தமிழகத்தின் தொழில் துறையில் தனித்த அடையாளமாய் இருக்கும் டி.வி.எஸ். நிறுவனமும் திரைப்படத் துறைக்குள் கால் பதித்திருக்கிறது.
டி.வி.எஸ். அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான சுரேஷ் கிருஷ்ணாவின் மகள் ப்ரீத்தம் கிருஷ்ணாவின் கணவர் ஜெய் கிருஷ்ணா, ‘சுந்தரம் புரொடெக்சன்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் ‘மெய்’ என்கிற படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரனும், ப்ரீத்தம் கிருஷ்ணா-ஜெய் கிருஷ்ணா தம்பதியரின் மகனுமான நிக்கி சுந்தரம் நாயகனாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், சார்லி, கிஷோர், வினோத் கிருஷ்ணன், அஜய் கோஷ், ஈ.ராம்தாஸ், ‘கவிதாலயா’ கிருஷ்ணன், ஜார்ஜ் மரியான், அருள் D.ஷங்கர், அபிஷேக் வினோத், தங்கதுரை, மதன் கோபால், A.S.ரவிபிரகாஷ் மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – சுந்தரம் புரொடக்ஷன்ஸ், நிர்வாக தயாரிப்பு – வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ், சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், தயாரிப்பு உறுதுணை – சித்தாரா சுரேஷ், இசை – பிரித்வி குமார், படத் தொகுப்பு – பிரீத்தி மோகன், கலை இயக்கம் – செந்தில் ராகவன், ஒளிப்பதிவு – V.N.மோகன், பின்னனி இசை -அனில் ஜான்சன், பாடல்கள் – கிருஷ்டோபர் பிரதீப், ஆடியோகிராபி – M.R.ராஜகிருஷ்ணன், நடன இயக்கம் – விஜி சதிஷ், சண்டை இயக்கம் – மகேஷ் மேத்யு, உடைகள் – தாரா மரியா ஜார்ஜ், கதை, வசனம், இணை இயக்கம் – சேந்தா முருகேசன்.
இயக்குநர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநரான எஸ்.ஏ.பாஸ்கரன், இத்திரைப்படத்தை திரைக்கதை எழுதி, இயக்குகிறார்.
படத்தின் நாயகனான நிக்கி சுந்தரம் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், திரைப்படத் துறையின் மீதுள்ள ஆர்வத்தால், இங்கு வந்து தமிழ் படித்து, இந்தப் படத்திற்குத் தேவையான வகையில் முழு ஈடுபாட்டுடன் தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்பே கேமிரா முன்பு நின்றுள்ளார்.
கதை, கதாபாத்திரம் மற்றும் தன் நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலம், திரையுலகில் தொடர்ந்து தனது பதிவுகளை அழுத்தமாக தடம் பதித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் கதை மற்றும் தனது கதாபாத்திரத்தின் வலிமையையும், முக்கியத்துவத்தையும் அறிந்த பின்பே இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.
மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் இன்று மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இத்திரைப்படம். அந்த வகையில் ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியை இந்த ‘மெய்’ திரைப்படம் ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது..!
இத்திரைப்படம் வெற்றி பெற்றால் டி.வி.எஸ். நிறுவனம் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று தோன்றுகிறது..!