‘சிட்டிஸன்’, ‘ஏபிசிடி’ என்ற படங்களை இயக்கிவர் இயக்குநர் சரவண சுப்பையா. இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மீண்டும்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தில் கதிரவன், அனைகா, சுப்ரமணியம் சிவா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, டி.கே.சண்முகம், கேபிள் சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
“இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் அதிர்ச்சியைத் தரக் கூடியது” என்று இப்போதே பயமுறுத்துகிறார் இயக்குநர் சரவண சுப்பையா.
படம் பற்றி இயக்குநர் சரவண சுப்பையா பேசுகையில், “இந்த ‘மீண்டும்’ படத்தின் கதையை இப்போதே சொல்வதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. இது ஒரு வகையான ஸ்பை திரில்லர் திரைப்படம்.
தமிழகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அது வெறும் விபத்தாக கடந்துவிட்டது. எல்லாரும் இ்ப்போது மறந்தேவிட்டார்கள்.
ஆனால், அது இயற்கையாக நடந்த சம்பவம் அல்ல. சர்வதேச நாடுகளின் சதி என்பதுதான் நான் சொல்ல வருவது.
அந்தச் சம்பவத்தைப் பற்றி ஒரு உளவாளி துப்பறிகிறார். அவர் ஏன் இத்தனையாண்டுகளுக்குப் பிறகு அதைத் துப்பறிய வேண்டும்..? அவர் என்ன கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
இதற்கிடையில் ஒரே பெண்ணை இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொள்கிற ஒரு காதல் நாடகக் கதையும் இந்தப் படத்தில் இருக்கிறது. அந்த உளவாளி கதைக்கும் இந்த காதல் கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதற்கான பதிலும் படத்தில் இருக்கிறது..” என்று சஸ்பென்ஸாகவே சொல்கிறார் இயக்குநர் சரவணன் சுப்பையா.
20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த கதை என்றால் அதை எப்படி தேடுவது..?