full screen background image

‘மாநகர காவல்’ படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜனின் பரிதாப மரணம்..!

‘மாநகர காவல்’ படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜனின் பரிதாப மரணம்..!

 

ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில்  விஜயகாந்த் நடிப்பில் அவரது 150-வது படமாக ‛மாநகர காவல்’ என்ற வெற்றி படத்தை தந்த இயக்குநர் எம்.தியாகராஜன் இன்று சென்னையில் அதே ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு எதிரில் அனாதையாக இறந்து கிடந்தார்.

தியாகராஜன் கடந்த சில வருடங்களாக மன நிலை பாதிக்கப்பட்டு சென்னை வடபழனியில் இருக்கும் ஏவி.எம். ஸ்டூடியோவின் எதிரேயிருக்கும் பிளாட்பாரத்திலேயே வசித்து வந்தார்.

அந்தப் பகுதியில் இருப்பவர்கள் வாங்கிக் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அங்கேயே இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.

சில நேரங்களில் சரியாகவும், பல நேரங்களில் மனநிலை பிறழ்ந்தவராகவும் தியாகராஜன் இருந்து வந்ததால் அவரது குடும்பத்தினரே அவரை கைட்டுவிட்டனர்.

இத்தனை வருடங்களாக வடபழனியைச் சுற்றியுள்ள தெருக்களில் அநாதையாக அலைந்து திரிந்து கவனிப்பாரின்றி இருந்தவர் நேற்று இரவில் இறந்துவிட்டார் போலிருக்கிறது. இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் அக்கம், பக்கத்தினர் அவரை எழுப்பியிருக்கிறார்கள். அதன் பின்புதான் அவர் இறந்து போயிருப்பது தெரிய வந்திருக்கிறது.

உடனேயே சென்னை ‛மாநகர காவல்’ துறையினர் ஸ்பாட்டுக்கு வந்து தியாகராஜனின் உடலைக் கைப்பற்றி அதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாநகர காவல்’ என்ற பெயரில் படம் எடுத்த இயக்குநரை திரையுலகினர் கைவிட்ட நிலையில் ‘மாநகர காவல் துறை’யே கடைசியில் உதவி செய்தது தற்செயலாக அமைந்துவிட்டது.

மாநகர காவல் படம் மட்டுமில்லாமல், பிரபு நடித்த ‛வெற்றி மேல் வெற்றி’, ‛பொண்ணு பார்க்க போறேன்’ ஆகிய படங்களையும் தியாகராஜன் இயக்கியிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த தியாகராஜன் திரைப்பட கல்லூரியில் இயக்குநர் கோர்ஸ் படித்தவர். ஆரம்பக் காலத்தில் சொந்த ஊரில் ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று பின் அதிலிருந்து மீண்டு வந்துதான் சினிமாவில் 3 படங்கள் இயக்கியிருந்தார்.

3 படங்களை இயக்கிய பின்பு அவரால் தமிழ்ச் சினிமாவில் பெரிய இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவரது உடல் நிலையில் ஏற்பட்ட தொய்வும், நோயும் அவரை வீழ்த்திவிட்டன.

கடந்த சில வருடங்களாக வடபழனியில் அழுக்கான உடை, கையில் செய்தித் தாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார்.

சினிமாவில் வெற்றி மேல் வெற்றி’ என்று அவர் படம் கொடுத்திருந்தாலும் நிஜ வாழ்வில் அவர் வெற்றி மேல் வெற்றி பெறாதது சோகம் என்றாலும் இப்படி அனாதையாக இறந்து கிடந்தது பெரும் துயரம் என்றே சொல்லலாம்.

மறைந்த எம்.தியாகராஜன் தம்பியான விஜயகுமார், நடிகர் விஜயகாந்தின் கட்சியான திராவிட முற்போக்கு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அருப்புக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நாளை அருப்புக்கோட்டையில் மறைந்த இயக்குநர் எம்.தியாகராஜனின் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிகிறது.

Our Score