நேற்றைய தினம் காலையில் நடைபெற்ற ‘ஜிகர்தண்டா’ இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, தான் பிறந்த மதுரை மண்ணை தமிழ்ச் சினிமாக்கள் கொலை பூமியாகவே காட்டுவதாகச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.
அவர் பேசும்போது, “………..மதுரையை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள். எனக்கு ரொம்பச் சந்தோஷம். எனது மண்ணிற்கு பெருமை. தூங்கா நகரம்.. எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருக்குற ஊர். மதுரை ஒன்றும் ரத்த பூமி அல்ல… பல வருடங்களுக்கு முன்னால் முதுகுளத்தூர் கலவரம் நடந்தது.. முன்னாடி மதுரையில் ரெளடிகள் இருந்தாங்க… இல்லைன்னு சொல்லலை.. ஆனா இப்பொழுதெல்லாம் அப்படியில்லை… என் அனுபவத்துல சொல்றேன்.. மதுரைன்னாலே கொலைன்னு நினைக்கிற அளவுக்கு படங்கள் வருது. எனக்கு வயலன்ஸ் பிடிக்காது.. நான் பார்ப்பதற்குத்தான் முரட்டுத்தனமாத் தெரிவேன்… படம் பார்க்கும்போது சண்டைக் காட்சிகள் வந்தா கீழே குனிஞ்சுக்குவேன்..என் படத்துல சண்டை காட்சி எடுக்கும்போது முகத்தைத் திருப்பிக்கிட்டுத்தான் ஷாட் ஓகே சொல்வேன்.. அந்த அளவுக்கு நான் பயந்தாங்கொளி..
இந்தப் படத்துல ஒரு களம் வைச்சிருக்காங்க.. மதுரையை மையமா வைச்சு. அதை கரெக்ட்டா எடுத்திருக்காங்க.. பாராட்டுறேன்.. ஆனா இது இப்படியே தொடரக் கூடாது.. ஏன்னா இயக்குநர்களுக்கும் சமுதாயப் பொறுப்பு வேணும். இப்ப பத்திரிகைகள புரட்டுங்க.. ஒரு பக்கம் முழுக்க குத்து, கொலை, அடிதடிதான்னு இருக்கு.. ஸோ.. நாமளும் அதை என்கரேஜ் பண்ற அளவுக்குப் போகக் கூடாது.. அதுனால சொல்றேன்..” என்றார் பாரதிராஜா.
இதையெல்லாம் கேக்குற நிலைமையிலா இன்றைய இயக்குநர்கள் இருக்காங்க..?