“பழைய கள்; புதிய மொந்தை” என்பர்களே! அதுபோல தமிழ் சினிமாவின் குடும்பக் கதைகளில் இப்பொழுது அதிகமாக பேசப்படும் ‘டைவர்ஸ்’ என்கின்ற ஒரு பிரச்சனையை மையமாக வைத்து புதிய திரைக்கதையில் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடையில் சாலை ஓரத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
அவருக்கு பல்வேறு இடங்களில் பெண் தேடுகிறார்கள். அந்த வகையில் மேலூர் அருகே இருக்கும் வயநாட்டில் வசிக்கும் நித்யா மேனனை பெண் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள்.
அந்த நேரத்தில் நித்யாவின் அண்ணனான ஆர்.கே.சுரேஷூக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையில் தீர்க்கப்படாத ஏதோ ஒரு மோதல் இருக்கிறது என்பது இரண்டு குடும்பத்தினருக்கும் தெரிகிறது. ஆனால் அது என்ன சண்டை என்பதை இருவருமே வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.
ஆர்.கே.சுரேஷூக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை. இதனைப் பல்வேறு வகையிலும் தன்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டார். இதற்கிடையில் நித்யா மேனன், விஜய் சேதுபதி இருவரும் மிகவும் நெருங்கி, பழகி, பிரிய முடியாத இடத்துக்கு வந்துவிட்டார்கள்.
ஆனால் திடீரென்று விஜய் சேதுபதி குடும்பத்தின் முற்கதையையும், பேக் கிரவுண்டையும் தற்செயலாக கேள்விப்படும் நித்யாவின் தந்தை இந்தத் திருமணத்தை நிறுத்துவதாக சொல்கிறார். இந்தக் களேபரத்தில் விஜய் சேதுபதி, நித்யாவின் வீடு புகுந்து சண்டையிட்டு நித்யாவை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருமே எக்ஸ்ட்ரீம் லெவலாக இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் கத்திக் கத்தி பேசி சாதாரண சின்னப் பிரச்சினையைக்கூட பெருசாக்கிக் கொள்கிறார்கள்.
அவ்வப்பொழுது நித்யா மேனன் பேக்கை தூக்கி கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு ஓடுவதும், விஜய் சேதுபதி பின்னாலேயே ஓடிச் சென்று சமாதானம் செய்து அழைத்து வருவதும் வாடிக்கையாகவே இருக்கிறது.
இதற்கிடையில் விஜய் சேதுபதியின் அம்மா தீபா ஷங்கரும், நாத்தனார் ரோஷிணியும் சேர்ந்து நித்யாவை கிண்டல் செய்தும், கேலி செய்தும் அவமானப்படுத்த நித்யாவுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.
தன்னுடைய தாய், தங்கையை கண்டிக்க முடியாமல் திணறும் விஜய் சேதுபதி இந்தப் பிரச்சனையை எந்த விதத்திலும் அணுகும் அளவுக்கும் அறிவில்லாதவராக இருக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு குழந்தை பிறந்த பிறகும் நாத்தனார், மாமியாரின் ஆட்டம் அதிகமாக…. ஒரு கட்டத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் வீட்டுக்குப் போகிறார் நித்யா மேனன்.
போகும்பொழுது ஏற்படும் சண்டையில் ஆர்.கே.சுரேஷ் விஜய் சேதுபதியின் அம்மா, அப்பா, தங்கை, தம்பி அனைவரையுமே தாக்கிவிட்டு போகிறார். இதனாலேயே விஜய் சேதுபதிக்கு மறுபடியும் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்து வர மனமில்லை. அதே சமயம் கணவன் வந்து அழைத்தால் போகலாம் என்று நித்யாவும் காத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று விஜய் சேதுபதியின் கைக் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாம் என்று விஜய் சேதுபதியின் குல தெய்வ கோவிலுக்கு நித்யாவின் தந்தை குடும்பத்தையே அழைத்து வருகிறார். இந்த விஷயம் தெரிந்த விஜய் சேதுபதி ஓடி வந்து இவர்களிடம் சண்டையிட அந்த இடமே ரணகளமாகிறது.
