full screen background image

மனிதர்கள் – சினிமா விமர்சனம்

மனிதர்கள் – சினிமா விமர்சனம்

Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மனிதர்கள்”.

இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – இராம் இந்திரா, ஒளிப்பதிவு – அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இசை – அனிலேஷ் எல் மேத்யூ, படத்தொகுப்பு – தின்சா, கலை – மகேந்திரன் பாண்டியன், பாடல் – கார்த்திக் நேத்தா, ஒப்பனை – அ சபரி கிரிசன், துனைத்தயாரிப்பு – தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், நா.யுவராஜ், உதவி இயக்கம் – லோகேஷ் க கண்ணன், சண்டை பயிற்சி – வின் வீரா, ஒளிக்கலவை – ஆனந்த் இராமச்சந்திரன், சப்தம் – சதீஷ், வண்ணம் – வசந்த் செ கார்த்திக், வரைகலை – ஆன்டனி பிரிட்டோ, விளம்பர வடிவமைப்பு – ரிவர் சைடு ஹவுஸ். தயாரிப்பு (producers) – இராஜேந்திர பிரசாத், நவீன், மு.கி.சாம்பசிவம். (Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures)  பத்திரிக்கை தொடர்பு – சதீஷ், சிவா (AIM).

ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.

இது நண்பர்களின் உதவியால், கிரவுட் ஃபண்டிங் முயற்சியில் உருவான திரைப்படம்.

மனிதனின் மனம் வித்தியாசமானது, நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக் குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், ரசிகர்கள் ரசிக்கும் திரில்லராக வந்துள்ளது இத்திரைப்படம்.

ஒரு இரவு நேரத்தில் ஆறு நண்பர்கள் ஒன்று சேர்ந்து எங்கோ செல்கிறார்கள். செல்லும் வழியில் அதிகமாக மது அருந்தியதால் அவர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு நண்பன் இறந்து விடுகிறான்.

இறந்து போன நண்பனின் சடலத்தை கார் டிக்கியில் வைத்துக் கொண்டு அதை எப்படியாவது டிஸ்போஸ் செய்துவிடலாம்.. அருகில் இருக்கும் சுடுகாட்டில் எரித்து விடலாம்.. அல்லது எங்கோ கண்காணாத இடத்தில் தூக்கிப்போட்டுவிட்டு போய்விடலாம் என்றெல்லாம் பல்வேறு சிந்தனைகளுடன் பயணிக்கும் ஒரு ஐந்து பேர் கொண்ட நண்பர்கள் குழுவின் தொடர் கதைதான் இந்த ‘மனிதர்கள்’ என்ற படம்.

கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் கபில் வேலவன், அர்ஜுன் தேவ், சரவணன், தர்ஷா சாம்பசிவம், குணவந்தன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இதில் இவர்களுடைய கதாபாத்திர பெயர்களும் படத்தில் மின்னல் வேகத்தில் வந்து வந்து சென்று கொண்டிருப்பதால் எந்த நடிகர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதே நம் மனதில் முதலில் ஒட்டவில்லை. அதனாலேயே இந்த படத்தின் நடிகர்களை தனித்தனியாக நம்மால் பாராட்ட முடியவில்லை. சொல்லவும் முடியவில்லை.

இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கி செல்லும் கபில் வேலவன் என்ற அந்த நடிகர்தான் மிகவும் கச்சிதமாக ஒரு தலைமை பண்புக்கு உரியவனாக.. அவர்களை எல்லாம் அடக்கி ஆளும் மனிதனாக… எப்படியாவது பிரச்சனைகள் இருந்து வெளியில் வரவேண்டும் என்று சொல்லக் கூடிய ஒருவனாக.. ஒரு பதட்டத்தை ஏற்படுத்தும் ஒரு மனிதனாக நடித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் சதா அழுது கொண்டே இருக்கும் நடிகரும் கடைசி வரையிலும் ஒரு வித்தியாசமான ஒரு நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

ஓட்டுனராக நடித்தவர் எப்போது பதட்டத்திலேயே இருப்பதும் பின்னால் அமர்ந்திருக்கும் ஒருவர் சந்தேகத்துடன் எப்போது போலீசில் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருப்பதையே சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பதும்… இவர்களை சமாதானப்படுத்துவதற்கு மூன்றாவது நபராக ஒருவர் இருப்பதும்.. இப்படியே இந்தப் படத்தின் திரைக்கதையை இந்த நான்கு பேரை வைத்தே நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.

