கபடி விளையாட்டில் மீகுந்த ஆர்வமுள்ள அவர், தன்னுடைய ஊரிலேயே ‘கென்னடி கிளப்’ என்கிற பெயரில் ஒரு பெண்கள் கபடி குழுவை அமைத்திருக்கிறார்.

அந்தக் குழுவில் உள்ள பெண்கள் அனைவருமே அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளியில் படிப்பவர்கள்.. கல்லூரியில் படிப்பவர்கள்.. படித்து முடித்துவிட்டு வீட்டுக்காக தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்கள் என்று மூன்று பிரிவினரும் இந்தக் குழுவில் இருக்கிறார்கள்.

இந்த வீராங்கனைகளின் பெற்றோர்கள் இவர்களை வேலைக்கு அனுப்ப முயற்சித்தும், “ஒரு போட்டியில் வென்று, மாவட்ட அளவில், மாநில அளவில் விளையாட தேர்வானாலேயே அரசு வேலை கிடைக்கும். அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை அமையும்…” என்று சொல்லி பாரதிராஜா, அவர்களது பெற்றோர்களை சம்மதிக்க வைத்திருக்கிறார்.

திடீரென்று ஒரு நாள் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல்போய், அவருடைய இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு இருப்பது தெரிய வருகிறது. இதனால் ஆபரேஷன் செய்து ஓய்வு எடுக்கும் அவர், தனக்குப் பதிலாக ‘கென்னடி குழு’வின் பயிற்சியாளராக தன்னுடைய முன்னாள் மாணவரான ‘முருகானந்தம்’ என்னும் சசிகுமாரை வரவழைக்கிறார்.

இரயில்வேயில் வேலை பார்த்து வரும் சசிகுமார் கபடி விளையாட்டில் தேசிய அணியில் விளையாடியிருக்கிறார். ஒட்டன்சத்திரம் வரும் சசிகுமார், தனது அணி வீராங்கனைகளுக்குப் பயிற்சியளிக்கிறார்.

தேசிய அளவிலான டீமில் இடம் பெற நடைபெறும் தகுதிப் போட்டியில் ‘கென்னடி கிளப்’பை சேர்ந்த ஒரு பெண் தேர்வாகிறார். ஆனால் அவர் தேர்வு செய்யப்படுவதற்கு 30 லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கேட்கிறார் அகில இந்திய தேர்வுக் குழுவின் தலைவரான முரளி சர்மா.

இதைக் கொடுக்க முடியாததால் அந்தப் பெண் தேசிய அணியில் இடம் பெற முடியாமல் போகிறது. இதையடுத்து அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார்.

ஆனாலும், முள்ளை முள்ளால் எடுப்பதுபோல நமது திறமையை இந்தியாவுக்கே அடையாளம் காட்டு வேண்டும் என்று சொல்லி தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தனது ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகளை தயார் செய்கிறார் சசிகுமார்.

தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் கென்னடி கிளப் வெற்றி பெற்றதா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நாயகன் கதாபாத்திரத்தில் சசிகுமார் இருந்தாலும், படத்தின் நாயகன் என்னவோ கபடி விளையாட்டுதான். நாயகன்-நாயகி கதையாக கொண்டு செல்லாமல், “ஒரு பயிற்றுநர் தனது விளையாட்டுக் குழுவை எப்படி ஜெயிக்க வைக்கிறார்…” என்பதையே இரண்டு வரிக் கதையாக இதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

வீராங்கனைகள் அனைவரும் ‘அப்பா’ என்று பாசமாக அழைக்கும்வண்ணம் நடித்திருக்கும் பாரதி தனது அந்தக் கரகரப்பான குரல் வளத்திலேயே ஈர்க்கப்படுகிறார். தேர்வுக் குழுவின் தலைவர் முரளி சர்மாவிடம் ‘நீங்கள் எப்போது ஊழல்வாதியாக மாறினீர்கள்?’ என்று கேள்வி கேட்குமிடத்தில் சபாஷ் சொல்ல வைக்கிறார். இதேபோல், கிளைமாக்ஸ் காட்சியில் அமைச்சரிடம் பொங்கும்போது ஓவர் டோஸாக இருந்தாலும் அவைகள் அனைத்தும் சத்தியமான வார்த்தைகள் என்பதால் ரசிக்க வைத்திருக்கிறார் பாரதி.

‘பாண்டிய நாடு’ படத்தில் பார்த்த பாரதிராஜாவுக்கும் இதில் இருக்கும் பாரதிராஜாவுக்கும் நிறையவே வித்தியாசங்கள். வயது மூப்பின் காரணமாய் சில வசனங்களை தொடர்ச்சியாக அதே ரூபத்தில் பேச முடியாமல் தவித்திருக்கிறார் பாரதி.