தன் மனைவியை அழைத்துக் கொண்டுதான் வீடு திரும்புவேன் என்று விஜய் சேதுபதி சொல்ல… நித்யாவோ “நான் வர மாட்டேன்” என்ற அடம் பிடிக்க கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் இவர்களுக்கு பஞ்சாயத்து பேசுகிறார்கள். அந்தப் பஞ்சாயத்து காலையில் ஆரம்பித்து மதியம்வரை நீடிக்கிறது.
கடைசியில் அந்தப் பஞ்சாயத்து என்னவானது…? விஜய் சேதுபதியும், நித்யாவும் இணைந்தார்களா..? இல்லையா..? ஆர்.கே.சுரேஷ், விஜய் சேதுபதியின் மோதல் என்னவானது?… என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய அனைத்து படங்களிலுமே “குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும். அதன் வழியாக அடுத்த தலைமுறையினர் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும்” என்கின்ற ஒரு படிப்பினையை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வழியில் இந்த திரைப்படத்தையும் எடுத்துக் கொள்ளலாம்தான்..!
ஆனால் இந்தப் படத்தின் கதாபாத்திரங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் கேரக்டர் ஸ்கெட்ச் நிச்சயமாக ரொம்பவே அதிகப்பிரசங்கித்தனமானது. ஆனால், அதை ஈடுகட்டும்விதமாக யோகி பாபு மூலம் அட்டகாசமான ஒரு பதிலை கிளைமாக்ஸ்சில் சொல்லியிருக்கிறார். அதுதான் பாண்டிராஜின் ‘டச்’ என்று சொல்லலாம்.
விஜய் சேதுபதி பத்தாம் வகுப்புவரைதான் படித்தவர். அதிலும் பெயில். எதையும் அறிவாய் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர். அடுத்தவர்களுக்கு ஒரு மனம் இருக்கிறது.. விருப்பம் இருக்கிறது.. என்பதை புரிந்து கொள்ளாத ஒருவர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் என் வாழ்க்கை… என்னுடைய சமையல் திறமைதான் சிறந்தது… உலகில் உயர்ந்தது என்ற நம்பிக்கையில் வாழும் ஒரு கேரக்டர்.
எதற்கெடுத்தாலும் கத்திக் கத்தி பேசுகிறார். அடித்துப் பேசுகிறார். தன்னுடைய பாசத்தை, நேசத்தை எப்படி அமைதியாக காட்ட வேண்டும் என்பதை முழுமையாக அறியாதவர். இப்படி ஒரு கேரக்டர் ஸ்கெட்ச் வேற எந்த ஒரு நடிகருக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் விஜய் சேதுபதிக்கு கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது.
படம் முழுவதும் கத்தித் தீர்த்து இருக்கிறார். “நீங்க சொன்னா சரிதான் மேடம்,,,” “ஓகே மேடம்…”, “உட்காருங்க மேடம்,,,”, “சாப்பிடுங்க மேடம்…” என்று கோபம் வரும் பொழுதெல்லாம் நித்யா மேனனை “மேடம்” என்று கூப்பிட்டு கத்திக் கத்திக் பேசுவதைப் பார்த்தால் நமக்கே ஒரு சில நேரங்களில் எரிச்சல் வருகிறது. ஆனால் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் அப்படித்தான் என்கின்ற பொழுது நம்மால் என்ன சொல்ல முடியும்?
படத்தின் துவக்கத்தில் கருப்பண்ணசாமி கோவிலில் நடைபெறும் அனைத்து காட்சிகளிலும் விஜய் சேதுபதியின் சாதாரண நடிப்பே காமெடியை கிளப்பி இருக்கிறது.
கருப்பண்ணசாமியை வணங்கிவிட்டு திரூநீற்றை எடுத்து நெற்றியில் பட்டையை அடித்துக் கொண்டு, கொஞ்சூண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, மிச்சத்தை வயிற்றில் தடவிக் கொண்டு வந்து சண்டைக்கு மல்லுக்கு நிற்கும் தோரணையே தனி கெத்துதான்!
