வர வர வம்பு மேடையாகவே மாறிக் கொண்டிருக்கிறது சினிமாக்களின் பிரஸ் மீட் நிகழ்ச்சி..!
ச்சும்மாவாச்சும் பேச்சுக்காக எதையாவது இழுத்தால், இதுவும் படத்தின் பப்ளிசிட்டிக்கு உதவுகிறதே என்றெண்ணி நடிகர்களும் அதற்கு தோதான பதிலைச் சொல்லி ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள். இதையும் படத்தின் பப்ளிசிட்டியில் ஒரு அங்கம் என்று சொல்லித் தப்பிக்கிறார்கள்.
‘பாண்டிய நாடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் லட்சுமி மேனனை சந்திக்க பெரும்பாடுபட்ட கதையையும், விஷால் தன்னை அதற்கு அனுமதிக்காமல் ஏமாற்றியதையும் சொன்னார் நடிகர் விஷ்ணு விஷால்.
நேற்றைக்கு நடந்த ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் பிரஸ் மீட்டில் இதே கேள்வி மீண்டும் எழுந்தது.. அது வேற இது வேற என்று சொல்லிவிட்டு போயிருக்க வேண்டிய விஷயத்தை வம்பாக இழுத்து வைத்து பதில் சொன்னார் படத்தின் ஹீரோ விஷ்ணு.
“பாண்டிய நாடு படத்துக்கு ரொம்ப பப்ளிசிட்டி கிடைச்சது அந்தப் பேச்சுனால.. அதே மாதிரி இதுக்கும் ஏதாவது எழுதினாங்கன்னா எங்களுக்கும் கூடுதலா பப்ளிசிட்டி கிடைக்கும்..” என்றார் விஷ்ணு வெளிப்படையாக..
இவ்வளவு சொன்ன பின்னாடியும் ச்சும்மா இருப்பாங்களா மீடியா..? “லட்சுமி மேனன்கிட்ட பேசினீங்களா..? விஷால் அப்புறம் என்ன செஞ்சாரு…?” என்றெல்லாம் கேட்க..
“இந்தப் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்கிற நந்திதா லட்சுமி மேனனோட பெஸ்ட் பிரண்ட். இவங்ககிட்ட நம்பர் வாங்கி லட்சுமி மேனன்கிட்ட பேசிட்டேன்.. அவங்க அன்னிக்கு நான் பேசினதை ஒண்ணும் பெரிசா எடுத்துக்கலையாம்.. என்கிட்டயே சொல்லிட்டாங்க..” என்றார்.
“சரி.. நந்திதாவை விஷால்கிட்ட கோர்த்து விட்டீங்களா..?” என்ற கேள்விக்கு.. “ஆமாங்க.. அதுக்கப்புறம் விஷால் நம்பரை கொடுத்து நந்திதாவை பேச வைச்சேன். அன்னிலேர்ந்து இப்போவரைக்கும் நந்திதா என்கிட்ட சரியா பேசுறதில்ல..” என்றார்.
இதுவரையில் பொறுமையுடன் அமர்ந்திருந்த நந்திதா மைக்கைப் பிடித்து “விஷ்ணு-விஷால்-லட்சுமி மேனன்.. இதுக்கு நடுவுல நந்திதா எதுக்குன்றேன்..” என்றார். “விஷால் என்ன சொன்னார்..?” என்று எதிர்க் கேள்வி கேட்க.. “விஷால் என்னோட நீண்ட நாள் பிரெண்ட்.. அடிக்கடி போன்ல பேசிக்குவோம். அவ்ளோதான்.. நீங்களா எதுவும் எழுதிக்காதீங்க..” என்று எச்சரித்துவிட்டுப் போனார் நந்திதா.
படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார்தான் பாவம்.. இந்தக் கூத்தை பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் சிரித்தபடியே அமர்ந்திருந்தார்..
யார் வூட்டுக் காசுல யாரு..?