“மேடம், சுனிதா, புஜ்ஜி, கண்ணா” – இயக்குநரின் அத்துமீறல்..!

“மேடம், சுனிதா, புஜ்ஜி, கண்ணா” – இயக்குநரின் அத்துமீறல்..!

பிரபல சினிமா பின்னணி பாடகியான சுனிதா தன்னிடம் ஒரு திரைப்பட இயக்குநர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகியான சுனிதா இவர் தமிழில் ‘காதல் ரோஜாவே’ படத்தில் ‘நினைத்த வரம்’ பாடலையும் பத்ரி’ படத்தில் ‘காதல் சொல்வது உதடுகள் இல்லை’ பாடலையும் பாடி தமிழில் பிரபலமானார்.

தற்போது 42 வயதாகும் அவர் சமீபத்தில்தான் தனது டீன் ஏஜ் பிள்ளைகள் முன்பாக இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக திரைப்பட இயக்குநர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சுனிதா புகார் கூறியுள்ளார்.

இது குறித்து சுனிதா அளித்துள்ள பேட்டியில், “நான் ஒரு படத்துக்காக டப்பிங் பேச ஸ்டூடியோவுக்கு சென்றபோது அந்த படத்தின் இயக்குநர் மரியாதையோடு மேடம் என்று சொல்லி அழைத்தார். “நான் உங்கள் தீவிர ரசிகன். எனது படத்தில் நீங்கள் பணியாற்றுவது என்னுடைய அதிர்ஷ்டம்…” என்றார்.

ஆனால் சில வரிகளை பேசி முடித்த பிறகு சுனிதா’ என்று மட்டும் பெயர் சொல்லி அழைத்தார். டப்பிங் வேலையை முடித்து கிளம்ப தயாரானதும் புஜ்ஜி’, ‘கண்ணா’ என்று அழைக்க தொடங்கினார்.

ஆரம்பத்தில் மரியாதையோடு பேசிய அவர், அதன் பிறகு செல்லப் பெயர் வைத்து அழைத்தது ஏன் என்று தெரியாமல் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தேன். அந்த இடத்திலேயே அவரைப் புறக்கணிக்கத் தொடங்கினேன். அதிர்ஷ்டவசமாக அதற்குப் பின்னர் இன்றுவரையிலும் அவரை நான் சந்திக்கவே இல்லை..” என்றார் சுனிதா.

சுனிதா குற்றம் சாட்டிய இயக்குநர் யார் என்ற பரபரப்பு தெலுங்குத் திரையுலகத்தில் ஏற்பட்டு உள்ளது.

Our Score