full screen background image

ஓடிடியில் வெளியாகப் போகும் விஷாலின் ‘மதகஜராஜா’ திரைப்படம்

ஓடிடியில் வெளியாகப் போகும் விஷாலின் ‘மதகஜராஜா’ திரைப்படம்

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு திரைப்படம் மதகஜராஜா’.

2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களினால் மாட்டிக் கொண்டு முழித்தது. இதனால் இந்தப் படத்தை வெளியிட பல்வேறு முயற்சிகள் நடந்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இந்தப் படத்தின் துவக்கமே மிகப் பெரிய சர்ச்சையில்தான் துவங்கியது. விஷாலுக்கு ஜோடியாக முதலில் நடிக்க வந்தவர் ஸ்ருதிஹாசன். ஏனோ சில நாட்களில் அவர் விலகிவிட.. அடுத்து ஹன்ஸிகாவை ஒப்பந்தம் செய்தார்கள். அவரும் விலகிச் சென்றார்.

இதையடுத்து நடிகை ராதாவின் மகளான கார்த்திகா நாயரை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றது. அட்வான்ஸெல்லாம் வாங்கிய நிலையில் அவரும் இல்லாமல் போய்… கடைசியாக படத்தில் நுழைந்தவர் வரலட்சுமி.

இவர்களுடன் அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சோனுசூட், மணிவண்ணன், சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. இதில் ஆர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். நடிகை சதா ஒரு குத்துப் பாடலுக்கு செமத்தியாக ஆட்டம் போட்டிருக்கிறாராம்..!

மறைந்த இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் நடித்து கடைசியாக வெளிவரவிருக்கும் படம் இதுதான்.

விஜய் ஆண்ட்டனி இசையமைக்க.. ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவின்-ஸ்ரீகாந்த் இருவரும் படத் தொகுப்பு செய்திருக்கிறார்கள். சுந்தர் சி. எழுதி, இயக்கியிருக்கிறார்.

உண்மையில் இந்தப் படம் 2013-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்றே வெளிவந்திருக்க வேண்டியது. ஜெமினி லேப் தயாரித்த இந்தப் படம் அந்த நிறுவனம் வெளியிட்ட முந்தைய படங்களின் நஷ்டக் கணக்கினால் பெரும் சிக்கலுக்குள்ளானது.

“முந்தைய படங்களின் நஷ்டத்தை ஈடுகட்டினால்தான் இந்தப் படத்தை வெளியிட முடியும்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும், விநியோகஸ்தர்கள் சங்கத்தினரும் ஒன்றாக சேர்ந்து கொடி பிடிக்க படத்தை கிடப்பில் போட்டார் தயாரிப்பாளர்.

போடா போடி’ படத்தின்போதே இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது. பின்பு 2013-ம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டு அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் விஷால் நடித்த இன்னொரு படமான சமர்’ திரைப்படம் வெளியாக.. இது மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் 2013 செப்டம்பர் 6-ம் தேதி ரிலீஸ் என்று மிக உறுதியாகச் சொல்லப்பட்டிருந்தது. அப்போது படத்தின் தயாரிப்பாளரான ஜெமினி கலர் லேப்பிடம் இருந்து படத்தின் நாயகனான விஷால் தானே இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய முன் வந்தார்.

ஆனால் ஜெமினி லேப் கொடுக்க வேண்டிய பணம் என்று சொல்லி சில கோடிகளை விநியோகஸ்தர்கள் விஷாலிடம் கேட்க.. அதிரடியாக ஒரு கோடி ரூபாய்வரைக்கும் செலவு செய்து பிரமோட் செய்த நிலையில் வேறு வழியில்லாமல் இந்தப் பட வெளியீட்டில் இருந்து விலகிக் கொண்டார் விஷால்.

அதையடுத்து நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார் இப்படத்தை வாங்கி விநியோகம் செய்ய முன் வந்தார். 2014 மார்ச்-7-ம் தேதியன்று படத்தை வெளியிட முடிவு செய்து விளம்பரமெல்லாம் செய்தார் பி.டிசெல்வக்குமார். ஆனால், கடைசியில் இதுவும் புஸ்வாணமாகிவிட்டது.

இதற்கிடையில் ஜெமினி லேப்பின் அதிபர் பாண்டிச்சேரி அருகேயுள்ள ஏனாம் கடற்கரையில் தற்கொலை செய்து கொள்ள, படம் முற்றிலுமாக முடங்கியது.

இதுவரையில் பேச்சே இல்லாமல் இருந்த நிலையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்வது பற்றி 2016-ம் ஆண்டில் ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் அதே ஆண்டின் மார்ச் 11-ம் இந்த ‘மதகஜராஜா’வை திரைக்கு கொண்டு வரும் வேலைகள் நடந்தன.

மீண்டும் துரதிருஷ்டவசமாக நடக்காமல் போக தற்போதுவரையிலும் இத்திரைப்படம் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது.

ஆனால், இப்போது இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்னும் முடிவுக்கு தயாரிப்பாளர்களான ஜெமினி லேப் நிறுவனம் முடிவு செய்திருக்கிறதாம். இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துவிட்டதாம்.

இன்னும் ஒரு சில நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score