கடந்த 2 நாட்களாக டிவிட்டரில் சிம்புவின் ரசிகர்கள் அதகளம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிம்புவின் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக மாறியுள்ள ‘மாநாடு’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியதுதான் இதற்குக் காரணம்.
சென்னையை அடுத்த ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் இருக்கும் பரந்த மைதானத்தில் ‘மாநாடு’ படத்திற்காக ‘மாநாடு’ போன்ற செட் அமைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்திருக்கிறார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், சந்திரசேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தினமும் இரவு நேரத்தில்தான் இங்கே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் துணை நடிகர்களாக 500 பேர் நடிக்கிறார்களாம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பட்ஜெட்டை இந்த 10 நாட்கள் ஷூட்டிங்கே முழுங்கப் போகிறதாம்.
படத்தில் சிம்பு வெடித்துச் சிதறப் போவது ‘முத்தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சிக்கு எதிராகவாம். அவருடைய அப்பாவான டி.ராஜேந்தர் நடத்தி வரும் கட்சியின் பெயர் ‘லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துகிறோம்.
அரசியல் கலந்த படம் என்பதால் இப்போதே இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புவின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தை மிகவும் கொண்டாடி வருகிறார்கள்.