நடிகர் மோகன்லால் நடித்துள்ள இந்த ‘மரைக்காயர் – அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படம் 100 கோடி செலவில் உருவாகியுள்ளது.
மலையாளத் திரையுலக வரலாற்றில் அதிகப் பொருட் செலவில் உருவாகியுள்ள முதல் திரைப்படமும் இதுதான்.
இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, சித்திக், முகேஷ், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், நெடுமுடி வேணு, சுஹாசினி, இன்னசென்ட், மம்முகோயா, அசோக்செல்வன், கே.பி.கணேஷ்குமார், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து & இயக்கம் – பிரியதர்ஷன், தயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ் (ஆண்டனி பெரும்பவூர்), இணை தயாரிப்பு – D.R.ராய் C.J., சந்தோஷ் T.குருவில்லா, தமிழ்நாடு வெளியீடு – V கிரியேஷன்ஸ் கலைப்புலி S.தாணு, தயாரிப்பு வடிவமைப்பு – சாபு சிரில், வசனம் – R.P.பாலா, ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு, இசை – ரோனி நபேல், பின்னணி இசை – ராகுல் ராஜ், அன்கித் சூரி, லில் இவான்ஸ் ரோடர், நடனம் – பிருந்தா, பிரசன்னா, நிர்வாக தயாரிப்பு – சுரேஷ் பாலாஜி ,ஜார்ஜ் டயல்.
2020-ம் ஆண்டுக்கான சிறந்த டப்பிங் கலைஞர், சிறந்த நடன இயக்கம், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்க்கான மாநில அரசின் விருதினைப் பெற்றது.
2021-ம் ஆண்டில் இ்ந்தியாவிலேயே சிறந்த திரைப்படமாகவும், சிறந்த உடையலங்காரம் மற்றும் சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்க்கான மூன்று தேசிய விருதுகளையும் இத்திரைப்படம் பெற்றது.
இத்திரைப்படம் 2019-ம் ஆண்டிலேயே முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருந்தது. இருந்தாலும் கொரோனா பரவலால் வர முடியாமல் முடங்கிக் கிடந்தது. தற்போது மிகுந்த போராட்டத்திற்கிடையில் இந்தப் படம் திரைக்கு வந்திருக்கிறது.
நேரம் : 3 மணி நேரம் 1 நிமிடம்
குஞ்ஞாலி மரைக்காயர் என்பது 1500-களில் கோழிக்கோடு பகுதியை ஆண்டு வந்த சாமுத்ரி மன்னனின் கடற்படைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். மலையாள வரலாற்றில் நான்கு பேர் இந்த குஞ்ஞாலி மரைக்காயர் என்ற பதவியை வகித்திருந்தனர்.
பதினாறாம் நூற்றாண்டுகளில் இவர்கள் போர்த்துகீசியர்களுக்கு எதிராக 1502-ல் தொடங்கி 1600-கள்வரை சாமுத்ரி மன்னரின் கடற்படையில் தளபதியாக இருந்து சிறப்பாக போர் புரிந்துள்ளனர். இவர்களில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் கேரளாவில் இன்றளவும் பிரபலமானவர்.
இந்தியக் கடற்கரையில் முதன் முறையாய்க் கடற்படைப் பாதுகாப்பு தளத்தை ஒருங்கிணைத்தவர்கள் இந்தக் குஞ்ஞாலி தளபதிகள்தான்.
குஞ்சாலிகளுக்கான பட்டங்கள் சாமுத்ரி மன்னர்களால் வழங்கப்பட்டன. ‘மரக்கலம்‘ என்ற வார்த்தையை தழுவிதான் இவர்கள் ‘மரைக்காயர்’ என அழைக்கப்பட்டனர்.
இவர்களில் முதலாம் குஞ்ஞாலி 1520-1531, இரண்டாம் குஞ்ஞாலி 1531-1571, மூன்றாம் குஞ்ஞாலி 1571-1595, நான்காம் குஞ்ஞாலி 1595-1600 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்திருந்தனர். இவர்களில் இந்தக் கதை கடைசி குஞ்ஞாலியான நான்காம் குஞ்ஞாலி என்ற முகம்மது அலியைப் பற்றிய வரலாற்றுக் கதையாகும்.
முகம்மது அலி என்ற குஞ்ஞாலியின் குடும்பம் உறவினர்களின் துரோகத்தால் போர்த்துக்கீசியர்களின் உதவியுடன் அழிக்கப்படுகிறது. குஞ்ஞாலியின் திருமணத்திற்காக மணமகளின் ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது அப்பா, அம்மா, காதலி மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் இழக்கிறார் இளம் வயது குஞ்ஞாலி.
