சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கடைசியாக இயக்கியிருக்கும் ‘லாபம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் நிச்சயமாக வெளியாகும் என்று அந்தப் படக் குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், விஜய் சேதுபதி புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கின்றன.
நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனியல், சாய் தன்ஷிகா என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இமான் இசை அமைத்துள்ள இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன்.
உணவு அரசியலும், கல கல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில், பல புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது.
சில வருட இடைவெளிக்குப் பிறகு ஜனநாதன் இயக்கியிருக்கும் திரைப்படம் இது என்பதால் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவால் இயக்குநர் ஜனநாதன் மரமணடைந்தது அந்தப் படக் குழுவினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
படத்தின் படத் தொகுப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த இந்தச் சூழலில் ஜனநாதனின் மரணம் நிகழ்ந்துள்ளதால் படம் பற்றிய விசாரணைகள் தமிழ்த் திரையுலகத்தில் தொடர்ந்து நடந்தன.
இது குறித்து தற்போது அந்தப் படத்தைத் தயாரித்து வரும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக் கூடியவை.
‘லாபம்’ படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த தருணத்தில் ஜனநாதன் மறைந்தது எங்களுக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கிறது. ‘லாபம்’ படத்தின் அனைத்து வேலைகளையும் முழுமையாக அவர் முடித்து கொடுத்து விட்டார். மிச்சமிருக்கும் சில பணிகளை எங்கள் படக் குழுவினரே முடித்து வெளியிடவுள்ளோம்.
அனைத்து பணிகளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் பிரமாண்டமாக படம் வெளியாகவுள்ளது” என அறிவித்துள்ளது.