‘லிங்கா’ நஷ்டஈடு விவகாரம் – விநியோகஸ்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு..!

‘லிங்கா’ நஷ்டஈடு விவகாரம் – விநியோகஸ்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு..!

‘லிங்கா’ படத்தின் நஷ்டஈட்டு பிரச்சினை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

கடந்த வாரம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மற்றும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் முன்னிலையில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிற்கும் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும் இடையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.

மொத்த நஷ்டத் தொகையான 33 கோடி அளவுக்கெல்லாம் கொடுக்க முடியாது என்று திடமாக சொல்லிய ராக்லைன் வெங்கடேஷிற்காக கொஞ்சம், கொஞ்சமாக இறங்கி வந்த விநியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்களுக்கு தர வேண்டிய நஷ்டஈட்டையாவது திருப்பிக் கொடுங்கள் என்று வெறும் 10 கோடியில் வந்து நின்றார்கள்.

இதற்கு மேல் நாங்கள் இறங்க முடியாது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க தாணுவும், சரத்குமாரும் விநியோகஸ்தர்களுக்கு ஆதரவாகவே பேசியிருக்கின்றனர். இதையடுத்து மறுநாள் காலையில் செக் தருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போன ராக்லைன் வெங்கடேஷ் காலையில் திடீரென்று பல்டியடித்துள்ளார்.

தான் தரப் போகும் இந்த நஷ்டஈட்டுத் தொகையான 10 கோடி ரூபாயை வைத்து இந்தியா முழுமைக்குமான விநியோகஸ்தர்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று சொல்ல சந்தோஷமாகச் சென்ற விநியோகஸ்தர்கள் பேஸ்தடித்துப் போய் திரும்பி வந்தார்கள். இதுவரையில்  சமரசப் பேச்சு நடத்திய சரத்குமாரும், தாணுவும் இனி தலையிடுவதில்லை என்று சொல்லி விலகிக் கொள்ள.. லிங்கா பிரச்சினை திரும்பவும் முதல் கட்டத்திற்கே வந்து நின்றுவிட்டது.

இந்த இடைவெளியில் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் லிங்கா படத்திற்கெதிராக விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், இது பற்றிய செய்திகள் எதையும் பத்திரிகைகள் வெளியிடக் கூடாதென்றும் தடையுத்தரவை வாங்கினார்.

இதனால் சமரசப் பேச்சு என்கிற போர்வையில் தாங்கள் நம்பிக்கை மோசடிக்கு உள்ளாக்கப்பட்டதாக வினியோகஸ்தர்கள் கோபமடைந்துள்ளனர். இனியும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான முடிவு கிடைக்க வாய்ப்பில்லை என்று அறிந்த நிலையில் ராக்லைன் வெங்கடேஷ் பெற்ற நீதிமன்ற தடையுத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அதே பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நாளை மார்ச் 5, வியாழக்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. வினியோகஸ்தர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆச்சார்யா, மற்றும் ஏ.ஆர்.லட்சுமணன் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

இனிமேல் தனி மனித போராட்டங்களை கைவிட்டுவிட்டு, சட்ட ரீதியாகவே தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வெளியீட்டு நிறுவனமான ஈராஸ் ஆகியோருடன் போராடுவது என்று  ‘லிங்கா’ பட வினியோகஸ்தர்கள் தீர்மானித்திருக்கிறார்களாம்.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இப்போதைக்கு தேவை நல்ல ஆலோசகர்கள்தான்.. இப்போது சுற்றியிருக்கும் ஆமாம் சாமி போடுபவர்களையெல்லாம் விலக்கிவிட்டு, கொஞ்சம் எட்ட தள்ளி நிற்கும் சினிமா பிரபலங்களிடம் தானே நேரில் பேசி நிலைமையை தெரிந்து கொண்டு செயலாற்றுவது அவரது பெயருக்கும், புகழுக்கும் பெருமையளிக்கும்..!

இந்த ரீதியிலேயே ரஜினியின் செயல்பாடுகள் சென்றால் விமர்சனங்கள் இன்னமும் அதிகமாகத்தான் வரும்..! 

Our Score