அங்கேயிருந்து தனது சித்தப்பாவுடன் தப்பிக்கும் அலி, தனது குடும்பத்தைக் கொலை செய்த உறவினரை படுகொலை செய்கிறார். இதனால் அவர் தன்னுடைய சொந்த நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக்கப்படுகிறார்.
இதையடுத்து இவரும் இவரது சித்தப்பாவும் சாமுத்ரி நாட்டுக்கு சென்று தஞ்சம் அடைகிறார்கள். சாமுத்ரி மன்னனான நெடுமுடி வேணு குணத்தில் தங்கமாக இருந்தாலும் அவரைச் சுற்றியிருப்பவர்கள் கெட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
மக்களிடமிருந்து வரியைப் பிடுங்குபவர்கள் மக்களுக்கு அரசி கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு ராஜா கொடுக்கச் சொன்ன அரிசியை சிலர் பதுக்கி வைப்பதை நேரில் பார்க்கும் அலி, அவர்களிடமிருந்து அரிசியை பறித்து ஏழை மக்களுக்குக் கொடுக்கிறார்.
இது தொடர்கதையாகிப் போக மிக சுலபமாக அந்தப் பகுதி மக்களின் ராபின்ஹூட்டாக மாறுகிறார் ‘அலி’ என்ற மோகன்லால். இப்போது மோகன்லால் தேடப்படும் குற்றவாளியாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் தனக்கென்று தனியாக ஒரு இடத்தைப் பிடித்து அங்கே தனது ஆட்களுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நேரத்தில் போர்த்துக்கீசியர்கள் பெரும் படையோடு வருவதை அறிகிறார் சாமுத்ரி மன்னர். போர்த்துக்கீசிய படையை தன் படையினரால் தடுப்பதோ, அழிப்பதோ முடியாத காரியம் என்பதை உணர்கிறார் சாமுத்ரி மன்னர்.
பிரதான மந்திரியின் உதவியோடு கடல் போரில் சிறந்து விளங்கும் மோகன்லாலுடன் கூட்டணி வைத்து போர்த்துக்கீசியர்களை வெல்ல முடிவெடுக்கிறார் சாமுத்ரி மன்னர்.
பிரதான மந்திரியான ஹரீஷ் பெராடியின் மூத்த மகன் அர்ஜூன் தரைப்படையின் தளபதியாகவும், இரண்டாவது மகன் அசோக்செல்வன் கடற்படை தளபதியாகவும் இருக்கிறார்கள்.
இவர்களில் அசோக் செல்வனிடம் இருக்கும் கடற்படை தளபதி பதவியைப் பறித்து மோகன்லாலிடம் கொடுக்கிறார் சாமுத்ரி மன்னர். இதனால் அசோக் செல்வனுக்கு மோகன்லால் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு ஏற்படுகிறது.
மோகன்லாலும் தனது படை மற்றும் சாமுத்ரி மன்னரின் படையினருடன் இணைந்து போர்த்துக்கீசியர்களை எதிர்கொண்டு அவர்களை அழிக்கிறார்.
இந்த நிலையில் இன்னொரு முக்கிய அமைச்சரான முகேஷின் மகள் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் அசோக் செல்வன். ஆனால் கீர்த்தியோ, மோகன்லாலிடம் மெய்க்காப்பாளராக இருக்கும் சீன வீரனை காதலிக்கிறார்.
தங்களது காதலுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் நேரத்தில் கீர்த்தியும், சீன வீரனும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு மோகன்லாலிடமே வந்து தஞ்சம் அடைகிறார்கள்.
ஏற்கெனவே தம்பிக்கு கீர்த்தியை மணம் முடித்து வைப்பதாக வாக்கு தந்திருந்த அர்ஜுன், இந்தச் செய்தியறிந்து குழப்பமாகிறார். மோகன்லாலுடன் நல்ல நட்பில் இருக்கும் அர்ஜூன் உண்மை நிலவரம் அறிந்து கீர்த்தியை அழைத்துப் போக மோகன்லாலின் இருப்பிடத்திற்கு வருகிறார்.
