full screen background image

மகா அவதார் நரசிம்மா – சினிமா விமர்சனம்

மகா அவதார் நரசிம்மா – சினிமா விமர்சனம்

வைணவ கடவுளான பெருமாள் இதுவரையிலும் 9 அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் மூன்றாவது அவதாரமாக வராக அவதாரமும், நான்காவதாக நரசிம்ம அவதாரத்தையும் எடுத்து தர்மத்தை நிலை நாட்டியதாக கதைகள் உண்டு. அந்த கதைகளில் சொல்லப்பட்ட மூன்றாவது, நான்காவது அவதாரங்களை கிராபிக்ஸ் அனிமேஷன் உதவியோடு மிக அழகான ஒரு பக்தி படமாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

காசிபர் முனிவர் மற்றும் திதி ஆகியோரின் மகன்களாக இரண்யகசிபுவும், இரண்யாட்சனும் பிறக்கிறார்கள். இவர்கள் அசுர குலத்தில் பிறந்ததால் அசுரர்களின் குல குருவான சுக்ராச்சாரியாரின் அறிவுரைப்படி பல்வேறு தெய்வங்களின் மூலமாக பல்வேறு வதங்களைப் பெற்று ஈரேழு லோக மக்களையும் துன்புறுத்தி வருகிறார்கள்.

அதிலும் இரண்யாட்சன் பிரம்ம தேவரை நோக்கி கடுமையாக தவம் புரிந்து அளவற்ற ஆற்றலை தன்னுடைய வரத்தினால் பெற்று இருக்கிறான். தான் பெற்ற வரங்களின் காரணமாக கர்வமடைந்த இரண்யாட்சன் இந்திரன் முதலான தேவர்களை சிறை பிடிக்கிறான்.

அதற்குப் பிறகு பூமி பந்தையே சுருட்டி கடலுக்குள் கொண்டு சென்று ஒழித்து வைக்கிறான். இதைப் பார்த்த பிரம்மர் அதிர்ச்சியடைகிறார். அவருடைய படைப்பு தொழிலை செய்ய முடியாமல் தவிக்கிறார். அதனால் அவர் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட  மகா விஷ்ணு இப்போது இரண்யாட்சனை அழிப்பதற்காக வராக அவதாரம் கொண்டு கடலுக்குள் மூழ்கி இரண்யாட்சனுடன் சண்டை இடுகிறார்.

கடும் போருக்குப் பின் இரண்யாட்சனை வதம் செய்யும் வராகர் பூமியை மீண்டும் மேலே கொண்டு வந்து சூரிய குடும்பத்தில் ஒன்றாக சேர்த்து வைக்கிறார்.

தன்னுடைய தம்பியான இரண்யாட்சனின் மறைவுக்கு காரணமான அந்த விஷ்ணுவை நான் வதம் செய்வேன் என்று சபதம் எடுக்கிறான் அண்ணன் இரண்யகசிபு.

அவனுக்கும் அவருடைய மனைவி ஹயாதுக்கும் பிறந்த மகன்தான் பிரகலாதன். அவனுடைய அம்மாவின் வயிற்றில் இருக்கும்பொழுதே அவன் ஒரு பெரிய பக்திமனாக வர வேண்டும் என்று சதி திட்டம் தீட்டிய இந்திரன் ஹயாதுவை கடத்திச் சென்று ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறான். அங்கே இருந்து அமைதியும், பக்திச் சூழலும் அவளுடைய கர்ப்பத்தில் இருக்கும் அவருடைய மகனையும் தொற்றிக் கொள்ள அவர் விஷ்ணுவின் பக்தனாகிறான்.

இரண்யகசிபு இந்திரனை வீழ்த்திவிட்டு தன் மனைவியை அழைத்து தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து சேர்கிறான். பிரகலாதனும் பிறக்கிறான். அவன் விஷ்ணுவின் சீடனாகவே பிறந்திருக்கிறான். விஷ்ணுவின் பக்தனாகவே இருக்கிறான் பிரகலாதன்.

பிரகலாதனின் விஷ்ணு பக்தியை நினைத்து இரண்யகசிபு கடும் கோபம் கொள்கிறான். ஆத்திரம் கொள்கிறான். சினம் கொள்கிறான். மகனது விஷ்ணு பைத்தியத்தை நீக்குவதற்காக அவனும் என்னென்னவோ செய்து பார்க்கிறான். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

கடைசியாக வேறு வழியில்லாமல் தன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனை கொலை செய்ய உத்தரவிடுகிறான். பிரகலாதனை ஒவ்வொரு முறையும் பல்வேறு வகைகளில் கொலை செய்ய முயற்சிக்கும் பொழுதெல்லாம் மகாவிஷ்ணு அவனைக் காப்பாற்றிக் கொண்டே வருகிறார்.

உலகத்திற்கே தான் அதிபதியாக இருந்தும் ஒரு கொலையைக்கூட உருப்படியாக செய்ய முடியவில்லை என்று வருத்தம் ஏற்படுகிறது இரண்யகசிபுவுக்கு. கடைசியாக தன் மகன் பிரகலாதன் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.

உன் விஷ்ணு எங்கே இருக்கிறான்.. இங்கேயும் இருப்பானா இந்த அரண்மனையில் இருப்பானா இந்த தூணில் இருப்பானா என்றெல்லாம் கேட்கிறான். அவன் கேட்ட அந்த மாத்திரத்தில் அவனுக்காகவே காத்திருந்த மகாவிஷ்ணு அந்த தூணை உடைத்துக் கொண்டு வெளியில் வருகிறார்.

