full screen background image

‘பகாசூரன்’ – சினிமா விமர்சனம்

‘பகாசூரன்’ – சினிமா விமர்சனம்

‘பழைய வண்ணாரப்பேட்டை’,  ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் ஜி.மோகன். இவர் தன்னுடைய ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இந்தப்  படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, நட்டி நட்ராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லயா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே.பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் படத் தொகுப்பு செய்ய,  கலை இயக்குநராக எஸ்.கே., பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

தனது மகளின் மரணத்துக்குக் காரணமானவர்களை ஒரு தந்தை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

இந்தக் கதைக் கருவிற்கு துணையாக மகாபாரதத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். மகாபாரதத்தில் இருக்கும் ‘பகாசூரன்’ என்ற அசுரனின் கதையை மேற்கோள் காட்டித்தான் அந்தப் ‘பகாசூரன்’ என்ற பெயரை, இந்தப் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர்.

மேலும் அந்தத் தந்தை செய்யும் பழி வாங்கல்கள்கூட மகாபாரதத்தில் பீமன் செய்த 3 படுகொலைகளை நினைவுப்படுத்தும் அளவுக்கு அதே பாணியில் நடைபெறுவதாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

கடலூர் அருகே உள்ள தியாகவல்லி  என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வராகவன் ஒரு தீவிரமான சிவ பக்தர். கூத்துக் கட்டும் தொழில் செய்து வந்தவர். திடீரென்று சொந்த ஊரிலிருந்து சேலத்திற்கு வந்து அங்கே ஒரு கோவிலில் தங்கியிருக்கிறார் செல்வராகவன்.  

கிடைக்கின்ற வாய்ப்புகளில் ஏன் எதற்கு எப்படி என்று காரணமே சொல்லப்படாமல் 3 கொலைகளைக் கொடூரமாகச் செய்கிறார் செல்வராகவன்.

முதல் கொலையாக ஒரு மாணவியை தனியிடத்திற்கு அழைத்து வந்து சல்லாபம் செய்யும் ஒரு கல்லூரி ஆசிரியரை, அவரது கால்களை விரித்து படுகொலை செய்கிறார். இந்தக் கொலை மகாபாரதத்தில் பீமன், ஜராசந்தனை கொலை செய்வதை காட்டுகிறதாம்.

அடுத்ததாக தன்னை அழைத்து வீட்டில் சோறு போடும் வீட்டில், அந்தக் குடும்பத் தலைவனை கர்லா கட்டையால் நெஞ்சில் அடித்துக் கொலை செய்கிறார். இது கீசகனை, பீமன் கொலை செய்வதைக் காட்டுகிறதாம்.

மூன்றாவதாக பாலியல் தொழில் புரோக்கராக இருக்கும் ஒரு பெண்ணை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்கிறார். இது அரக்கன் ஜடாசுரனை பீமன் கொலை செய்வதைக் காட்டுகிறதாம்.

மற்றொரு பக்கம் தன்னுடைய அண்ணன் மகளின் தற்கொலைக்கான காரணத்தை தேடி விசாரிக்கத் துவங்குகிறார் முன்னாள் ராணுவ மேஜரான நட்டி நடராஜ். இறுதியில் இவர்கள் இருவரும் ஓரிடத்தில் சந்திக்க வேண்டி வருகிறது.

அந்தச் சந்திப்பு ஏன்..? எதனால்..? இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு..?செல்வராகவனின் கதி என்னவானது..? நட்டி நட்ராஜின் அண்ணன் மகள் மரணத்திற்கு என்ன காரணம்..? போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

தெருக் கூத்து கலைஞராக ‘பீம ராசு’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் ஒரு அப்பாவி கிராமத்து அப்பாவாக வாழ்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். சாய்ந்த தலையுடன், மெல்லிய நடுக்கத்துடன் கூர்ந்து கவனிக்கத்தக்க உடல் மொழியுடன் அனைத்து வகையான நடிப்புகளையும் செவ்வனே வெளிப்படுத்தியிருக்கிறார் செல்வராகவன்.

மகள்-அப்பா இடையேயான பாசம், மகளின் சாவுக்காக பழி வாங்க துடிக்கும் துடிப்பு, கூத்துக் கலையில் பீமன் வேடமிட்டு அவர் ஆடும் நடனம், பழி வாங்கும் தருணத்தில் அமைதியின் திருவுருவாய் காட்சியளிக்கும் செல்வராகவனின் நடிப்பில் குறையே இல்லை. ஒரு வித்தியாசமான நடிப்பை சினிமா ரசிகர்கள் அவரிடத்தில் காண்கிறார்கள். சிவன் பாடலுக்கான காட்சியில் உடல் அதிர அவர் ஆடும் ஆட்டமும் அனைவரையும் கவர்கிறது.