அங்கே வந்த இடத்தில் அசோக் செல்வனின் சூழ்ச்சியால், அடுத்தடுத்து மூன்று உயிர்கள் பலியாகின்றன. இதனால் மோகன்லாலுக்கும், சாமுத்ரி மன்னனுக்கும் இடையில் பிளவு ஏற்படுகிறது. இந்தப் பிளவை கச்சிதமாக நிரந்தரமான பிளவாக மாற்றுகிறார்கள் சாமுத்ரி மன்னனின் உறவினர்கள்.
ஒரு கட்டத்தில் மன்னருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, மன்னரின் மருமகன் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறார். இவர் போர்த்துக்கீசியர்களின் சொல்படி ஆட்சியை நடத்த முற்படுகிறார். இதனால் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது.
மோகன்லாலை கொலை செய்ய சகல தரப்பினரும் திட்டம் திட்டி கை கோர்க்கிறார்கள். இவர்களின் இந்தக் கொலை வெறியை மோகன்லால் எப்படி சமாளிக்கிறார்..? இறுதியில் அவருடைய நிலைமை என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
‘குஞ்ஞாலி மரைக்காயர்’ கேரக்டரில் மோகன்லால் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அவரது உடைகள், அணிகலன்கள்.. குதிரை மேல் அமர்ந்து அவர் வரும் கம்பீரத் தோற்றமும், இந்த வயதிலும் சண்டை காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் வேகம், ஈடுபாடு… இதெல்லாம் இவரைத் தவிர வேறு யாரும் இந்தக் ‘குஞ்ஞாலி மரைக்காயர்’ கதாபாத்திரத்தை செய்திருக்கவே முடியாது என்றே சொல்ல வைக்கிறது.
அவரது இளமைப் பருவ கதாபாத்திரமாக அவரது மகன் பிரணவ் மோகன்லாலே நடித்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்காக அதிகம் மெனக்கெட்டு நம் மனதில் நிற்கிறார்.
இவருடைய பாசமான அம்மாவாக சுஹாசினி. தோளுக்கு மேல் வளர்ந்த மகனை இன்னமும் குழந்தையாகவே பாவிக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சும் ரசிக்கக் கூடியதே.
சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நிற்கிறார் பிரணவ்வின் காதலியான கல்யாணி பிரியதர்ஷன். அழகான தோற்றத்தில் அந்த ஒரு பாடலுக்கு காதலர்களின் நடனமும், காட்சியமைப்புகளும் பிரியதர்ஷனின் இயக்கத் திறமை இன்னமும் தேய்ந்துவிடவில்லை என்பதைக் காட்டியிருக்கிறது.
தவறு செய்பவன் தம்பியே ஆனாலும் தவறுதான் என்று நியாயமாகப் பேசும் தரைப்படை தளபதியாக அர்ஜுன். மோகன்லாலை முதலில் சரியாகப் புரிந்து கொள்ளும் நண்பனாகவும், கடைசி நேர குழப்பத்தில் மோகன்லாலேயே சாவை எதிர்கொள்ளும் நண்பனாகவும் நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் தான் இன்னமும் கிங் என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜூன்.
இன்னொரு பக்கம் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.. ஒரு குறு நில மன்னராக.. தன்னுடைய உறவுகளுடன் சேராமல் மோகன்லாலுக்கு பக்க பலமாக இருக்கிறார்.
சாப்பாட்டு ராமனாக, மோகன்லாலின் இளமைக் கால நண்பனாக குண்டு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரபு, அவ்வப்போது புன்னகைக்க வைத்திருக்கிறார்.
மோகன்லாலின் மேல் பொறாமை கொண்டு அவரைக் கொல்ல நினைக்கும் இள வயது ரத்தம் பாய்ந்த இளைஞனாக அசோக் செல்வன் இயல்பாக நடித்திருக்கிறார்.
அழகு தேவதையான கீர்த்தி சுரேஷின் நடனத் திறமையையும், நடிப்பு திறமையையும் ஒரு சேர இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். அதற்கான ஸ்கோப்பும் படத்தில் இருக்கிறது என்பது உண்மை. இவருடைய காதலரான அந்த சீன வீரரின் தாய்ப் பாசமும், சண்டையிடும் திறனும் சூப்பர்ப் என்று சொல்ல வைத்திருக்கிறது.
கணவனை இழந்த கோபத்தில் பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் பெண்ணாக மஞ்சு வாரியர். அதிகமாக நடிப்பைக் காட்டும் வேடமில்லை என்றாலும் முக்கியமான படம் என்பதால் ஒரு வேடம் கொடுத்திருக்கிறார்கள் போலும்.
