full screen background image

மொசக்குட்டி – திரை முன்னோட்டம்

மொசக்குட்டி – திரை முன்னோட்டம்

மெகா ஹிட் படமான ‘மைனா’ மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘சாட்டை’  போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் அடுத்த படம்தான் இந்த ‘மொசக்குட்டி.’

இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஜோ மல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், ‘யார்’ கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்து ரவி, பிரேம்  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  சுகுமார் (இவர் ‘மைனா’, ‘கும்கி’ போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர்)

இசை   –  ரமேஷ் விநாயகம்

எடிட்டிங்   –  ஆண்டனி

நடனம்   –  நோபல்

கலை   –   எம். பிரபாகர்

ஸ்டண்ட்    –  சுப்ரீம் சுந்தர்

தயாரிப்பு    –   ஜான்மேக்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்   –   எம்.ஜீவன்

படம் பற்றி இயக்குனர் ஜீவனிடம் கேட்டோம்.

“உப்புதர காசி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பசுபதியிடம் கதை சொன்னோம். கேட்டு முடித்ததும்.. ‘எல்லோரும் கதை நல்லா சொல்றாங்க… ஆனா சொன்ன மாதிரி எடுக்க மாட்டேங்குறாங்க…’ என்று ஒரு சிலரை பற்றி குற்றம் சாட்டினார். என்னையும் அந்த லிஸ்டில் சேர்த்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

முதல் நாள் படப்பிடிப்பு முடிந்தவுடனேயே உதவி இயக்குனர் மாதிரி படத்தில் ஒன்றிப் போய்விட்டார்… ‘என்கிட்ட சொன்னதைவிட, நீங்க நல்லாவே எடுக்குறீங்க’ என்று சொன்னார் அவரது அந்த வார்த்தையை முதல் வெற்றியாக கருதுகிறேன்.

‘சாட்டை’யில் நாங்கள் அறிமுகப்படுத்திய பெண்தானே என்று அலட்சியமாக மகிமாவிடம், ‘மொசக்குட்டியில் நீதான் நாயகி…” என்றோம்… உடனே ‘மொதல்ல கதையை சொல்லுங்க…’ என்றார். நாங்கள் யோசித்தோம். ‘சாட்டை மாதிரி நல்ல படங்களை செலக்ட் பண்ணி நடிக்கணும்னு விருப்பப்படுகிறேன்…’ என்றார். கதையை கேட்டதும் சம்பளம் பற்றிகூட பேசாமல் ஒத்துக்கொண்டார் அது எனக்கு கிடைத்த மூன்றாவது வெற்றி.

எம்.எஸ்.பாஸ்கரிடம் ‘ஆபீஸ் வாங்க.. கதை சொல்றேன். பிறகு காமெடி சீன்கள் பேசிக் கொள்ளலாம்..’ என்றேன். கதையைக் கேட்டுட்டு ‘தம்பி, இந்த கதையை அப்படியே எடுங்க கதைக்குள்ளேயே காமெடி இருக்கு…’ என்று அவரும் நடிக்க ஒத்துக் கொண்டது எனக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி.

இந்த படத்திற்கு என் தம்பி சுகுமாரை கேமிராமேனாகப் போடலாம் என்று தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் கூறினார்.  ‘அவன் அதிக சம்பளம் வாங்குறான்…’ என்றேன். ‘நீங்கள் கூப்பிட்டால் பண்ணுவார்.. கூப்பிடுங்க..’ என்றார். ஜான்மேக்ஸ் சாரே அவரை கூப்பிட்டார். ‘கதையை கேட்டுவிட்டுதான் முடிவை சொல்வேன்’ என்று சொல்லிவிட்டான். அண்ணனாக கோபம் வந்தாலும், ஒரு இயக்குனராக அவன் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. கதையை கேட்டுட்டு ‘படம் பண்றேன்.. சம்பளம் அப்புறம் பேசிக்கலாம்..’ என்றான். அதுவும் எனக்கு கிடைத்த இன்னொரு வெற்றி.

‘விருமாண்டி’ என்னும் மிக பெரிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஜோ மல்லூரி எங்க மதுரை மாவட்டத்துக்காரர். அவர் நடிப்பை பார்த்து வியந்தேன். அவர் ‘நீங்க டைரக்ட் பண்ணும்போது பாரதிராஜா சார்தான் ஞாபகத்துக்கு வர்றார். அவர மாதிரியே சொல்லித் தர்றீங்க.. படம் எடுக்குறீங்க..’ என்றார்.  அவர் சொன்ன வார்த்தை என்னை சிலிர்க்க வைத்தது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டான் இந்த ஜீவன்…’ என்று ஆனந்தம் கொண்டேன்.

சென்றாயனிடம் ஐம்பது நாள் கால்ஷீட் கேட்டேன். ‘இவ்வளவு நாள் கேட்டால் எனக்கு மத்த படங்களோட கால்ஷீட் பிரச்னையாகுமே..?’ என்றார்.   கதையை கேட்டுவிட்டு, ‘எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உங்க கூடவே இருக்கேன்’ என்றார்.

இந்த படத்தின் அழைப்பிதழையும், பாடல்களையும் என் மானசீக குரு பாரதிராஜாவிடம் காட்டினேன்… ‘பிரமாதமா இருக்கு’ என்று பாராட்டினார்   நெகிழ்ந்து போனேன். அதுவும் எனக்கு கிடைத்த வெற்றி.

இன்னும் ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறேன் அது சினிமா ரசிகர்களிடமிருந்து. அதுவும் விரைவில் கிடைக்கும் என்று நன்புகிறேன்…” என்கிறார் இயக்குனர் ஜீவன்.

Our Score