பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான மயில்சாமி, மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை திடீரென்று மரணம் அடைந்தார்.
கமல்ஹாசனின் ‘நாயகன்’ படத்தில் மேக்கப் அசிஸ்டெண்ட், பிறகு ஸ்டண்ட் உதவியாளர், மிமிக்ரி கலைஞர், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடி நடிகர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பன்முகங்கள் கொண்டவர் நடிகர் மயில்சாமி. அவருக்கு வயது 57.
சென்னை விருகம்பாக்கத்திலுள்ள வீட்டில் தனது மனைவி கீதா, மகன்கள் அன்பு, யுவன் ஆகியோருடன் வசித்து வந்தார். ஏற்கனவே மயில்சாமிக்கு சில வருடங்களுக்கு முன்பு இதய பாதிப்பு ஏற்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 2-வது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நிலை தேறினார்.
இந்நிலையில், நேற்று மகா சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார் மயில்சாமி. அப்போது கோவிலில் நள்ளிரவு வரையிலும் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பின்பு கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பும்போது அதிகாலை 3.30 மணியளவில், மயில்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனடியாக அவரை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மயில்சாமியின் உடல் விருகம்பாக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மயில்சாமி, 1965 அக்டோபர் 2-ம் தேதி பிறந்தார். 1984-ம் ஆண்டில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் அறிமுகமானார். பிறகு ‘கன்னிராசி’ படத்தில் டெலிவரி பாய் வேடத்தில் நடித்தார்.
தொடர்ந்து பிரபுவுடன் ‘என் தங்கச்சி படிச்சவ’, கமல்ஹாசனுடன் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘வெற்றிவிழா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ரஜினிகாந்துடன் ‘பணக்காரன்’, ‘உழைப்பாளி’, விஜயகாந்துடன் ‘சின்னக்கவுண்டர்’, சத்யராஜுடன் ‘வால்டர் வெற்றிவேல்’, விஜய்யுடன் ‘கில்லி’, அஜித் குமாருடன் ‘ஆசை’, ‘வீரம்’, ‘வேதாளம்’, விக்ரமுடன் ‘தூள்’, ராகவா லாரன்ஸுடன் ‘காஞ்சனா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதுவரையிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில், தமிழிலுள்ள எல்லா முன்னணி நடிகர், நடிகைகளுடனும் சேர்ந்து காமெடி வேடங்களில் நடித்துள்ளார். ராசு மதுரவன் இயக்கிய ‘மாயாண்டி குடும்பத்தார்’ படம் மயில்சாமியை சிறந்த குணச்சித்திர நடிகராக அடையாளப்படுத்தியது.
அவர் கடைசி காலத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விசேஷம்’, ‘லெஜண்ட்’ ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அவரது கடைசி படமான ‘உடன்பால்’ ஓடிடியில் வெளியானது. கடந்த 16-ம் தேதி ‘விளம்பரம்’ என்ற குறும்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார் மயில்சாமி. நேற்று முன் தினம் ‘கிளாஸ்மேட்ஸ்’ என்ற படத்துக்காக அவர் பேசியதுதான் கடைசி டப்பிங் பணியாகும்.
கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகி பாபு, கருணாஸ் உள்பட அனைத்து நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மயில்சாமி, பல்வேறு டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக தனியாக மிமிக்ரி கேசட் வெளியிட்டவர், மயில்சாமி. பல குரல் மன்னனாக திகழ்ந்த அவர், வடிவேலுவுக்கு ‘கஸ்தூரி மஞ்சள்’ படத்திலும், மணிவண்ணனுக்கு ‘செல்வா’ படத்திலும், தெலுங்கு நடிகர்கள் பிரம்மானந்தம் மற்றும் ஆலிக்கு ‘நியூ’ என்ற படத்திலும், ‘உள்ளம் கொள்ளை போகுதே’ படத்திலும் டப்பிங் பேசியிருந்தார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் மயில்சாமி நடித்திருந்த ‘கண்களால் கைது செய்’ படத்துக்காக, சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளார்.
ஆன்மீகத்தில் பெரும் நாட்டம் கொண்ட மயில்சாமி சிறந்த சிவபக்தராவார். சமூக சேவகராகவும் திகழ்ந்தார். ஜெயலலிதா இருந்தபோது அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிறகு 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கொரோனா லாக் டவுன் காலக்கட்டத்தில் விருகம்பாக்கம் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்தார்.
மயில்சாமியின் மகன்கள் அன்பு, யுவன் ஆகிய இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
மரணமடைந்த மயில்சாமியின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்களும், நடிகர், நடிகைகளும், சினிமா தொழிலாளர்களும், பொதுமக்களும் இன்று காலை முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மரணம் அடைந்த மயில்சாமியின் உடல், வடபழநி ஏவி.எம். சுடுகாட்டில் நாளை காலை தகனம் செய்யப்படுகிறது.












