இந்தியாவில் எந்தவொரு மாநில திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் வராத தைரியம், மலையாள தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்துவிட்டது.
இன்று நடந்த அந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் சார்பாக புதிதாக தொலைக்காட்சி சேனலை துவக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டார்களாம்..
இது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய தயாரிப்பாளரும், இயக்குநருமான வினயன்.. “இன்றைக்கு இருக்கின்ற அனைத்து தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களை தினமும் ஒளிபரப்புகிறார்கள். இதில் கிடைக்கும் வருவாய் முழுவதும் டிவிகாரர்களுக்கே செல்கிறது. தயாரிப்பாளர்களுக்கு பத்து பைசா கிடைப்பதில்லை.
ஒரே திரைப்படத்தின் காட்சிகளை கொஞ்சம், கொஞ்சமா கட் செய்து பலவித டைட்டில்களில் ஒளிபரப்புகிறார்கள். விளம்பரத்திற்காக நாங்கள் கொடுத்த பாடல் காட்சிகளை பல ஆண்டுகளாக ஒளிபரப்பி வருகிறார்கள். ஆனால் இதனால் அப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு சல்லிக்காசுகூட பிரயோசனமில்லை.
இந்த நிலையை மாற்ற தயாரிப்பாளர்கள் சார்பிலேயே தனியாக ஒரு சேனலை துவக்கப் போகிறோம். அதற்கான பூர்வாங்க அனுமதியை சங்கத்தின் பொதுக்குழு அளித்துவிட்டது. இந்த சேனலின் மூலமாக தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை இதில் ஒளிபரப்பி இதன் மூலம் கிடைக்கும் லாபம் முறையாக அவர்களைச் சென்றடையும்.. இதனால் அனைத்துத் தயாரிப்பாளர்களும் பலன் பெறுவார்கள்.. இதற்காகத்தான் இந்தத் திட்டம்..” என்றார்.
நல்ல திட்டம்தான்.. இதையே தமிழ்நாட்டிலும் தொடங்கினால் தயாரிப்பாளர்களுக்கு லாபம்தான்.. ஆனால் இங்கேதான் சங்கத்துக்குள்ளேயே காலை வாருபவர்களும், சேனல்களுக்கு வால் பிடிக்கும் துரோகிகளும் இருக்கிறார்களே.. எப்படி முடியும்..?