ஒரு கதாநாயகன் இப்படி தன்னுடைய பேச்சு, உடல் மொழி மூலம் கேரக்டரை அப்படியே கொண்டு வர முடியுமா என்பது நிச்சயம் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியை இந்தப் படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய நடிப்பின் மூலமாக கொடுத்திருக்கிறார்.
இவருக்கு இணையாக மிகச் சிறப்பான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நித்யா மேனன். ‘பேரரசி’ என்ற அந்தக் கதாபாத்திரத்தை அவர் தாங்கி இருக்கின்றவிதத்தைப் பார்த்தால், நிச்சயம் வேறு நடிகைகளால் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
இவரும் எதற்கெடுத்தாலும் கத்தி கத்தி பேசி முன் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பதே புரியாத வண்ணம் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு செல்லும் பழக்கம்… எதை சொன்னாலும் நம்பி விடுவது என்று இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பினை நித்யா மேனனும் கச்சிதமாகக் காட்டி இருக்கிறார்.
விஜய் சேதுபதி வீட்டில் நடக்கும் உச்சகட்ட சண்டை காட்சிகளில் அவருடைய வெறித்தனமான நடிப்பை பார்த்து நமக்குப் பயமே வந்துவிட்டது. நித்யா மேனன் மிகச் சிறந்த நடிகைதான். இந்தப் படத்திற்காகவும் அவர் பல விருதுகளைப் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
விஜய் சேதுபதியின் அம்மா தீபா சங்கர் சீரியலில் காட்டப்படும் மாமியாராக தன்னுடைய மகளை ராணி மாதிரி நடத்தி அதே சமயம் மருமகளை வேலைக்காரியை போல பாவிக்கும் அந்த கேரக்டரை அனுபவித்து செய்திருக்கிறார். அவரும் பல முறை பல வசன டெலிவரிகள் மூலமாக சிரிக்க வைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்த ரோஷிணியும், தம்பியாக நடித்தவரும்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் ரோஷிணி காட்டும் வில்லித்தனமான சில காட்சிகள் ரசிக்கக் கூடியதாக இருந்தது.
விஜய் சேதுபதியின் அப்பாவான ‘பருத்தி வீரன்’ சரவணன் ரொம்பவே பாவம்தான். அப்படி ஒரு பாவப்பட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார் சரவணன். நித்யா மேனனின் அப்பாவாக நடித்த வினோத்தும் அண்ணனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷூம் ரவுடிகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் செம்பன் வினோத்தின் எமோஷன்ஸ் கலந்த நடிப்பு நம்மைக் கவர்கிறது.
மேலும் படத்தில் நடித்திருக்கும் ஒரு டஜன் துணை நடிகர்கள் அத்தனை பேரையும் மனதார பாராட்ட வேண்டும். சில காட்சிகளே ஆனாலும் மனதில் நிற்கும்படியான அழுத்தமான இயக்கத்தினால் அனைவருமே நம் கண்களுக்கு தெரிகிறார்கள்.
காளி வெங்கட், மைனா, சென்றாயன், சித்ரா லட்சுமணன், போஸ்டர் நந்தகோபால் மற்றும் பலரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தைப் போலவே சூடாகவே இருக்கிறது. கோவில் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக அழகாக படமாக்கி இருக்கிறார் சுகுமார். சண்டைக் காட்சிகளை வளைத்து வளைத்து படமாக்கியவிதத்தில் அடி வாங்குவது ரசிகர்கள்தான் என்பது போலவே நமக்கு தோன்றுகிறது.
ஒரு மத்திம வயதை அடைந்துவிட்ட விஜய் சேதுபதியை வாலிபனாக காட்ட வேண்டிய கட்டாயமும் படத்தில் இருப்பதால் அதையும் அழகுபட காட்டி இருக்கிறார்கள். அதே போல் இப்போதைய விஜய் சேதுபதியை மீசையை முறுக்கிக் கொண்டு சண்டைக்கு வந்து நிற்கும் தோற்றத்திலும் ரசிக்க முடிகிறது. எல்லாப் புகழும் ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கே!
