full screen background image

“கடைசி 40 நிமிடங்கள்தான் படமே..!” – பீதியைக் கிளப்பும் மகாபலிபுரம் திரைப்படம்..!

“கடைசி 40 நிமிடங்கள்தான் படமே..!” – பீதியைக் கிளப்பும் மகாபலிபுரம் திரைப்படம்..!

கிளாப் போர்டு மூவீஸ் சார்பில் விநாயக் தயாரிக்கும் படம் மகாபலிபுரம். இதில் இவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவியாளராக இருந்த டான் சாண்டி இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

‘சூது கவ்வும்’ கர்ணா, ‘நேரம்’ படத்தின் ரமேஷ், ‘பட்டத்து யானை’ படத்தில் நடித்த கார்த்திக், ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்த வெற்றி… இவர்கள்தான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விருத்திகா, அங்கனா ராய் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். ‘முகமூடி’, ‘யுத்தம் செய்’ படங்களுக்கு இசையமைத்த கே இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். எல்.வி. தாம்சன் படத் தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சந்திரன்.

இந்தப் படம் டைட்டிலுக்கேற்றாற்போல் முழுக்க முழுக்க மகாபலிபுரத்திலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் கதையும் மகாபலிபுரத்தின் கலாச்சாரத்தை மையப்படுத்தியே உள்ளதாம்..

மகாபலிபுரம் இன்றைக்கு ஒரு சுற்றுலா தளமாக இருந்தாலும் அந்த ஊரைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் உண்டு.. விவசாயிகள் உண்டு.. பல்வேறு தரப்பினரும் அந்த ஊரில் வசித்து வருகிறார்கள். அது ஒரு கலவையான சமூகத்தையும், கலாச்சாரத்தையும் கொண்டது.. அங்கேயுள்ள கிராமத்து பெண்மணிகூட தனது குழந்தைக்கு ஆங்கிலத்தில் பேசி சோறு ஊட்டுவார். விவசாயிகள் வேலை இல்லாத காலங்களில் சுற்றுலாவுக்காக ஊருக்கு வரும் வெள்ளைக்காரர்களுக்கு கைடு வேலை செய்வார்கள்.. “இப்படியொரு சிச்சுவேஷனை கொண்டுள்ள மகாபலிபுரம்தான் இந்தப் படத்தின் களம்…” என்றார் இயக்குநர் டான் சாண்டி.

“இந்தியா முழுக்க இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னையை இதுல சொல்லி இருக்கேன். மகாபலிபுரத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களைப் பற்றிய கதைதான் இது. அங்கே வரும் வெள்ளைக்காரகள் பெண்கள்… அவர்களோடு இவர்களுக்கு ஏற்படும் பழக்க வழக்கங்கள், கலாச்சாரக் கலப்புகள் எல்லாத்தையும் சொல்லியிருக்கோம். ஒரு நிலைவரைக்கும் ஜாலியா போற இவங்க வாழ்க்கையில இன்டர்வல் சமயத்துல ஒரு சம்பவம் நடக்குது. அதுல இருந்து நிலைமை மாறுது. படத்தின் கடைசி 40 நிமிடங்கள்தான் படமே.. நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு புதிய விஷயத்தை அதில் சொல்லியிருக்கிறேன்…” என்கிறார் இயக்குநர்.

“மகாபலிபுரம் என்றாலே.. கேளிக்கை விடுதிகள்.. மதுபான பார்கள்.. பாலியல் தொழில், வேற்று நாட்டவரின் ஓரினச் சேர்க்கை விஷயம்.. இவைகள்தான் பட்டென்று ஞாபகத்திற்கு வரும். இவைகளும் உண்டு. ஆனால் இதையும் மீறிய ஒரு விஷயம்.. உங்களுக்கு புதிய விஷயம்.. படத்தில் உண்டு.. அது சஸ்பென்ஸ்..” என்கிறார் இயக்குநர்.

அது சரி.. இப்படியெல்லாம் சஸ்பென்ஸ்.. சஸ்பென்ஸ்.. என்று சொல்லி வெளியான படங்களெல்லாம் கடைசீல என்ன ஆச்சுன்னு எங்களுக்குத்தான தெரியும்..? ஏகத்துக்கும் ஹிப் ஏத்தாதீங்கப்பா.. கடைசில இதுக்கா இத்தனை பில்டப்பு என்று சொல்லி படம் நல்லாயிருந்தாலும் ஏமாற்றத்துல புஸ்ஸுன்னு சொல்லிருவாங்க..!

Our Score