இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படப் பாடல்களை இனிமேல் சிடி, டிவிடி வடிவிலோ வேறு எந்த வகையிலோ விற்பனை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 5 முக்கிய ஆடியோ நிறுவனங்களுக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து இன்று காலை பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் இசைஞானி இளையராஜா. அப்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவும் உடன் இருந்தார்.
அப்போது பேசிய இளையராஜா, “இதுவரையிலும் எனது பாடல்கள் அனைத்தும் உலகளவில் பல வழிகளிலும் பலராலும் விநியோகிக்கப்பட்டன.
இனிமேல் என்னுடைய இசையை அதிகாரப்பூர்வமாக உலகளவில் எந்தவொரு மொபைல் நிறுவனமும், உலகளாவிய இணையத் தளங்களிலும், யூ டியூப், டெய்லி மோஷன் போன்ற இன்னும் பல வீடியோ இணைய தளங்களிலும், ஆடியோ, வீடியோ விளம்பரங்களிலும், எனது பாடல்களை ரீ மிக்ஸ் செய்யவோ, எப்.எம். ரேடியோக்கள் மற்றும் டிவிக்களில் ஒலி / ஒளிபரப்பவோ, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் முறையற்ற வகையில் உபயோகிக்கவோ கூடாது.
எனது இசையை முறைப்படுத்தி இனிமேற்கொண்டு நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரையிலும் என்னுடைய இசைப் பிரதிகளை மேற்படி இடங்களில் உபயோகிக்க உடனேயே அமலுக்கு வரும்வகையில் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.
ஆகவே என்னுடைய இசைப் பிரதியை நிர்வகிக்கும் உரிமை இனிமேல் யாருக்கு வழங்கப்படும் என்பது அறிவிக்கப்படும்வரையிலும், என்னுடைய இசையையும், இசைப் பிரதியையும் பிரத்யேகமாக பயன்படுத்திய அனைத்து இசை வெளியீட்டு நிறுவனங்களும், மொபைல் நிறுவனங்களும், டிஜிட்டல் நிறுவனங்களும், எஃப்.எம். ரேடியோக்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் எனது இசையினால் கிடைக்கப் பெற்ற வருவாய் பற்றிய தகவல்களை உடனடியாக என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதனை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்..” என்றார்.