க்ரைம் சம்பந்தமான கதைகளைப் பேசும் யூ டியூபராக நட்டி நட்ராஜ் நடித்திருக்கிறார். இந்தக் குற்றவுலகில் தனது அண்ணன் மகளும் சிக்கிவிட்டதை அறிந்து வேதனைப்பட்டு அந்த மரணத்திற்கான காரணத்தைத் தேடத் துவங்கும்போதுதான் படமும் இன்னொரு பக்கம் நகர்கிறது. தனது பதட்டத்தை, பரிதவிப்பை காண்பிக்கும் இடங்களிலெல்லாம் நமக்கும் ஒரு ஆர்வத்தையும், பதட்டத்தையும் உண்டு பண்ணுகிறது.

செல்வராகவனின் மகளாக நடித்திருக்கும் ரிச்சா ஒரு பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார். “நான் தப்பு பண்ணிட்டேம்பா…” என்று சொல்லி அழும் காட்சியில் பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார். அப்பா-மகள் பாசக் காட்சிகளும் நமக்கும் அந்த உணர்வைத் தூண்டுகின்றன.

செல்வராகவனின் தந்தையாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ராஜனும், கல்வி தந்தையாக நடித்திருக்கும் ராதாரவியும் அந்தந்த கேரக்டர்களுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். ராதாரவியின் கிண்டல் பேச்சும், ஸ்டைல் நடிப்பும் வயசானாலும் இன்னமும் ராதாரவியின் ஸ்டைல் போகவில்லை என்பதைக் காட்டியிருக்கிறது.

விபச்சார புரோக்கர்களாக நடித்திருக்கும் கூல் ஜெயந்தும், லயாவும் ஒரு கவன ஈர்ப்பு செய்யும்விதத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். அதிலும் லயாவின் நடிப்பும், கேரக்டரும் நிச்சயமாக அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தரும். மன்சூர் அலிகானும், ரிஷாவும் கதையை நகர்த்த வேண்டி வந்த திரைக்கதையில் ஒரு பாட்டுக்கு நடனமாடி நடித்துள்ளனர். 

படத்தின் துவக்கத்திலேயே சாம் சி.எஸ்.ஸின் இசை மிரட்டுகிறது. சில காட்சிகளில் கொஞ்சம்கூட திரையிலிருந்து நம் கண்களை அகல விடாமல் செய்திருக்கிறது. ரிஷா ஆடும் குத்துப் பாடலின் இசையும், நடனமும் சிறப்பு.

பருக் கே.பாட்ஷாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஒரு பலமாகக் கிடைத்துள்ளது. கேமிரா கோணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சிறப்பான இயக்கத்தினால் இதை உணர முடிகிறது.

சண்டை இயக்குநருக்கு ஒரு பாராட்டு. சண்டை காட்சிகளை, கொலைக் காட்சிகளை கொடூரம் என்று நம் மனதில் பதியும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார். அதிலும் முதல் கொலை படுகொலையாகும்.

அப்பாவி பெண்கள் எப்படி பாலியல் வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள்..? பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஏன் கண்காணிக்க வேண்டும்..? செல்போன் என்ற ‘பகாசூரனை’ப் பற்றி பெற்றோர்கள் மட்டுமில்லாமல் அதனைப் பயன்படுத்தும் இளைய சமூகத்தினரும் உணர வேண்டும் என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறது என்றாலும் சொல்லியவிதம் முற்றிலும் தவறு.

இந்தப் படம் ஒரு கொலைக்கு பதிலடியாக நீங்களும்  ஒரு கொலையைச் செய்யுங்கள் என்கிறது. செல்வராகவன் செய்யும் கொலைகளுக்கு எந்தவிதத்திலும் அக்மார்க் முத்திரை குத்தி “சரி” என்று சொல்ல முடியாது.

எந்தவொரு குற்றத்திற்கும் மக்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தண்டனை தருவதென்பது மக்களின் உணர்ச்சிவசத்தில் சரியாகத்தான் தெரியும். ஆனால் ஜனநாயகப்படி, தார்மீகப்படி தவறு.

இறுதியில் செல்வராகவன் சட்டத்திடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருந்தால்கூட இதுவொரு வகையில் தீவிர பாசக்கார தந்தையின் வெளிப்பாடு என்பதை ஒப்புக் கொண்டிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் செல்வராகவன் தப்பித்த நிலையில் இருப்பதாகக் காட்டியிருப்பது படம் சொல்ல வந்த விஷயத்தை பின்னோக்கித் தள்ளியிருக்கிறது.