விஷ்ணு பகவான் நரசிம்மராக அவதாரம் எடுத்ததன் முக்கிய நோக்கம் இரண்யகசிபு பிரம்மதேவரிடம் பெற்றிருந்த வித்தியாசமான வரம்தான். விஷ்ணுவை கொல்வதற்காகவே பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் புரிந்தான் இரண்யகசிபு.

அந்த தவத்தின் விளைவாக அவன் முன் பிரம்ம தேவர் தோன்றியபோது, “எனக்கு   ஒரு மனிதன் அல்லது விலங்கு ரூபத்தில் மரணம் நிகழக் கூடாது. என் மரணம் நிகழும் நேரம் பகலாகவும் இருக்கக் கூடாது. இரவாகவும் இருக்கக் கூடாது. வீட்டிற்கு உள்ளே இருக்கக் கூடாது. வெளியேயும் இருக்கக் கூடாது என்று பல வகைகளிலும் நடக்க முடியாத விஷயங்களை எல்லாம் சொல்லி பிரம்மதேவரிடம் வரம் பெற்று இருக்கிறான்.

இதன் காரணமாகத்தான் மகாவிஷ்ணு இப்போது நரசிம்ம அவதாரத்தில் வந்திருக்கிறார்.

இரண்யகசிபுவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் வருட கணக்காக போர் நடக்கிறது. கடைசியாக ஒரு நாள் பொழுதில் மாலை மயங்கும் நேரத்தில் பகலும் இரவும் இல்லாத ஒரு பொழுதில், வாசலிலும் இல்லாமல், வீட்டிலும் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல் அவனைத் தன்னுடைய மடியிலும் அமர்த்திக் கொண்டு தன்னுடைய விரல் நகங்களால் குத்திக் கொலை செய்து அவனுடைய குடலை எடுத்து தனக்கு மாலையாக அணிவித்துக் கொண்டு ஆக்ரோசப்படுகிறார் நரசிம்மர்.

இந்த கதையைத்தான் மிக அழகாக அற்புதமான கிராபிக்ஸ் அனிமேஷனில் படமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இந்தப் படத்தை இயக்குநர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான முகங்களை கொண்டு அந்த முகங்களையும் பேசுகின்ற வசனத்திற்கு ஏற்ப அவர்களின் முகம் போகும்போக்கு, அவர்களின் முகம் இருக்கும் இடம் என்று அனைத்தையும் நொடிப் பொழுதில் மாறிக் கொண்டே இருக்கும் வகையில் அனிமேஷனை பிரமாதமாக செய்திருக்கிறார்கள்.

பிரகலாதனாக நடித்திருக்கும் அந்த சிறுவனின் முக வடிவம் மிக அழகு. அவ்வளவு அழகான அந்த முகத்தையுடைய பிரகலாதனை கொலை செய்ய முயல்வதைப் பார்க்கும்போது நமக்கே ஒரு மாதிரி வருத்தம் வருகிறது.

அதேபோல் அவனுடைய அதிகமான விஷ்ணு நம்பிக்கை இந்தப் படம் பார்க்கும் நாத்திகர்களையும் கொஞ்சம் லேசாக நாமும் கும்பிட்டால்தான் என்று நிச்சயமாக சொல்ல வைக்கும்.

நரசிம்மர், வராக அவதாரம் என்ற இரண்டு அவதாரங்களையும் அவ்வளவு அழகாக தத்துரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் இரண்டு சண்டை காட்சிகளையும் எந்த அளவுக்கு தங்களால் சிறப்பாக கொடுக்க முடியுமா அந்த அளவுக்கு சிறப்பாக கொடுத்து படமாக்கி இருக்கிறார்கள்.

கடைசி கிளைமாக்ஸ் காட்சிகள் நரசிம்ம அவதாரத்தில் அந்த ஆக்ரோஷத்தை காட்டும் பொழுது நமக்கே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு கிராபிக்ஸில் வித்தை காட்டி இருக்கும் இந்த படக் குழுவினருக்கு மிகப் பெரிய பாராட்டுகளை தருகிறோம்.

நடந்த கதையோ நடக்காத கதையோ ஆனால் இந்து மதத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு கதை பிரகலாதன், நரசிம்மன், இரண்யகசிபு என்ற இந்த மூன்று பேர் கொண்ட கதை.

அந்தக் கதையை நம் மனதில் எப்படி எல்லாம் நினைத்திருந்தோமோ அப்படி எல்லாம் திரையில் காண்பித்து நம்மை ஒரு மயக்க நிலைக்கும் கொண்டு வந்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குநர்.

இந்தப் படத்தைப் பார்க்கின்றபோது அனைவரும் பள்ளிகளில் படிக்கும் பொழுதும், இந்தக் கதைகளை கேட்கும் பொழுதும் என்ன மனநிலையில் இருந்தார்களோ அந்த உலகத்துக்கு திரும்பிச் செல்வார்கள் என்பது உறுதி.

அதேபோல் குழந்தைகளுக்கு இத்திரைப்படம் மிகச் சிறந்த ஒரு பொழுதுபோக்கு படம். அவர்களைக் கவரும் வகையில் கிராபிக்ஸ் அனிமேஷன் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் இது குழந்தைகளுக்கு ஒரு வித குதூகலத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அனைவரும் குடும்பத்துடன் இந்தப் படத்தை அவசியம் பார்த்து மகிழ வேண்டும்.

RATING : 4 / 5

Our Score