சசிகுமாருக்கும் இவருக்குமான உரசல்களை கதையோடு கொண்டு போய்.. அதை இயல்பாகவே உடைவதுபோல் காட்டியிருந்தாலும் அது சினிமாட்டிக் திரைக்கதையாக அமைந்துவிட்டது.

சசிகுமாருக்கு பொருத்தமான வேடம். அவரை காதலிக்கவிடாமல், அதிகப்பட்சம் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் காட்டாமல்.. இது போன்று கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தால் நன்றாகவே இருக்கும். முரளி சர்மாவுடன் ஹோட்டல் பார்ட்டியில் அவர் பேசும்பேச்சும், முரளிக்கு அவர் கொடுக்கும் பன்ச்சும் “சபாஷ்டா” என்று சொல்ல வைத்திருக்கிறது. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

ஒட்டு மொத்தமாய் கபடி வீராங்கனைகளாக பார்த்து, பார்த்து தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அத்தனை பேருமே கபடி விளையாட்டு என்பதையும் தாண்டி நடிக்கவும் செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குடும்பப் பின்னணி என்று சொல்லி அவர்களது நிகழ்வுலக வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்தான் படத்தின் மீதான ஈர்ப்பே அமைந்திருக்கிறது. வெல்டன் இயக்குநரே.

கலையரசியை கல்யாணம் செய்யும் அந்தக் கவிஞன், முதல் இரவை தியாகம் செய்துவிட்டு மனைவியை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லுகின்ற அந்தக் காட்சிதான் தியேட்டரில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதேபோல் இரட்டையர் பெண்களில் ஒருவர் “சோறுதான் முக்கியம்” என்று அழுத்திச் சொல்லும் காட்சியிலும் செம கலகலப்பு..!

சசிகுமாருக்கும், மீனாட்சி என்ற வீராங்கனைக்கும் இடையில் காதல் மலர்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டில்ஸ்களும் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் படத்தில் அதற்கும் மேலான காட்சிகள் இல்லை. எடுத்து நீக்கிவிட்டார்கள் போலிருக்கிறது. அதுவும் நன்மைக்கே.. காதல் காட்சிகள் இருந்திருந்தால் படத்திற்கு மிகப் பெரிய பின்னடைவைத்தான் அது தந்திருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது. எப்படியும் ‘கென்னடி கிளப்’புதான் ஜெயிக்கும் என்பது தெரிந்தாலும் அது எப்படி என்பதை அந்த உச்சப்பட்ச டென்ஷனோடும், பரபரப்போடும் படமாக்கியிருக்கிறார்கள்.

நான்கு கேமிராக்களை வைத்து கடும் உழைப்போடு இவர்கள் செய்திருக்கும் பணி பாராட்டுக்குரியது. இதற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ்வை எப்படி பாராட்டினாலும் தகும்..!

ஒட்டன்சத்திரம் பகுதியின் இயற்கைச் சூழலின் அழகைக் காட்டியும், அந்தக் கிராமத்தின் தெருக்கள், வீடுகள் என்று எதிலும் நவீனம் இல்லாத இடமாகப் பார்த்து காட்சிகளை அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

டி.இமானின் இசையில் பாடல்கள் அதிகம் கவரவில்லை. அனைத்துப் பாடல்களுமே கபடி விளையாட்டை மையப்படுத்தியும், காட்சிகளை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதுபோலவும் அமைந்திருந்ததால் பாடல்களின் மீது கவனம் வரவில்லை. ஆனால் பின்னணி இசையே இல்லாததுபோல் அமைத்து பாராட்டுக்களைப் பெறுகிறார் இமான்.

கபடி விளையாட்டுக்களை கச்சிதமாகத் தொகுத்து வழங்கியிருக்கும் படத் தொகுப்பாளர் ஆண்டனிக்கும் நமது பாராட்டுக்கள். இறுதிப் போட்டியை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது இவரது படத் தொகுப்புப் பணி.

கபடி விளையாட்டின் ‘ஏ முதல் இஸட்’வரையிலுமான விஷயங்களை மிகவும் கவனிக்கத்தக்க முறையில் இதில் சொல்லியிருக்கிறார்கள். கபடி விளையாட்டு பற்றி அறியாதவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்து ‘ஆதி முதல் அந்தம்’வரையிலும் தெரிந்து கொள்ளலாம். இதற்காகக் கதையை வடிவமைத்த குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.

விளையாட்டு என்பது நமது நாட்டின் பெருமைகளைக் குறிக்கும் ஒரு பகுதி என்றாலும் அதிலும் சமீபகாலமாக எழுந்திருக்கும் ஊழல், அராஜகம், அரசியல் தலையீடுகள், மத துவேஷம், சாதிப் பாகுபாடு, பண விளையாட்டு என்று அனைத்தையும் இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இது இந்தியாவைப் பிடித்திருக்கும் நோய் என்பதால் இதனை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் இத்திரைப்படம், இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பார்க்கும் தகுதியுள்ளதாக உள்ளது.

படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..!

Our Score