நடிகை ஹன்ஸிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மஹா’ திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே ரிலீஸுக்குத் தயாராக இருந்தாலும் சூழல் காரணமாக இன்னமும் வெளியாகாமல் உள்ளது. இப்போது ஓடிடியில் அந்தப் படத்தை வெளியிடலாமா என்று தயாரிப்பாளர் தரப்பு யோசித்து வருகிறது.
இந்த நேரத்தில் இந்தப் படத்தின் இயக்குநரான யு.ஆர்.ஜமீல் தயாரிப்பாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “இந்தப் படத்தை இயக்குவதற்காக எனக்கு 24 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. ஆனால், இதுவரையிலும் எனக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளதால், இன்னமும் 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பாக்கியாக தர வேண்டியிருக்கிறது.
மேலும், இந்தப் படத்தின் ஒரிஜினல் கதாசிரியரான எனக்கே தெரியாமல் கதைகளில் மாற்றம் செய்து உதவி இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள். இதனால் எனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதுவரையிலும் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும்..” என்று இயக்குநர் ஜமீல் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த மனுவுக்கு மே 19-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர், படத்தின் உதவி இயக்குநர், படத் தொகுப்பாளர் மூவருக்கும் உத்தரவு பிறப்பித்து வழக்கையும் தள்ளி வைத்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலும் மற்றவர்கள் தரப்பிலும் அவரவர் தரப்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இப்போது விசாரணையை மீண்டும் வரும் ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
“இந்த ‘மஹா’ திரைப்படத்திற்கு எதிராக தடையுத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதற்கும் அது பற்றி பேசுவதற்கும் தங்களுக்கு சிறிது கால அவகாசம் வேண்டும்” என்று தயாரிப்பாளர் தரப்பு, இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.