full screen background image

மதகஜராஜா – சினிமா விமர்சனம்

மதகஜராஜா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் விஷால் நாயகனாகவும், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், சோனுசூட், சுவாமிநாதன், மனோகர், எலிசபெத் சூரஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் ஆர்யாவும், சதாவும் தலையைக் காட்டியுள்ளனர்.

12 வருடங்களுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுது இன்றைக்கு திரைக்கு வந்திருக்கிறது.

விஷால், சந்தானம், நித்தின் சத்யா, சடகோபன் ரமேஷ் – இந்த நான்கு பேரும் பள்ளிக் காலத்தில் இருந்தே மிக நெருங்கிய நண்பர்கள். இவர்களுடைய ஆசிரியரின் மகள் திருமணத்திற்காக அனைவரும் கிராமத்திற்கு வந்து ஒன்று சேர்கிறார்கள்.

வந்த இடத்தில் அந்த மணமகளுக்கும், இன்னொரு பையனுக்கும் ஆன இருந்த காதல் விஷாலுக்கு தெரிய வர… பெரிய சண்டையெல்லாம் போட்டு அந்தக் காதலை சேர்த்து வைத்து திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார்கள் நண்பர்கள் குழாம்.

அதே சமயம் சந்தானத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான விவாகரத்து கேசையும் ஒரு வழியாக ஒரு ஆர்யாவை வைத்து டிராமா போட்டு முடித்து வைக்கிறார் விஷால்.

அடுத்த இரண்டு நண்பர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள். சடகோபன் ரமேஷ் சப்-கலெக்டராக நிலையில் லஞ்சம் வாங்கியப் புகாரியில் சிக்க வைக்கப்பட்டு சிறைக்கு சென்று வந்திருக்கிறார். நிதின் சத்யாவுக்கோ மிகப் பெரிய அளவுக்கு பண நஷ்டம் ஏற்பட்டு தொழில் முடங்கிப் போய் கிடக்கிறது. இந்த இருவருமே தாங்கள் பாதிக்கப்பட்டது மிகப் பெரிய தொழில் அதிபரான சோனுசூட்டால்தான் என்கிறார்கள்.

சோனுசூட் அரசியல் செல்வாக்கு உள்ளவர். மீடியாவில் மிகப் பெரிய ஆளுமை கொண்டவர். கோடி கணக்கில் பணம் இருக்கிறது. இத்தனையும் வைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரத்திலும் பின்னணியில் இருந்து இயக்குபவர். எனவே அவரைப் பகைத்துக் கொண்டு எதையும் செய்து விட முடியாது என்று நண்பர்கள் விசனப்பட… “சோனுசூட்டிடம் நான் நியாயம் கேட்கிறேன்..” என்று சொல்லிவிட்டு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார் விஷால்.

சென்னைக்கு வந்தவுடன் தொழிலதிபரான சோறு சூட்டை சந்தித்து “தன்னுடைய நண்பர்களுக்கு அவர் செய்த துரோகத்திற்காக நஷ்ட ஈடாக 57 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடுவேன்” என்று சவால் விடுகிறார்.

ஆனால் சோனுசூட்டோ அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் ஒரு சின்ன எறும்பான விஷாலை மிக எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைக்கிறார். இந்த இருவரில் யார் நினைத்தது நடந்தது?.. விஷால்தான் செய்ததை சாதித்த காட்டினாரா?.. அல்லது சோனுசூட் விஷாலிடம் இருந்து தப்பித்தாரா?.. என்பதுதான் இந்த மதகஜராஜா படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.

12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்பதால் விஷால் அப்பொழுது மிகவும் இளமையாக இருக்கிறார். ஆனால் முகத்தில் அந்த இன்னோசென்ட் அப்படியேதான் இருக்கிறது. படம் முழுவதும் ஒரு துள்ளலான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார். படம் முழுவதும் காமெடி, காதல், அடிதடி, சண்டை என்று படம் நகர்வதால் அந்த சிச்சுவேஷன்களுக்கு ஏற்றவாறு தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பை காண்பித்து விட்டு சென்று இருக்கிறார்.

ஆனால் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்க பறந்து, பறந்து சண்டையிட்டு இருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் சிக்ஸ் பேக் உடல் அமைப்பை செய்து காட்டும் போது அவருடைய டெடிகேஷன் நடிப்பை நம்மால் உணர முடிகிறது. அந்த வகையில் விஷாலுக்கு இந்தப் படம் ஒரு மிகப் பெரிய கம் பேக் திரைப்படம்தான். இது 12 வருடங்களுக்கு முன்பாகவே வந்திருந்தால் நிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கும். விஷாலின் இந்தக் கடின உழைப்புக்கு நமது பாராட்டுக்கள்.

