full screen background image

நயன்தாரா இருந்தும் காதல் காட்சிகள் இல்லையாம் – ‘மாஸ்’ படத்தின் மாஸ்..!

நயன்தாரா இருந்தும் காதல் காட்சிகள் இல்லையாம் – ‘மாஸ்’ படத்தின் மாஸ்..!

சூர்யா நடிப்பில் அடுத்து வரவிருக்கும் புதிய படம் ‘மாஸ்’. இந்தப் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, பிரணிதா இருவரும் நடித்திருக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.எல்.பிரவீன் எடிட்டிங். ராஜீவன் கலை இயக்கம் செய்திருக்கிறார். உடைகளை வாசுகி பாஸ்கர் வடிவமைத்திருக்கிறார்.

வெங்கட்பிரபு எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்தின் பிரேம்ஜியும் அடக்கம். கூடுதல் போனஸாக கருணாஸ், சஞ்சய், sreeman ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பிரஸ்மீட் நேற்று மாலை ரெஸிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. ஹீரோயின்களைத் தவிர மற்ற அனைவருமே வந்திருந்தனர். முதலில் டிரெயிலரும், 2 பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன.

படத்தின் டிரெயிலரை பார்த்தபோது சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருப்பது உறுதியாகியிருக்கிறது. அதில் ஒரு கேரக்டர் பேய் போன்ற மேக்கப்பில் இருக்கிறது. பொதுவாக பெண்களைத்தான் பேயாக காட்டுவார்கள். இதில் ஒரு மாறுதலுக்காக ஹீரோவே பேயாக வருகிறார்.

டிரெயிலரின் துவக்கத்தில் ‘நான் வருவேன்னு எதிர்பார்க்கலீல்ல..’ ‘இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலீல்ல’ என்ற வசனத்துடன்தான் சூர்யா அறிமுகமாகிறார். ஆக.. பேய்க் கதையின் வடிவத்தில் ஹீரோயிஸ கதையாக இருக்கலாம்.

பாடல் காட்சிகளில் நயன்தாரா தென்பட்டார். அழகோ.. அழகு.. வண்ணமயமான காட்சிகளின் கலவை. செலவைப் பற்றிக் கவலைப்படாமல் செட்டுகளை அமைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

IMG_1155

“படத்துல சூர்யாவோட பெயர் மாசிலாமணி. ‘மாஸ்’ன்னு சுருக்கமாக கூப்பிடுவாங்க. அதையே டைட்டிலா வைச்சிட்டோம். படம் குடும்பமாக அமர்ந்து பார்ப்பதற்கு ஏற்ற படம். இதில் டாஸ்மாக் காட்சிகள் இல்லை. சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இல்லை. குத்துப் பாடல்கள் இல்லை. ஆபாச நடனங்கள் இல்லை. அதீத வன்முறை இல்லை. என்னோட படம்தான். ஆனால் இதெல்லாம் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் என்னோட முதல் படம் இது…” என்றார் வெங்கட்பிரபு.

மேலும் அவர் பேசுகையில், “இந்தப் படம் துவங்கியபோது ஒரு திருமண நிகழ்ச்சியில் சிவக்குமார் ஸாரை பார்த்தேன். ‘அடுத்து சூர்யாவை வைச்சு பண்றியா?’ன்னு கேட்டார். ‘ஆமாம்’ன்னு சொன்னேன். ‘பார்த்து நடந்துக்க..’ என்று பயமுறுத்தினார். ஆனால் ஷூட்டிங்ல அதெல்லாம் தெரியலை. கார்த்தியைவிடவும் சூர்யா எனக்கு பிரெண்டு பிடிக்க பெட்டரா தோணுது. அவ்ளோ சாப்ட்டு. கொஞ்சம் ஜாலி டைப். அதுனால ஒரு பிரச்சினையுமில்லாமல் ஷூட்டிங் முடிஞ்சது.

ஷூட்டிங் டைம்லகூட கேரவன் வேனுக்குள்ள போகாமல் வெளில எங்க பக்கத்துலயே சேர் போட்டு உக்காந்து பேசுவாரு. அடுத்து நான் எடுக்கப் போற ஷாட்டையெல்லாம் கவனமா பார்ப்பாரு. நயன்தாராவுக்கும் சூர்யாவுக்கும் படத்துல லவ் சீன்ஸ் எதுவும் இல்லை. அதெல்லாம் இல்லாமல் டூயட்டுகள் இருக்குற மாதிரியான ஒரு படம் இது.

