‘வாலு’, ‘ஸ்கெட்ச்’, ‘சங்கத் தமிழன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநரான விஜய்சந்தர் தனது ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம்தான் இந்த ‘கார்டியன்’.
இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம் C.S., மிரட்டலான இசையை அமைத்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக K.A.சக்திவேல் மற்றும் படத் தொகுப்பாளராக M.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவரான ‘லால்குடி’ N.இளையராஜா, இப்படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
சண்டைப் பயிற்சியாளராக ‘டான்’ அசோக் பணியாற்றிருக்கிறார். விவேகா, சாம் C.S., உமாதேவி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ஆடை வடிவமைப்பாளராக அர்ச்சா மேத்தா பணியாற்றி இருக்கிறார். S.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு மேலாளராகவும், நவீன் பிரபாகர் நிர்வாக தயாரிப்பாளராகவும், விஜய் பிரதீப், ஸ்டாலின் ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
சிறு வயதில் இருந்தே “அதிர்ஷ்டம் இல்லாதவர்” என்கிற அவப் பெயருடன் வாழ்ந்து வருகிறார் ‘அபர்ணா’ என்ற ஹன்சிகா மோத்வானி. Interior Designing படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு செல்கிறார்.
அங்கே வேலைக்குப் போகும் இடத்தில் ஹன்சிகாவுக்கு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு ஒரு பெண் பேயை அடக்கி வைத்திருந்த மந்திரக் கல் மீது ஹன்சிகாவின் ரத்தத் துளிகள் படுகிறது. இதனால் அந்தப் பேய் உயிர் பெறுகிறது. அதோடு அந்தக் கல் வித்தியாசமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதால் ஹன்சிகா அதைத் தனது வீட்டிற்கு எடுத்து வந்து வைத்துக் கொள்கிறார்.
இதற்குப் பிறகு ஹன்சிகாவின் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அவர் என்ன நினைத்தாலும் நடக்கிறது. இதேபோல் யாரையாவது “செத்துப் போகட்டும்” என்று சொன்னால்கூட அந்த நபர் இறந்து போகிறார். அலுவலகத்தில் ஹன்சிகாவின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் முதலாளியும் ஹன்சிகாவின் கோபமான சாப வார்த்தையால் மரணம் அடைகிறார்.
ஒரு புறம் நல்ல விஷயங்கள் நடந்தாலும், மறுபுறம் இது போன்று தீய சம்பவங்களும் நடப்பதால், தன்னைச் சுற்றி ஏதோ ஒன்று நடப்பதாக நினைத்து மனம் குழம்புகிறார் ஹன்சிகா.
இதற்காக மனவியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீராம் பார்த்தசாரதியை சந்தித்து எல்லா விஷயங்களையும் சொல்கிறார். இந்தக் குழப்பத்தில் வீட்டில் இருக்கும் அந்த மந்திரக் கல்லைக் கீழே தூக்கிப் போட்டு உடைக்கிறார் ஹன்சிகா. அப்போது அந்தக் கல்லில் இதுவரையிலும் அடைக்கப்பட்டிருந்த பேய் விடுபட்டு ஹன்சிகாவின் கண்களுக்கு மட்டும் காட்சி தருகிறது.
தான் மேலும் 4 பேரை கொல்ல இருப்பதாக அந்தப் பேய் ஹன்சிகாவிடம் சொல்கிறது. ஹன்சிகாவுக்கும், அந்தப் பேய்க்கும் என்ன தொடர்பு..? அந்தப் பேய் எதற்காக அந்த 4 பேரை கொல்ல வேண்டும்..? சொன்னது போலவே கொலை செய்ததா..? இந்தப் பேயிடம் இருந்து ஹன்சிகா தப்பித்தாரா..? இல்லையா..? என்பதுதான் மீதி கதை.
படம் ஹன்சிகாவைச் சுற்றியே நகர்கிறது. அவரும் முடிந்தவரை நன்றாகவே நடித்திருக்கிறார். அவருடைய முகத் தோற்றம் மெல்ல, மெல்ல ஆண்ட்டி லெவலுக்குப் போய்க் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் படத்திற்கு இவருடைய ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் சற்று பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது. பேய்த்தனமான காட்சிகளில் மட்டுமே சிரத்தையெடுத்து வேறுவிதமான ஹன்சிகாவைக் காட்டியிருக்கிறார்.
வில்லன்களான சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் வழக்கமான வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள். வில்லத்தனத்துடன் கூடவே மனைவி மீதான பயத்தை ஸ்ரீமன் காட்டுவது கொஞ்சம் நகைக்க வைக்கிறது.