விஷால்தான் மெயின் ஹீரோ என்றாலும் படத்தின் கதைக்கு ஹீரோ என்றால் அது நிச்சயமாக சந்தானம்தான். படம் முழுவது வியாபித்து இருக்கிறார் சந்தானம். படம் முழுவதும் அவர்தான் சிரிக்க வைத்திருக்கிறார். வசனத்திலிருந்து, பஞ்ச் டயலாக்கில் இருந்து அவர் அடிக்கின்ற ஒவ்வொரு விட்டுக்களும் சிரிக்க வைக்கிறது. இப்படி ஒரு சிரிப்பு மழையை சமீபத்தில் எந்த ஒரு திரைப்படத்திலும் பார்க்கவில்லை. ஒரு ஆக்சன் திரைப்படத்தை மிகச் சிறந்த நகைச்சுவை திரைப்படமாக மாற்றி அமைத்திருக்கும் சந்தனத்திற்கு நமது பாராட்டுக்கள்.

படத்தின் நாயகிகளாக நடித்திருக்கும் அஞ்சலியும், வரலட்சுமியும் நடிப்பதைவிட யார் அதிகமாக கவர்ச்சி காட்டுவது என்பதில் அதிகமாக போட்டியிட்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் ரசிகர்கள் கிறங்கிப் போனதுதான் மிச்சம். இருவருமே ஆடை குறைப்பு செய்ததோடு, யார் அதிகமாக இடுப்பு பிரதேசத்தை காட்டுவது என்பதிலும், தொப்புளை முன்னிலைப்படுத்திக்கொண்டு அவர்கள் ஆடுகின்ற ஆட்டமும் இதற்காகவே தியேட்டருக்கு வருகின்ற ரசிகர்களை நிச்சயமாக கவரும்.

படத்தின் பிற்பகுதியில் தலையை காட்டும் மனோபாலா கடைசி 15 நிமிடங்களில் நம்மை கொள்ளை கொண்டு போய்விட்டார். வசனம் பேசி நடிக்கலாம். ஆக்சன் காட்சியில் நடிக்கலாம். ஆனால், பிணமாக நடிப்பது என்பது மிக, மிக கடினம். அந்த 15 நிமிடங்களில் பிணமாக நடித்தே நம்மை வயிறு குலுக்க சிரிக்க வைத்திருக்கிறார் மனோபாலா. அவர் ஒரு அற்புதமான நடிகர். அவருடைய மரணம் நிச்சயம் தமிழ்ச் சினிமாவுக்கு மிகப் பெரிய ஒரு இழப்பு என்பது இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயமாக அனைவருக்குமே புரியும்.

வில்லனாக நடித்திருக்கும் சோனுசூட் பணக்காரர் வில்லன் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆனால் அவரும் கடைசியில் தன்னுடைய போர் பேக் உடம்பைக் காட்டி சிக்ஸ் பேக் விஷாலுடன் சண்டை இட்டு தன் கதையை தானே முடித்துக் கொள்கிறார்.

விஷாலின் மற்றைய நண்பர்களான நித்தின் சத்தியா, விஷாலின் அப்பாவாக நடித்த ஆர்.சுந்தர்ராஜன், லொள்ளு சபா மனோகர் என்று இந்தக் கூட்டணியும் ஒரு பக்கம் நகர்த்தும்படியான திரைக்கதையில் தங்களுடைய நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

அஞ்சலியின அப்பாவாக நடித்திருக்கும் லொள்ளு சபா சாமிநாதன், அஞ்சலி பற்றி நண்பர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து செய்யும் காம நெடி கொண்ட காமெடி வசனங்களை எல்லாம் பேசும்பொழுது என்னவென்றே தெரியாமல் அதற்கு ஒத்து ஊதுவதைப் போல நடித்து நமக்கு கொஞ்சம் உவ்வே’ வர வைத்திருக்கிறார்.

கௌரவ வேடம் என்றாலும் ஒரே ஒரு காட்சி என்றாலும் ஆர்யாவும், சதாவும் மனதைக் கவர்கிறார்கிறார்கள். இன்னொரு கவுரவ வேடத்தில் வரும் மணிவண்ணன் நடித்த கடைசிப் படம் இதுதான் என்பதை நினைக்கும்போது மனம் கணக்கிறது.

