இந்திய திரைத்துறையில் மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம்.
பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருக்கும் அடுத்த படைப்பு இது.
இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் இந்தப் பிரம்மாண்டமான படத்தை Lyca Productions நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜாவும், DVV Entertainment சார்பில் தானய்யாவும் இணைந்து வழங்குகிறார்கள்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இந்த “RRR” திரைப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, நடிகர் சமுத்திரக்கனி உட்பட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன.
வரும் ஜனவரி 7-ம் தேதி உலகமெங்கும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது.
இதையொட்டி நேற்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான முன்னோட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குநர் S.S.ராஜமௌலி, Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் N.V.பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா, நடிகர் ராம்சரண், நடிகர் ஜீனியர் என் டி ஆர், ஆலியாபட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை ஆலியா பட் பேசும்போது, “நான் என் திரைப்பயணத்தை இங்கு தமிழில்தான் ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. RRR படத்தை காண நானும் மிக ஆவலாக இருக்கிறேன். எனக்கு இப்படத்தில் நடித்தது ஒரு கனவு நனவானது போன்றுதான் இருந்தது. உங்களுக்கு இப்படம் மிகப் பெரிய சந்தோஷத்தை தரும்.
பாலிவுட் படத்தில் மட்டும் நடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. ஒரு இயக்குநர்தான், நான் நடிப்பதை முடிவு செய்ய வேண்டும், இயக்குநரின் பார்வைதான் முக்கியம். நான் அனைத்து மொழிகளிலும் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். இப்படத்தில் என்னை மிக மிக கவனமாகப் பார்த்து கொண்டார்கள். இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிக இனிமையான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது ரசிகர்களின் அன்பை பார்த்து மிரண்டுவிட்டேன். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன்…” என்றார்.
நடிகர் ராம் சரண் பேசும்போது, “இங்கு வந்து தமிழக ரசிகர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. ராஜமௌலி உடன் எப்போது வேலை பார்த்தாலும் அது சவாலானதாகத்தான் இருக்கும். அவர் ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் மிக தெளிவாக வரையறை செய்திருப்பார். அது எப்படி திரையில் வரவேண்டும் என்பது அவருக்கு தெரியும்.

இப்படத்தில் வரலாற்று நாயகர்களை ஹீரோவாக படைத்திருக்கிறார்.அதை திரையிலும் சரியாக கொண்டு வர நாங்கள் உழைத்திருக்கிறோம். படத்தில் வேலை செய்தபோது சில காட்சிகளில் நடிக்கும்போது, என்.டி.ஆர். ஃப்ரீயாக இருப்பார். அதைப் பார்த்தபோது, அவரது கேரக்டரை நான் செய்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்திருக்கிறேன். நான் சென்னையில்தான் பிறந்தேன். தமிழ் என் இரண்டாவது தாய் மொழி. இப்படத்தில் தமிழில் பேசியது மிகச் சிறப்பான அனுபவமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. தமிழ் ரசிகர்கள் நிச்சயமாக இப்படத்தைக் கொண்டாடுவார்கள்…” என்றார்.
நடிகர் ஜீனியர் என்.டி.ஆர். பேசும்போது, “உங்களுடன் கலந்துரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜமௌலி எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதுவே எனக்கு ஒரு பயத்தைத் தந்தது. ஒரு நடிகருக்கு இயக்குநர் நம்புவதை தருவது சவாலானது. அதை எங்களால் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறோம்.