இவர்களை தாண்டி மேலும் சித்தப்பாவாக நடித்திருக்கும் சித்திக், நல்ல மனம் கொண்ட ராஜாவாக மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, தன் மகனின் இறப்புக்கு உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு மோகன்லாலுக்கு நல்ல பெயரை மன்னரிடம் எடு்த்துச் சொல்ல நல்ல அமைச்சராக ஹரீஷ் பெராடி ஆகியோர் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் சிறந்து விளங்குகிறது. கலை இயக்கத்தில் வித்தகரான பாபு சிரிலின் அழகான கலை இயக்கத்தில் அந்தக் கால கேரளாவும், மக்களின் வாழ்க்கை முறைகளும், உடைகளும் இப்போதைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
படம் முழுவதும் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் திருவின் ஒளிப்பதிவு. கடற்போர் காட்சிகளை பிரமிக்க வைக்கும்விதமாக படமாக்கி இருக்கிறார். சண்டை காட்சிகளையும், நடனக் காட்சிகளையும், தர்பார் காட்சிகளையும் படமாக்கியவிதமே படத்தின் பட்ஜெட்டை சொல்லாமல் சொல்கிறது.
படத்தில் இன்னொரு பாராட்டுக்குரியவர் படத் தொகுப்பாளர். ஒளிப்பதிவாளர் திறமையாக செய்து கொண்டு வந்த படப்பதிவுகளை மிக அழகாக, ரசிக்கும்வகையில் தொகுத்தளித்திருக்கிறார். நிச்சயமாக விருது கொடுக்கும் அளவுக்கு இவரது தொகுப்பாளர் பணி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இந்த இருவரின் கூட்டணியுடன் ஒவ்வொரு காட்சியையும் மேன்மைப்படுத்தியிருக்கிறார் பின்னணி இசையை அமைத்த ராகுல் ராஜ். பதற்றமான காட்சிகளின்போது பார்வையாளர்களுக்கும் அந்தப் பதற்றத்தை தன்னுடைய இசையின் மூலமாகக் கடத்தியிருக்கிறார் ராகுல்ராஜ். அங்கிட் சூரி மற்றும் ரோனி ரபேல் ஆகியோரின் இசையில் பாடல்களும் திருப்தியளிக்கின்றன.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொன்று கிராபிக்ஸ் வித்தைகள்தான்.
இதுவரையிலும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்து வியந்த போர்க் களக் காட்சிகளின் சிலவற்றை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியதில் கிராபிக்ஸ் குழுவினரின் திறமையும், உழைப்பும் பாராட்டக் கூடியது.
சாமுத்ரியின் படைகளுக்கும், மரைக்காயர் படைகளுக்கும் நடக்கும் இறுதி யுத்தமும் சிறப்பான வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கிளைமாக்ஸில் மோகன்லாலில் நடிப்பு ஒரு பக்கம் பார்ப்போரை கண் கலங்க வைக்க அதற்கான பின்னணி இசையும் நம்மை அழுக வைக்கிறது.
இந்தக் குஞ்ஞாலியின் கதை ஏற்கனவே கேரளா முழுவதும் காலம் காலமாகப் பேசப்பட்டு வந்ததுதான் என்பதால் அதன் தன்மை கெடாமல், ஆன்மா கெடாமல் மக்களை திருப்திபடுத்தும் அளவுக்கு மொத்தப் படத்தையும் இயக்கியளித்திருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.
குஞ்ஞாலியை ஏதோ ஒரு மிகப் பெரிய சாதனையாளர் அளவுக்கெல்லாம் உருவகம் கொடுக்காமல் அவரையும் சாமான்ய மனிதர்களில் ஒருவராகவே கதையில் போக்கில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
வரலாற்றுப் படம் என்பதால் மூன்று மணி நேரம் என்பது அதிகமில்லை. வேறு வழியும் இல்லை என்பதுதான் உண்மை. உண்மையில் இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருக்க வேண்டும். பட்ஜெட்டை மனதில் வைத்து ஒரே பாகமாக்கியிருக்கிறார். இதனால் படத்தின் நீளமும் தவிர்க்க முடியாததாகியிருக்கிறது.
ஒரு வரலாற்று படத்தை இந்தப் பட்ஜெட்டில் இப்படிகூட உருவாக்க முடியுமா என்கிற பிரமிப்பை இந்தப் படம் மூலமாக நமக்கு அளித்திருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.
மலையாளத் திரையுலக வரலாற்றில் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய மலையாளப் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
RATING : 4 / 5