சண்டை பயிற்சியாளருக்கு சபாஷ் போடலாம். ஒவ்வொரு சண்டையையும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் படமாக்கி தந்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டிராக் மாறி பாண்டிராஜ் பக்கம் வந்திருக்கிறார் போலும்! மிகச் சிறப்பான இசையைத்தான் கொடுத்திருக்கிறார். அதிலும் ‘மிட்டாய்’ என்ற பாடல் இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஒரு டூயட் பாடலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. பின்னணி இசையிலும் படத்தைப் பார்க்க வைப்பது போன்ற இசையை அளித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
படத் தொகுப்பாளரையும் நிச்சயமாக பாராட்ட வேண்டும். இவ்வளவு நீளத்திற்கு, இரண்டு மணி 40 நிமிடத்திற்கு வரும் படத்தில் ஒரு கேரக்டர்கூட வீணடிக்கப்படாமல் காண்பித்து இருக்கிறார்கள்.
வீர சமரின் கலை இயக்கமும் பாராட்டுக்குரியதுதான். அந்த ஹோட்டல், வீடு இணைந்த அந்த இடத்தை எப்படி கண்டுபிடித்து எத்தனை நாட்கள் பொறுமையாகக் காத்திருந்து படம் ஆக்கினார்களோ.. தெரியவில்லை. அதற்கு அவ்வளவு பெரிய உழைப்பை கலை இயக்குநரும் சேர்ந்துதான் கொடுத்திருக்க வேண்டும்.
அதேபோல் அந்தக் கோவில் இடத்தில் கிடைத்த பொருள்களை வைத்து எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் ஷூட் செய்திருப்பது நாமும் கோவிலில் அமர்ந்து அவர்கள் சண்டையை வேடிக்கை பார்ப்பது போல அமைந்து இருந்தது.
குடும்பம் சிதையக் கூடாது. தம்பதிகள் டைவர்ஸ் வாங்க கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற இந்தப் படம் சொல்லும் நீதியை உலகம் முழுவதும் உள்ள அனைவருமே எதிர்பார்ப்பார்கள். பாராட்டுவார்கள். ஆனால் பின்பற்ற முடியாது.
ஏனெனில் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொருவிதம். ஒவ்வொருவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் வேறுவிதமானது. பல மனிதர்கள் கடைசிவரையில் அவர்களாகவே அப்படித்தான் இருப்பார்கள். நாம்தான் அவர்களுக்காக கொஞ்சம் வளைந்து கொடுத்து போக வேண்டும் என்பதை இந்தப் படத்தில் கொஞ்சம் ரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இப்படி ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சுகளுடன் கூடிய குடும்பக் கதாபாத்திரங்களை நீங்கள் தினசரி தொலைக்காட்சி சீரியலில் மட்டுமே பார்க்க முடியும். அப்படியொரு சீரியல் கேரக்டர்களை கொண்டு வந்து அவர்கள் மூலமாக இரண்டு மணி நேரம் 40 நிமிடம் நம்மை பார்க்க வைத்திருப்பதே ஒரு மிகப் பெரிய சாதனைதான்.
எக்ஸ்ட்ரீம் லெவல் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உச்சபட்சமான முட்டாள்தனமான ஒரு கதாபாத்திரத்தை தாங்கி இருக்கும் விஜய் சேதுபதி படம் நெடுகிலும் கோபப்பட்டு கொண்டும் கத்திக் கொண்டே இருப்பதை பார்க்கும் நமக்கே கொஞ்சம் கடுப்பாகவும் இருக்கிறது. எரிச்சலாகவும் இருக்கிறது.
அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் நிதானமாக உட்கார்ந்து பேசி முடிக்க வேண்டிய ஒரு விஷயத்தை இந்த மாதிரியான கேரக்டர் ஸ்ஸ்கெட்ச் கொண்ட ஒருவன் எப்படி அதை சமாளிக்கிறான் என்பதாக இயக்குநர் சொல்லி இருந்தாலும் படம் பார்ப்பவர்களை ரொம்பவே சோதித்து தள்ளிவிட்டது அந்த சில காட்சிகள்.