இந்தப் படம் கருணாஸுக்கு 101-வது படம். எடிட்டர் பிரவீனுக்கு 50-வது படம். ஆர்.டி.ராஜசேகருக்கு 25-வது படம். வாசுகிக்கும் 50-வது படம். இப்படி படத்தில் இடம் பெற்றிருக்கும் சிலருக்கு சாதனை படமாக இது அமைந்திருக்கிறது. அடுத்து சூர்யா ஸாரின் 50-வது படத்தையும் நானே இயக்கணும்னு நினைச்சிருக்கேன்..” என்றார்.

IMG_1318

சூர்யா பேசும்போது, “நானும் வெங்கட் பிரபுவும் முன்பே இணைந்திருக்க வேண்டியது. தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. நாங்கள் சேர்ந்து ஒரு படத்தில் பணி புரியலாம் என்று முடிவானதும் நிறைய பேர் நம்பவில்லை. நீங்க ரெண்டு பேரும் படம் பண்றீங்களான்னே நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க.

வெங்கட்பிரபு பற்றி என் தம்பி கார்த்தி நிறையவே சொல்லியிருக்கான். வெங்கட் பிரபு பிரமாதமா நடித்துக் காட்டுவார். நீ எதுவுமே செய்ய வேண்டாம். அவர் சொல்லித் தர்ற மாதிரி நடிச்சாலே போதும்ன்னு சொல்லியிருக்கான். மாஸ் எங்கள் இருவருக்கும் வேற ஒரு பரிமாணமாக இருக்கும்.

இந்த மாஸ் படம் குழந்தைகளுக்கும் பிடிக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும். பெரியவர்கள் சம்பந்தப்பட்ட படம்தான் என்றாலும் குழந்தைகளுக்கும் புரிய வேண்டும் என்று நினைத்து திட்டமிட்டு திரைக்கதை அமைத்துள்ளோம். 

பேய் சம்பந்தப்பட்ட கதை என்பதால் முதலில் நானும்தான் பயந்தேன். இப்பத்தான் வரிசையா 40 பேய்ப் படங்கள் வந்திருக்கே.. இது சரி வருமான்னு தயங்கினேன்.

ஆனால் மாஸ் வெறும் பயமுறுத்தும் படமாக மட்டும் அமையவில்லை. அதையும் தாண்டி ரசிக்க படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன. நயன்தாரா, பிரணிதா, சமுத்திரக்கனி, பார்த்திபன் என எல்லாரும் தங்களால் முடிந்த அளவுக்கு பெரிய மனசுடன் தங்களின் திறமையை பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

இதில் உடல் எடையைக் கூட்டியோ குறைக்கவோ வேண்டிய காட்சிகளெல்லாம் இல்லை. கதைக்குத் தேவையில்லாமல் உடலை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமிலலை. அதேபோல் படத்துக்கு படம் சட்டையைக் கழற்றிக் கொண்டிருக்கவும் தேவையில்லை.

வெங்கட் பிரபு பேசும்போது சொன்னார்.. ‘நான் கேரவனுக்கே போகாமல் வெளியில் அவர்களுடனேயே உட்கார்ந்திருந்தேன்’னு.. நான் ஏன் வெளில வந்து உக்காந்தேன்னா.. அடுத்த ஷாட் எப்போ..? டயலாக் பேப்பர்ஸ் எங்கேன்னு கேட்டால்கூட இந்த யூனிட்ல கிடைக்காது.. அதான் பேசாம அவங்க பக்கத்துல போய் உக்காந்துட்டேன். இப்போ வேலை கரெக்ட்டா நடந்துச்சு.. அதுக்காகத்தான்..” என்று கூட்டத்தை கலகலக்க வைத்தார். வழக்கம்போல இவரும் கதை என்ன என்பதை சொல்ல மறுத்துவிட்டார். “படத்தைப் பாருங்க. நிச்சயம் குடும்பத்தோட என்ஜாய் பண்ற மாதிரியான படமாத்தான் இருக்கும். நிச்சயம் போரடிக்காது. உங்களை ஏமாற்றாது..” என்று உறுதிமொழி தந்தார் சூர்யா.

கேள்வி-பதில் சீஸனின்போது “நயன்தாராவும் பேயா நடிச்சிருக்கீங்களா..?” என்று கேட்டதற்கு வெங்கட்பிரபுவிடம் இருந்து மைக்கை பிடுங்கி பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “இதை மட்டும் அவங்க கேட்டாங்க. அவ்ளோதான்.. ஏற்கெனவே படத்துல டூயட் சீனே இல்லையேன்னு எங்க மேல கொலை வெறில இருக்காங்க…” என்றார் சிரித்தபடியே..!

நயன்தாராவை வைச்சுக்கிட்டும் டூயட் இல்லைன்னா எப்படிங்க டைரக்டர் ஸார்..?

Our Score