அதிலும் கொடூரமான முறையில் நடந்த கொலைகளைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் காட்டியிருப்பது பெருத்த லாஜிக் மிஸ்டேக்.  அது பற்றிய விசாரணையைக் கூட காட்டாமல் இருப்பது திரைக்கதையை இயக்குநர் ரொம்பவே தன் வசதிக்காக திசை திருப்பியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

இன்னொரு பக்கம்.. “பெண்களை எப்பாடுபட்டாவது படிக்க வையுங்கள்” என்று பலரும் சொல்லி வரும் நேரத்தில், படத்தில் இடம் பெறும் “சென்னை பாண்டிச்சேரியெல்லாம் வேண்டாம்மா. அங்கெல்லாம் ஜனங்க வெள்ளைக்காரங்க மாதிரி ஆகிட்டாங்க. பெரம்பலூர்லயே படிம்மா…”, “ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியதுதானே…?” போன்ற வசனங்கள் பெண்கள் படிக்கும் சூழலுக்கு எதிர்ப்பான குரலாகவே ஒலிக்கின்றன.

“எங்கே சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை எதிர்த்து பெண்களால் எதையும் செய்ய முடியாது. நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்ற மறைமுகமான ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் இந்த வசனங்களை நாம் அணுக வேண்டியிருக்கிறது.

இன்னொரு பக்கம் தன் காதலன் முத்தம் கேட்டு அத்தருணத்தை வீடியோவாக்கி வைத்து மிரட்டுபவர்களிடத்தில் “சரி.. போட்டுக்கோ.. பரப்புரை செஞ்சுக்கோ…” என்று தைரியமாகச் சொல்லிவிட்டு வராமல் அதற்கு உடன்பட்டு படுக்கைவரையிலும் கடைசிக் கட்டத்தில் செல்லும் நாயகியின் கேரக்டர் ஸ்கெட்ச், படம் பார்க்கும் இளம் பெண்களுக்கு தவறான வழிகாட்டுதலாகவே தோன்றுகிறது.

ஆனால் அதே சமயம் செல்வாக்கு படைத்த, பண பலம் படைத்த குற்றவாளிகளை தண்டிப்பதில் காவல் துறையும், நீதித்துறையும் காட்டும் அலட்சியப் போக்கையும் இந்தப் படம் சுட்டிக் காட்டியிருப்பது உண்மைதான்.

தற்போதைய ஆண்ட்ராய்டு புலன் வழி உலகத்தில் குறுகிய காலத்தில் பெரும் பணம் குவிப்பதற்காக பல பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் விதத்தில் சமீபத்தில் அதிவேகமாக பரவலாகி வரும் இணைய வழி விபச்சாரம் குறித்தும், இந்தப் படுகுழியில் அப்பாவிப் பெண்கள் அறியாமல் விழுவது பற்றியும் சரியான விதத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

அப்போ ஜி.மோகனின் இந்தப் படத்தில் அரசியலே இல்லையா என்ற கேள்விக்கு “அரசியல் களம் இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் மறைமுகமாக..” என்று சொல்லலாம்.

முதலில் செல்வராகவன் கலைக் கூத்தாடி வம்சத்தைச் சேர்ந்தவர் என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சே தனது முந்தைய 2 படங்களின் மூலமாகத் தனக்குக் கிடைத்திருக்கும் ‘வன்னியர் குல திருமகன்’ என்ற பெயரை உடைத்து தான் அனைவருக்கும் பொதுவானவன் என்பதைக் காட்டுவதற்காகத்தான் இயக்குநர் ஜி.மோகன் செய்திருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இன்னொன்றாக இந்தப் படத்தில் ராதாரவியின் நடிப்பில் காட்டப்பட்டிருக்கும் கல்லூரியின் தாளாளர் கதாப்பாத்திரம் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவரான பச்சமுத்துவையே காட்டுகிறது என்பதும் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது.

ஏனெனில் சமீப மாதங்களில் பச்சமுத்து சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ காட்சி இணையத்தில் தீவிரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. தாளாளர் வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவியும், நாயகியும் சம்பந்தப்பட்ட படுக்கையறை காட்சி, அந்த பச்சமுத்துவின் வீடியோ காட்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

இயக்குநர் ஜி.மோகனின் மானசீகத் தலைவரான ‘பாட்டாளி மக்கள் கட்சி’யின் நிறுவனர் ராமதாஸூக்கும், பச்சமுத்துவுக்கும் தற்போது ஏழாம் பொருத்தம். ராமதாஸின் குடைச்சல்களைத் தாங்க முடியாமல்தான் பச்சமுத்து ‘இந்திய ஜனநாயகக் கட்சி’ என்ற பெயரில் கட்சியையே துவக்கினார் என்பது தமிழக அரசியல் தெரிந்தவர்கள் அறிந்த உண்மைதான்.

இயக்குநர் ஜி.மோகன் மறைமுகமாக இந்த அரசியல்களை தனது திரைக்கதையில் நைச்சியமாகப் புகுத்தியிருக்கும் திறமையைப் பார்க்கும்போது அவருக்குள்ளும் ஒரு பக்கவான அரசியல் வியாதி ஒளிந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது..! வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!

 RATING : 3.5 / 5

Our Score