மூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..!!!

மூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..!!!
நேற்று காலை 11.30 மணியளவில் தனது பெருவுடலை தீக்கிரையாக்கி தனது பெருமாளைத் தேடிச் சென்று சரணடைந்துவிட்டார் எனது பாசத்துக்குரிய அண்ணன், தமிழ் சினிமாவின் மூத்தப் பத்திரிகையாளரும், சினிமா மக்கள் தொடர்பாளருமான மேஜர்தாசன்.
பழம்பெரும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் உறவினராக இருந்ததால், அவர்பால் ஈர்க்கப்பட்டு அவரால் சினிமா துறையில் வளர்க்கப்பட்ட காரணத்தினாலேயே அவர் மீதிருந்த பிரியத்தால் ‘தேவாதிராசன்’ என்னும் தனது பெயரை ‘மேஜர்தாசன்’ என்று மாற்றிக் கொண்டார். இந்த அளவுக்கு நன்றியுணர்வு மிக்கவர் இந்த அண்ணன்.
ஆனால், இந்த அண்ணனுக்கு இந்தத் தமிழ்த் திரையுலகம் தனது நன்றியினைத் தெரிவித்ததா.. என்றால் இல்லை..
நன்றி கெட்டவுலகம் சினிமாவுலகம் என்பதற்கு இவருடைய வாழ்க்கையின் கடைசிப் பகுதியும் ஒரு உதாரணம்.
எப்போது போன் செய்தாலும் ‘வாழ்க வளமுடன்’ என்ற வார்த்தைகளுடன்தான் ஆரம்பிப்பார். எப்போதும் சிரித்த முகம். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடைசிவரையிலும் சிரித்தபடியே வலம் வந்தவர்.
திரையுலகத்தின் மூத்த நடிகர்களில் இருந்து இப்போதைய நடிகர்கள்வரையிலும் பலருடனும் நெருங்கிப் பழகியிருந்தாலும் இவரிடத்தில் இருந்து அவர்களைப் பற்றிய ஒரு நெகட்டிவ் செய்தியைக்கூட பெற முடியாது. அந்த அளவுக்கு இரும்பு மனிதர். “அதெல்லாம் வெளில எதுக்கு…” என்னும் தடுப்பாற்றல்தான் அண்ணன் மேஜர்தாசனின் மிகப் பெரிய அடையாளம்.
“அண்ணே.. பின்றீங்கண்ணே.. பின்றீங்கண்ணே.. பிரமாதம்ண்ணே..” என்று தன்னுடைய வயதில் பாதிகூட நிரம்பாத இளைய பத்திரிகையாளர்களிடத்தில்கூட ‘அண்ணன்’ என்று சொல்லி மரியாதை கொடுத்து பழகியவர்.
பார்ப்போருக்கெல்லாம் இளிச்சவாயனாகத் தோன்றினாலும், சிலருக்கு ஜோக்கராகத் தோன்றினாலும் நிஜத்தில் ஹீரோவாகவே இருந்தவர் அண்ணன்.
எத்தனையோ முறை என்னைப் பாராட்டியிருக்கிறார். நான் பதிலுக்கு அவரைத் திட்டியிருக்கிறேன். கண்டு கொள்ளாமல் அடுத்த டாபிக்கிற்கு தாவுவார். “பிழைக்கத் தெரியாத ஆளய்யா நீரு…” என்று கண்டித்தால் சிரித்தபடியே “எல்லாம் பெருமாள் இருக்கான். பார்த்துக்குவான்…” என்பார்.
நாமம் போடாமல் இவரை நான் பார்த்ததில்லை. வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாலை நேரத்தில் தி.நகர், திருப்பதி பெருமாள் கோவிலில் இவரைக் காணலாம். என்னையும் சில நாட்கள் அங்கே அழைத்துச் சென்றிருக்கிறார். “பெருமாளை சேவித்த திருப்தி இருக்கே.. இது போதும் ஸார்.. அடுத்த ஒரு வாரத்துக்கு இது போதும்…” என்பார். இப்படிப்பட்ட ஒரு தீவிர பக்தனுக்கு பெருமாள் இப்படியா சோதனையை கொடுக்க வேண்டும்..?
எத்தனையோ பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதிக் கொடுத்துவிட்டு கொடுத்த காசை வாங்கிக் கொண்டும், பல சமயங்களில் வாங்காமலேயே அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்றும் ஏமாந்த கதையையும் வைத்திருக்கிறார் இவர்.
பல திரை நட்சத்திரங்களுக்காக அவர்கள் சார்பில் இவர் எழுதிய கட்டுரைகள் அவர்களது பெயரில் பல பத்திரிகைகளில் வலம் வந்தன. அத்தனைக்கும் எழுத்துப்பூர்வமான காப்பிகளை இவர் வைத்திருக்கிறார். ஆனால் ஒன்றைக்கூட இதுவரையிலும் வெளியில் காட்டியதில்லை.
இவரது உழைப்பு சுரண்டப்பட்டது என்பதில் ஐயமில்லை. இவரால் பலனடைந்த, பேட்டிகளின் மூலம் புகழடைந்த நட்சத்திரங்கள் கடைசியில் சின்ன மீனைக் கொடுத்துவிட்டு ஒரு வாரத்திற்கு பசியாற்றிக் கொள் என்பதைப் போல கை கழுவிவிட்டனர். கடைசிக் காலத்தில் இது பற்றி தனிமையில் புழுங்கிக் கொண்டிருந்தார் அண்ணன்.