கணவன்தான் இப்படி என்றால் மனைவியும் இப்படித்தான் அமைய வேண்டுமா? அவரும் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டே போவதால் நமக்கு சில நிமிடங்களில் எரிச்சலை தந்துவிட்டது. நித்யா மேனனும் மாறுதலான ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருந்து இந்தப் பிரச்சனையை அணுகியிருந்தால் நிச்சயம் இதன் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
ஆனால் இரண்டு கத்திகள் ஒரே உரையிலிருந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கரு என்பதால் நாம் இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது.
கிளைமாக்ஸ் காட்சியில் தீபா சங்கரின் தம்பி மகளை விஜய் சேதுபதிக்கு திருமணம் செய்து வைக்க போவதாக “சும்மா காமெடிக்கு சொன்னேன்’ என்று மாமியாரும், நாத்தனாரும் சொல்வது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல.
அவ்வளவு பெரிய அளவுக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கும்பொழுது அதுவும் மருமகள் எதற்கெடுத்தாலும் சண்டையிடும் வேளையிலும் யாராவது இதைச் சொல்வார்களா…? “அதை நான் சாதாரணமாக காமெடிக்காகத்தான் சொன்னேன்” என்று கடைசியாக வந்து சொல்வதில் எந்த லாஜிக்கும் இல்லை.
இவர் காமெடியாக சொல்லலாம். ஆனால் தம்பிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருப்பது அண்ணனுக்கு தெரியாமல் இருக்குமா…? விஜய் சேதுபதி எப்படி இதை சொல்லாமல்விட்டார்…? அவரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறாரா…? அவரும் சேர்ந்து நாடகம் ஆடி இருக்கிறார் என்றால் அந்த எமோஷன்ஸூடன் அவர் நித்யாவுடன் சண்டையிடும் காட்சி சுத்தமாக ‘ஹம்பக்’ என்றுதான் சொல்ல வேண்டும். நாம் அனைவரையும் முட்டாளாக்கிய காட்சி இதுதான்.
கோவிலில் இருந்து அவர்கள் வீட்டுக்கு தம்பதிகளாக திரும்பி சென்றார்கள் என்பதோடு படத்தை முடித்து இருந்தால்கூட நிச்சயமாக நாம் சந்தோஷப்பட்டு இருக்கலாம்.
ஆனால், அதற்குப் பிறகும் கதையை இழுத்து சென்று நீதிமன்றத்தில் டைவர்ஸ் வாங்கிவிட்டு மறுபடியும் அதே ஹோட்டலில் நித்யா மேனன் தனக்குப் பிடித்தமான இடம் என்று சொல்லி வேலை பார்ப்பதெல்லாம் தேவையில்லாத ஆணி..!
பாண்டிராஜின் இயக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணம். இந்தப் படத்தில் வருகின்ற மூன்று காட்சிகள். அந்த மூன்று காட்சிகளில் நடித்திருப்பது விஜய் சேதுபதியின் குழந்தையாக நடித்த அந்தப் பெண் குழந்தை. அது நடிக்க வைக்கப்படவில்லை. ஆனால். இயல்பாக அந்த குழந்தையின் நடிப்பை மிக அழகாக அந்த சிச்சுவேஷனுக்கு ஏற்ப படமாக்கி இருக்கிறார் பாண்டிராஜ். இந்த ஒரு காரணத்துக்காகவே அவரை மிகப் பெரிய அளவுக்குப் பாராட்ட வேண்டும்.
குடும்ப கதைகள் அனைத்தையும் தற்போதைய சீரியல்கள் கொத்து புரோட்டா போட்டுக் கொண்டிருப்பதால், அதிலிருந்து வித்தியாசமாக ஒரு குடும்பக் கதையை காட்ட வேண்டும் என்று நினைத்த இயக்குநர் பாண்டிராஜ், இப்படியொரு கதை திரைக்கதையில் ஒரு படத்தை துணிந்து கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய இயக்கத் திறமையை மட்டுமே வைத்து அவர் ஆடியிருக்கும் இந்த ஆடு புலி ஆட்டம் ஜெயித்ததா இல்லையா என்பதை இன்னும் சில நாட்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
குடும்பத்தோடு சினிமா பார்க்க விரும்புபவர்கள் இந்தப் படத்தை அவசியம் தியேட்டரில் சென்று பார்க்கவும்.
RATING : 3.5 / 5