6 பேர்தான். அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். இப்போது ஐந்து பேர்தான் காருக்குள் அமர்ந்திருக்கிறார்கள். இரவு நேரம் கார் பயணம். சாலை பயணம். இரவு நேர விளக்குகள். சுடுகாடு… அந்த இரவிலும் ஏற்படும் டிராபிக் ஜாம்.. இரவு நேரத்தில் நடக்கும் அந்த போராட்டக் களத்தை தன்னுடைய கேமராவினால் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரகாம் ஜார்ஜை மனதார பாராட்ட வேண்டும்.

காருக்குள்ளேயோ அல்லது காரைத் தொட்டோ அல்லது காருக்கு வெளியிலயோ சூட் செய்வது என்பது மிக மிக கடினமான ஒரு விஷயம். கிட்டத்தட்ட காருக்கு வெளியே தொங்கிக் கொண்டே போக வேண்டிய நிலைமை ஒளிப்பதிவாளருக்கு இருக்கும்.

அப்படி ஒரு சூழலில் இந்தப் படத்தின் முக்கால்வாசி காட்சிகளை காருக்குள்ளேயே வைத்து படமாக்கி இருக்கும் அந்த ஒளிப்பதிவாளர் கார் வெளிச்சம், இயற்கையான இரவு நேர நிலவு வெளிச்சம், அவ்வப்பொழுது வரும் எதிரில் கார்களின் வெளிச்சம்… இவைகளை வைத்து நடிகர், நடிகைகளின் நடிப்பையும் பதிவாக்கி நமக்கு கண் முன்னே காட்டி இருக்கிறார். அந்த வகையில் இந்த ஒளிப்பதிவாளர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்தான்.

இசையமைப்பாளர் அனிலேஷ் எல்.மேத்யூ இசையில் இரண்டு பாடல்கள் அவ்வப்போது ஒலித்தாலும் அதுவும் மாண்டேஜ் காட்சிகளாகவே நகருகின்றன. ஆனால், பின்னணி இசை படத்தில் நடித்தவர்களின் பய உணர்வு, அவர்களின் பதட்டம், கோபம், இயலாமை என்று அத்தனை நடிப்புக்கும் ஏற்ற வகையில் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது.

படத்தை எழுதி இயக்கி இருக்கும் அறிமுக இயக்குநரான ராம் இந்திரா ஒரு குறும் படமாக எடுக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை நெடும் படமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

இதில் க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர், ஜார்னராக இருந்தாலும் அதையே ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் சொல்ல முயற்சித்து இருக்கிறார். ஆனால், அது அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை.

ஒரே இரவில் நடக்கும் கதையையும் தாண்டி ஐந்தே கதாபாத்திரங்கள் படம் முழுவதும் பேசிக் கொண்டே வருவதும், பதட்டமாகிக் கொண்டே வருவதும், அழுது கொண்டே வருவதுமாக திரைக்கதை நகர்வது மிகவும் போர் அடித்து விட்டது.

இந்தப் படத்தின் திரைக்கதையை இன்னமும் கொஞ்சம் சுவாரசியமாக சாலை போக்குவரத்தில் இருந்து மாற்றி அமைத்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் இயக்குநர் இப்படித்தான் எடுக்க முடியும் என்று சொல்லி எடுத்து இருப்பதால் நம்மால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

மனிதர்கள் பலவிதம்.. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குண நலன்கள் இருக்கும். அவருடைய அந்த குணநலன்களை வெளிப்படுத்துவதுதான் இந்தப் படத்தின் அடிப்படை கரு.

ஆனால் அதை வெளிப்படுத்தும்போது, திரையில் காட்டும்போது அதற்கான முழு வசதி வாய்ப்புகளுடன் கொடுக்கப்பட வேண்டும். அந்த வசதி வாய்ப்புகள் இந்த இரவு நேர பயணத்தில் இல்லை என்பதால் இந்தப் படம் முகம் தெரியாத மனிதர்களை மட்டுமே நமக்கு அடையாளம் காட்டி இருக்கிறது.

RATING : 2.5 / 5

Our Score