மொட்டை ராஜேந்திரனும், டைகர் கார்டன் தங்கதுரையும் அவ்வப்போது சிரிப்பு காட்ட எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. படத்தின் நாயகனாக டைட்டிலில் இடம் பிடித்திருக்கும் பிரதீப் ராஜன் சில காட்சிகளில் வந்தும், டூயட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஃபிளாஷ் பேக் காட்சியில் வரும் நடிகை தியா மிக அழகாக நடித்துள்ளார். அவருடைய குழந்தையாக நடித்தவரும் சிறப்பாக நடித்துள்ளார்.
சக்திவேலின் ஒளிப்பதிவில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர்த்து, மற்ற காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் வழக்கம் போல் சுமார் ரகம்தான். ஆனால் பின்னணி இசை மட்டுமே தட்டி எழுப்பிவிடுகிறது. ஆனால் அதற்காக இத்தனை இரைச்சலையா கொடுக்க வேண்டும்..? தியாகராஜன் தனது படத் தொகுப்பில் மந்திரவாதிகள் காட்சி, பேய் சம்பந்தமான காட்சிகளை மட்டும் அழகாகத் தொகுத்தளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நாம் ஏற்கனவே பார்த்துப் பார்த்து சலித்துப் போன அதே அரதப் பழசான பேய் கதையை கொண்ட படங்களின் பட்டியலில் இந்தப் படமும் இணைகிறது.
ஒரு அப்பாவிப் பெண்ணை வில்லன்கள் சில காரணங்களுக்காக கொலை செய்ய, அந்த அப்பாவி பெண் எப்படி பேயாக மாறி தன்னை கொலை செய்தவர்களை பழி வாங்கினார் என்பதுதான் பேய்ப் படங்களின் அடிப்படை கரு. இது போன்ற கதைக் கருவை வைத்துதான் இந்தப் படத்தையும் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
முதல் பாதியில் ஓரளவுக்கு சுவாரசியமாகவே கதை நகர்கிறது. ஹன்சிகா நினைப்பதெல்லாம் நடக்கும்போது ஏற்படும் குழப்பங்கள் படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. வழக்கமான பேய்ப் பட காட்சிகளிருந்து வித்தியாசமாக ஒரு கல்லுக்குள் ஆவியை அடக்குவதும், அது ஹன்சிகாவிடம் வந்து சேர்ந்து, விடுபடுவதும் குழப்பமில்லாமல் சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாகப் பேய்ப் படங்களில் முதல் பாதி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு, இரண்டாம் பாதியில் இன்னமும் அதைவிடவும் அதிரிபுதிரியாக இருக்க வேண்டும். ஆனால், இங்குதான் இயக்குநர்கள் கோட்டை விட்டுள்ளார்கள்.
பயமுறுத்தும் அளவுக்கும் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாதது நமக்கு திகில் உணர்வையும் தரவில்லை. கோரமான ஒப்பனையில் வில்லன்கள் நால்வரையும் எதிர்பார்ப்பது போலவே பேய் கொலை செய்வது நமக்கு சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது.
ஆவியின் ஃபிளாஷ்பேக் கதையைக் கேட்டதும், ஹன்சிகா மனமிரங்கி தன் உடலை ஆவிக்கு வாடகைக்குத் தர சம்மதிப்பது வழமையான காட்சியாகிவிட்டது.
ஆவியைக் கல்லில் அடைக்கும் மந்திரவாதி, அந்தக் கல்லை அப்படியேவா விட்டுச் செல்வார்.. ? இந்த லாஜிக்குடனான கேள்விக்கு இயக்குநர் படத்தில் எந்த இடத்திலும் பதில் சொல்லவில்லை.
படத்தில் முதல் பாதியை காட்டிலும், இரண்டாம் பாதி காட்சிகளை ரசிகர்களே சொல்லிவிடலாம் என்னும் அளவுக்கு இருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை.
பேய்ப் படமென்றால் சஸ்பென்ஸூம், திகிலும், பயமுறுத்தலும் ஒன்று சேர இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அந்தப் பேயே தியேட்டர் வாசலில் வந்து நின்று “நான்தான் அந்த ஹன்சிகாவைப் பிடித்த பேய்” என்று சொன்னால்கூட ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்..! இயக்குநர்களுக்கு இது புரிய வேண்டும்..!
கார்டியன் – யாருக்கும் இல்லை என்பதுதான் உண்மை..!
RATING : 2.5 / 5