full screen background image

உண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம் 

உண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம் 

நடிகர் போஸ் வெங்கட்  தன் திரை வாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராக துவங்கி உள்ளார். தான் இயக்கி வரும் முதல் படத்திற்கு ‘கன்னி மாடம்’ என்று பெயரிட்டுள்ளார் இயக்குநர் போஸ் வெங்கட்.

ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஹஷீர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இருவரும் இப்படத்தின் மூலம் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ‘ஆடுகளம்’ முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோணி தாசன் இருவரும் இப்படத்தில் பாடல்கள் பாடியிருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J.இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி படத் தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை சிவ ஷங்கர் செய்துள்ளார். விவேகா பாடல்களை எழுதியுள்ளார். தினேஷ் சுப்புராயன் சண்டை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

தனது இயக்குநர் அவதாரத்தால்  மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும்  உள்ள இயக்குநர் போஸ் வெங்கட், தனது  ‘கன்னி மாடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். 

‘கன்னி மாடம்’ படம் குறித்து இயக்குநர் போஸ் வெங்கட் பேசும்போது, “பெண்களுக்கு அசாத்தியமான கோட்டையாக இருப்பது பற்றிய சாண்டில்யனின் ‘கன்னி மாடம்’ என்ற சரித்திர நாவல்தான் இதற்கு தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த ‘கன்னி மாடம்’ என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப்படுகிறது.

மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவு கூறும் வகையில் விளக்குகளை ஏற்றி வைத்தனர். சில இடங்களில், பெண்கள் பருவ வயதை அடையும்  நேரத்தில் கட்டாயப்படுத்தி வீட்டுக்குளே இருக்க வைக்கின்றனர். அந்த நேரத்தில் ‘கன்னி மாட’த்தின் விளக்கு ஏற்றப்படும். இதுதான் ‘கன்னி மாட’த்தின் விளக்கம்.

இப்படத்தின் டிசைன்ஸ் பார்ப்பதற்கு தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. நல்ல உள்ளம் கொண்ட நடிகரான  சூர்யா இதில் பங்கேற்கவில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு  நாங்கள் சூர்யாவிற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  

‘கன்னி மாடம்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்துள்ளது. மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததினால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதனைக் கொண்டு சேர்த்த பத்திரிகை ஊடகத்தினருக்கும், சமூக வலைத்தள ஊடகத்தினருக்கும், இதற்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும்போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

இது பற்றி மேலும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இந்தக் ‘கன்னி மாடம்’ திரைப்படம். மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும்…” என்றார் இயக்குநர் போஸ் வெங்கட்.

சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜயராகவாபுரம் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

Our Score