எனக்கும் ராம்சரணுக்கு தோன்றிய அதே எண்ணம்தான் தோன்றியது. நான் கஷ்டப்பட்டு நடிச்சிட்டிருக்கும்போது அவர் பேக்கப் பண்ணி போய் கொண்டிருப்பார். “என்னை விட்டுட்டுட்டு போறியா.. இரு நானும் வர்றேன்…” என்பேன். இந்தப் படத்தில் நடித்ததே ஒரு புது அனுபவமாக இருந்தது. பாகுபலி இந்தியா முழுதையும் ஒன்றாக்கியது. எந்த நடிகரும் எந்த மொழியிலும் நடிக்கலாம். விஜய் சாரின் மாஸ்டர் படம் தெலுங்கில் மிக பெரிதாக வெற்றி பெற்றது. ஒரு நாள் இந்திய அளவில் ஒரு பிரம்மாண்டமான படம் உருவாகும். அதில் தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் ஒன்றாக நடிக்க வாய்ப்புள்ளது. தென்னிந்திய சினிமா பிறந்தது சென்னையில்தான். சிரஞ்சீவி சார் பிறந்ததே இங்குதான். தமிழுக்கும், சினிமாவுக்குமான தொடர்பு மறுக்க முடியாதது.
இப்படத்தில் கார்க்கி, விஜய் இருவரும் மிகச் சிறப்பாக எங்களுக்கு தமிழ் சொல்லி தந்தார்கள். தமிழை சரியாக கஷ்டப்பட்டு பேசியிருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தை ரசிப்பார்கள்…” என்றார்.
இயக்குநர் S.S.ராஜமௌலி பேசும்போது, “நாம் எவ்வளவு பெரிய ஆளானாலும் படிச்ச ஸ்கூலுக்கு வந்தா பயமா இருக்கும். அது மாதிரிதான் சென்னை எனக்கு. எனக்கு சினிமாவைக் கற்று தந்தது சென்னைதான். அந்த பயம் எனக்கு இருக்கிறது.

ஒரு பெரிய படம் என்பதை எடுக்கும்போதே யாரும் நிர்ணயிக்க முடியாது. நாங்கள் எங்கள் முழு உழைப்பையும் தந்து படத்தை உருவாக்குகிறோம், இறுதியில் ரசிகர்கள்தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும்.
ரஜினி சாரை வைத்து படமெடுக்க நீங்கள் சொல்வதில் எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு கதை எழுதி அதில் யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவரை நடிக்க வைக்க வேண்டும். கதைதான் நாயகனை தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ‘பாகுபலி’ எல்லோருக்கும் பிடிக்க காரணம் அதன் மொழி அல்ல. அதன் எமோஷன்தான். அதேபோல் இந்த ‘RRR’ திரைப்படம் ‘பாகுபலி’யைவிட எமோஷனாலாக ரசிகர்களை ஈர்க்கும்.
ராம் சரண், என்.டி.ஆர்., ஆலியா பட் எல்லோருக்கும் சமமான திரை அனுபவத்தை தருவது ஒரு படைப்பாளனாக எனக்கு சவாலாகதான் இருந்தது. ஆனால் என் கதை அதை செய்திருக்கிறது. ராம்சரண், என் டி ஆர் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களை கதை எழுதிய கணத்தில்தான் முடிவு செய்தேன்.
இந்த இரு கேரக்டர்களும் வரலாற்றில் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அதுவே கேட்க அதிசயமாக இருந்தது. வரலாற்றில் ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்ந்த நாயகர்கள். உண்மையில் அவர்கள் சந்தித்ததில்லை. சந்தித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்தப் படம்.
இந்தப் படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகளை மட்டும் ஒன்றரை வருடம் செய்திருக்கிறோம். நான் இந்தப் படத்தை தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில்தான் எடுத்திருக்கிறேன். என் சிந்தனை தெலுங்கு. அதை மாற்ற முடியாது. ஆனால் தமிழில் நடக்கும் கதையை இயக்கும்போது, இங்கு வந்து கண்டிப்பாக இயக்குவேன்.
‘பாகுபலி’ மாதிரி நினைத்து வராதீர்கள் என்று சொல்லவில்லை. ரசிகர்கள் மனதில் இருந்து ‘பாகுபலி’யை மறக்கடிக்க முடியாது. ‘பாகுபலி’யில் உள்ள எல்லாம் இதில் இருக்காது. ஆனால் அதில் இருந்த எமோஷன் இந்தப்படத்திலும் இருக்கும். ரசிகர்கள் இந்தப் படத்தை நிச்சயமாகக் கொண்டாடுவார்கள்…” என்றார்.