சோனுசூட்டின் பி.ஏ.வாக நடித்திருக்கும் சிட்டிபாபு, மணிவண்ணன், மனோபாலா, மேனேஜர் சீனு என்று இந்தப் படத்தில் நடித்திருந்தவர்கள் படம் வெளிவரும்போது உயிருடன் இல்லை என்பது சோகமான விஷயம்தான்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒரு முறை கேட்கும் ரகம்தான். மூன்று பாடல்கள் குத்தாட்ட போட வைக்கிறது. ரசிகர்களை குஷிப்படுத்துவதிலும், ஆட்டம் போட வைப்பதிலும் விஜய் ஆண்டனியின் இசை அழகாய் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு அட்டகாசம் என்று சொல்லலாம். ஆஸம் என்றும் சொல்லலாம். பாடல் காட்சிகளைவிடவும் கடைசி 15 நிமிடத்தில் பரபரப்பாக இருக்கும் காட்சிகளை படமாக்கி இருக்கும்விதம் அபாரம். கதையோடு பயணிக்கும்விதமாய் மனோபாலாவின் உடலோடு பயணிக்கும் அந்த 15 நிமிட காட்சிகளில் பரபரப்பை கூட்டி இருக்கிறது ஒளிப்பதிவாளரின் கேமரா. அதோடு பாடல் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார்.

படத் தொகுப்பாளரின் கச்சிதமான தொகுப்பினால் பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் அவ்வளவு அழகாக திரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

இந்தப் படத்தை கதையே இடைவேளையில்தான் தொடங்குகிறது. அதனால் படத்தை இடைவேளைக்கு பின்பு வருகின்ற கதையை அப்படியே மாற்றி இடைவேளைக்கு முன்பாக வைத்தால்கூட படம் சுவையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைப்போடு இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

காமெடி படம் என்றால் அதில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பார்கள். லாஜிக் பார்க்க வேண்டும் என்றால் அது காமெடி படமாக இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். அந்த கொள்கையின்படி பார்த்தால் இந்தப் படத்தில் நிச்சயமாக நாம் லாஜிக்கே பார்க்கக் கூடாது. ஆனால், லாஜிக் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு மிகவும் உண்மைக்கு நெருக்கமான சில காட்சிகளை வைத்து படத்தை நம்பும்படியாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

படத்தின் பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் நமக்குத் தெரிகிறது. அதிலும் கடைசியாக தன்னுடைய கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக தூத்துக்குடி வருகின்ற காட்சிகளில் அவ்வளவு கூட்டத்தை வைத்து சமாளித்து இருக்கிறார். அதே சமயம் நடுரோட்டில் நடக்கின்ற காட்சிகள்… காரைக்குடியில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சிகள்.. இதையெல்லாம் படத்துக்கு மிகப் பெரிய பட்ஜெட்டை சாப்பிட்டு இருக்கும்.

அதே அளவுக்கான பட்ஜெட்டை பாடல் காட்சிகளுக்கு போட்டிருக்கும் செட்டுகளும் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வளவு பிரம்மாண்டத்தை இவ்வளவு அழகான திரைக்கதையில் வடிவாக தொகுத்து வழங்குவது. மிகப் பெரிய வேலை. இந்த வேலையை சுந்தர்.சி போன்ற மாஸ்டர் இயக்குநர்களால் மட்டும்தான் செய்ய முடியும்.

படத்தில் நமக்கு கொஞ்சம் உறுத்தலாக இருப்பது காமடி என்ற பெயரில் அஞ்சலி, வரலட்சுமியை வைத்து நண்பர்கள் மாறி, மாறி பேசிக் கொள்ளும் காம நெடி வசனங்கள்தான். அதை மட்டும் கொஞ்சம் தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இயக்குநர் சுந்தர் சி தனது வழக்கமான பாணியில் முழுக்க, முழுக்க கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஒரு எளிமையான கதைக் கருவில் அனைவருக்கும் தெரிந்த பாணியில்… ஆனால் தெரியாத திரைக்கதையில் இந்த படத்தைக் கொடுத்து அனைத்து தரப்பினரையும் தியேட்டரில் வயிறு குலுக்க சிரிக்க வைத்திருக்கிறார்.

படத்துக்குப் படம்.. தியேட்டருக்கு தியேட்டர்… கொலை.. அந்தக் கொலையை கண்டுபிடிப்பது… பாலியல் துன்புறுத்தல்கள்.. போக்சோ வழக்குகள்… இப்படியே கதைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்…

இப்படி ஒரு காமெடி படம் வந்து மக்களை “தியேட்டருக்கு வாங்க வாங்க” என்று அழைக்கிறது என்றால் நிச்சயம் அது சுந்தர் சி போன்ற இயக்குநர்களால்தான் முடியும். இந்த ஒரு காரணத்துக்காகவே இயக்குநர் சுந்தர்.சி-க்கு நம் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இந்தப் பொங்கலை நாம் ‘மதகஜராஜா’வோடு கொண்டாடுவோம்.

RATING : 3.5 / 5

Our Score