full screen background image

சென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்

சென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் தணிக்கையின்போது சர்ச்சைகளையும், சவால்களையும் சந்தித்து வெளி வந்திருக்கின்றன.

நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டமான பட்ஜெட், நட்சத்திர இயக்குநர் என எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் படத்தின் தலைப்பே விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தது ‘திரெளபதி’ திரைப்படத்தில்தான்.

வட மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக, குல தெய்வமாக இன்றைக்கும் வணங்கப்பட்டு வருபவர் ‘திரெளபதி’ என்னும் பெண் தெய்வம்.

மகாபாரதக் கதை உருவாவதற்கு காரணமாக அமைந்தது அக்னி குண்டத்தில் இருந்து உருவான ‘திரெளபதி’ என்னும் பெண் கதாபாத்திரம்தான்.

மகாபாரதம் முழுமையும் மன்னர்கள், சிற்றரசர்கள், கடவுள் அவதாரமான கிருஷ்ணர் என ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும் அவை அனைத்திற்கும் மையப் புள்ளியாக இருப்பது ‘திரெளபதி’ என்கிற கதாபாத்திரம்தான்.

அந்தக் கதாபாத்திரத்தின் பெயரில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் கூட்டுத் தயாரிப்பு(Crowd Funding) முறையில் உருவான முதல் திரைப்படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு, ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியாரின் புகழ் பெற்ற பாடல் வரியை ‘ஜாதிகள் உள்ளதடி பாப்பா’ என்று எதிர்மறையாக முன் வைத்து இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது

வழக்கமாக நட்சத்திர நடிகர்களின் படத்தின் ட்ரெயிலர் மட்டுமே மில்லியன் கணக்கில் பார்க்கப்படுவதும், விரும்பப்படுவதுமாக இருந்து வரும் நிலையில்… ஒரு சமூக வலைத்தளத்தில் ‘தர்பார்’ படத்திற்கு இணையாக இந்தத் ‘திரெளபதி’ படத்தின் முன்னோட்டமும் பார்க்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியமான விஷயமாகும்.

படத்தின் திரைக்கதை என்ன கருத்தை முன் வைக்கப் போகிறது என்பது தெரியாமல் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும், தணிக்கை செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் வரிசையான புகார்கள் இத்திரைப்படத்தை நோக்கி எழுந்திருந்தன.

பா.ம.க. நிறுவனரான ராமதாஸ், “இந்தத் திரைப்படத்தை முதல் ஆளாகப் பார்ப்பதற்கு நான் காத்திருக்கிறேன்” என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டது மேலும் சர்ச்சையை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இத்திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே உயர்த்தி பேசக் கூடிய திரைப்படமாக இருக்கும் என்கிற சந்தேகம் எல்லோர் மத்தியிலும் எழுந்தது.

இதைப் பற்றி அன்றைய சூழலில் படத்தின் இயக்குநர் மோகன் கூறும்போது, “எந்த ஒரு சமூகம் சார்ந்தோ அல்லது எந்த ஒரு சாதிக்கு எதிராகவோ எங்களுடைய இந்தத் ‘திரெளபதி’ படத்தின் திரைக்கதை அமையவில்லை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பார்க்கக் கூடிய படமாக இது இருக்கும்…” என்றார்.

படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் எதிர்கொள்ளாத வினோதமான பலவித புகார்கள், தணிக்கை அலுவலகத்தில் இந்த படத்திற்கு எதிராக காத்திருந்தன.

தேசிய மற்றும் மாநில எஸ்.சி., எஸ்.டி., ஆணையங்கள் சார்பாகவும், ஐந்து தன்னார்வலர்கள் சார்பிலும் இப்படத்திற்கு எதிராக புகார் மனு அனுப்பப்பட்டு இருந்தது.

சென்னை தணிக்கைத் துறை இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு 15 இடங்களில் வசனங்களுக்குக் கத்தரி போட்டது. இதனை படத்தின் இயக்குநர் ஏற்றுக் கொண்டாலும் படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மும்பை தணிக்கை அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது.

‘மடியில் கனமில்லை வழியில் பயம் எதற்கு?’ என்கிற நோக்கத்தோடு மறு தணிக்கைக்கு படக் குழு தரப்பு விண்ணப்பித்தது. நடிகை கௌதமி தலைமையிலான 9 பேர் கொண்ட ரிவைசிங் கமிட்டி ‘திரெளபதி’ படத்தை பார்த்து ஏற்கனவே சென்னை தணிக்கை அலுவலகம் வழங்கிய 15 நீக்கப்பட்ட காட்சிகளில் 3-ஐ மட்டுமே ரத்து செய்து மீதமுள்ள 12 இடங்களில் வசனங்களை மட்டுமே நீக்குமாறு கூறிவிட்டு படத்திற்கு U/A தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது. அத்துடன் படத்தின் இயக்குநரைப் பாராட்டியதாகவும் தணிக்கை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ஒரு வழியாக பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டிருந்த இந்தப் படம், இப்போது வரும் பிப்ரவரி 28 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை 7G பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Our Score