1500 கோடிகள் வருடந்தோறும் புழங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகில் இந்த மனிதரின் மருத்துவச் செலவுக்கான ஒரு சில லட்சங்களை மொத்தமாக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கான ஒரு நல்ல மனிதர்கூட இல்லாதது அவரது துரதிருஷ்டம்.
இப்போதைய பத்திரிகையாளர்களுக்கு ஒரு நல்ல பாடமாகவும் அமைந்திருக்கிறது அண்ணன் மேஜர்தாசனின் மரணம்.
எத்தனை, எத்தனை இழப்புகள் வந்தபோதும் சிரித்தே அதைக் கடந்து போய் என்னை ஆச்சரியப்படுத்தினார்.
முடங்கிப் போய் மூலையில் கிடந்த பத்திரிகையாளர் சங்கத்தைத் தட்டியெழுப்பி அதை மீண்டும் செப்பனிட்டு அழகாகக் கொண்டு வந்து, சீரும், சிறப்பமாக நடத்தி விழா எடுத்தே கொண்டாடியவர் இவர்.
இவருக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத ஒரு பிரச்சினையில் இவரையே பலிகடாவாக்கி கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக இவரை அதே சங்கத்தில் இருந்து வெளியேற்றியபோதும் அதே புன்சிரிப்போடு சந்திரா பவனில் காபி வாங்கிக் கொடுத்துவிட்டு அந்தக் கதையை கேஷூவலாகக் கூறியவர் இவர்.
எத்தனை மணி நேர உடல் உழைப்புகளை அவர் அந்தச் சங்கத்திற்காகக கொடுத்திருக்கிறார் என்பதை இப்போது நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது.
விதியின் விளையாட்டோ.. அல்லது அவர் வாங்கி வந்த வரமோ.. தெரியவில்லை.. ஒரே ஆண்டில் இரண்டு விபத்துக்களில் சிக்கி கால்களில் அடிபட்டு நடக்க முடியாமல் தடுமாறி.. வாழ்க்கையோட்டத்திலும் தடுமாறி.. வேலை பார்த்த பத்திரிகையில் இருந்து சல்லிக்காசுகூட வராத சூழலிலும் சிரித்தபடியே “என்ன செய்றது…?” என்று கேட்டவரை நானும் “என்ன செய்யறது…” என்றபடியேதான் பார்த்தேன்.
மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஒரு காலை நேரம் எனது இல்லத்திற்கு வந்து இணையத்தில் ஒரு செய்தி பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது அவருக்கு கேரளாவில் இருந்து ஒரு அழைப்பு.. அழைத்தவர் மூத்த நடிகை திருமதி கே.ஆர்.விஜயா. அன்று காலையில் தனது கணவர் இறந்துவிட்டார் என்றும் அந்தச் செய்தியை அனைவருக்கும் சொல்லிவிடுங்கள் என்றார் விஜயாம்மா. பதட்டத்துடன் வந்த வேலையைவிட்டுவிட்டு இந்தச் செய்தியை உலகம் முழுக்க கொண்டு போகும் வேலையில் மூழ்கிய மேஜர்… வந்த வேலையை மறந்துவிட்டுப் போனார்.
100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி, ஒரு பத்திரிகையாளராகவும் வலம் வந்திருக்கும் அண்ணன் மேஜர்தாசன் எழுதியிருக்கும் ‘திரைச்சுவைகள்’ என்னும் புத்தகமும் ‘பொக்கிஷம்’ என்னும் புத்தகமும் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றைச் சொல்லும் ஆவணங்கள்..!
“இன்னும் அடுத்தடுத்த பாகங்களைத் தொகுத்து வருகிறேன்…” என்று சொல்லியிருந்தார். அதற்குள் காலன் முந்திக் கொண்டான்.
சமீப காலமாக தன்னுடைய யூ டியூப் சேனலில் வித்தியாசமான முறையில் பாடி லாங்குவேஜில், மாடுலேஷனில் சினிமா செய்திகளை வழங்கி செய்தியாளர்கள் மட்டத்தில் தனது இடத்தைக் கச்சிதமாகப் பிடித்து வைத்திருந்தார்.
பிரஸ் ஷோக்களிலும், நிகழ்ச்சிகளிலும் சந்திக்கும்போதெல்லாம் “அண்ணே..” என்று ஆர்வத்துடன் ஓடி வந்து கை குலுக்கும் ஒரு அண்ணனை ஒட்டு மொத்த தமிழ்ச் சினிமா பத்திரிகையுலகமே இழந்துவிட்டது.
ஒருபுறம் என் மீது அளப்பரிய பற்றுக் கொண்ட.. என் உடன் பிறவா அண்ணன் ஒருவரை இழந்திருக்கிறேன்.
இன்னொருபுறம் அவருக்குண்டான நோய்களைப் பார்க்கும்போது அவர் இப்போதைக்கு விடைபெற்றதுகூட சரியானதுதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
போகும்போதும் தனது கண்களை தானம் செய்து கொஞ்சம் புண்ணியத்தைச் சம்பாதித்துவிட்டுப் போயிருக்கிறார் மேஜர் அண்ணன்.
அவருடைய குடும்பத்திற்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால் இவர் சேர்த்து வைத்த புண்ணியங்களெல்லாம் அந்தக் குடும்பத்தை இனிமேல் காப்பாற்றும் என்று நம்பிக்கையோடு என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.
Our Score