full screen background image

‘ராம் தேரி கங்கா மெய்லி’யில் நடிக்க மறுத்தது ஏன்..? – சொல்கிறார் பத்மினி கோலாப்பூரி..!

‘ராம் தேரி கங்கா மெய்லி’யில் நடிக்க மறுத்தது ஏன்..? – சொல்கிறார் பத்மினி கோலாப்பூரி..!

திரையுலகத்தில் சிலர் நடிக்க மறுத்த திரைப்படங்கள் வேறு சிலரால் நடிக்கப்பட்டு அந்தப் படமும் ஹிட்டாகி அந்தப் புதுமுகங்களுக்கும் ஒரு புதிய வாசலைத் திறந்து வைக்கும். இது இந்தியாவில் அனைத்து மொழிப் படங்களிலும் நடக்கும் கதைதான். நடந்த கதைதான்.

இது மாதிரியான ஒரு கதை பாலிவுட்டின் பிரபலமான இயக்குநரான ராஜ்கபூரின் படத்திலும் நடந்திருக்கிறது.

1985-ம் ஆண்டு ராஜ்கபூர் இயக்கிய ‘ராம் தேரி கங்கா மெய்லி’ என்ற திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்த மந்தாகினி ஒரே நாள் இரவில் இந்தியா அறிந்த நடிகையாக மாறிப் போனார். இதற்குப் பிறகு மந்தாகினி பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாறிப் போனார். உச்சத்திலும் உச்சமாக இந்திய அரசு இப்போதும் தேடி வரும் மும்பை குண்டு வெடிப்பின் நாயகனான தாவூத் இப்ராஹிமின் மனம் கவர்ந்த காதலியாகவும் இருந்தார்.

இந்தப் படத்தில் நடிக்க முதலில் நடிகை பத்மினி கோலாப்பூரியைத்தான் ராஜ்கபூர் அணுகியதாகவும் ஆனால் பத்மினி இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்பதையும் அவரே இன்றைக்கு ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து பத்மினி கோலாப்பூரி பேசுகையில், “ராஜ்கபூர்ஜி இந்தப் படத்திற்காக என்னை அழைத்துப் பேசினார். ஆனால் கதை மற்றும் என் கேரக்டரை கேட்டுவிட்டு நடிக்க மறுத்துவிட்டேன். அந்தப் படத்தில் அதீத கவர்ச்சியான காட்சிகளும், குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற காட்சிகளும், நாயகனான ராஜீவ் கபூருக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகளும் இருந்தன. இதுவும் நான் மறுத்ததற்கு ஒரு காரணம்.

இதனால் மந்தாகினியை வைத்து படத்தைத் துவக்கினார் ராஜ்கபூர்ஜி. ஆனாலும் 55 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பின்பும்கூட ஒரு முறை என்னை அழைத்து நீதான் இந்தப் படத்தில் நடிக்கணும். எனக்கு இப்போதுவரையிலும் திருப்தியில்லை என்று சொன்னார் ராஜ்கபூர்ஜி. ஆனால், நான் அப்போதும் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். எனக்கு படங்களில் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கப் பிடிக்காது. நான் எந்தப் படத்திலும் அதுபோல் நடித்ததே இல்லை. அதனால் ராஜ்கபூர் என் மீது மிகுந்த வருத்தம் கொண்டார். அவருடைய அடுத்தப் படத்திலும் நான்தான் நடிப்பதாக இருந்தது. கடைசியில் அவர் என்னை அழைக்கவேயில்லை..” என்று சொல்லியிருக்கிறார்.

இதே பத்மினி கோலாப்பூரிதான் ஒரு முறை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சினிமா ஷூட்டிங்கை பார்ப்பதற்காக ஸ்டூடியோக்கு வந்திருந்தபோது எதிர்பாராமல் திடீரென்று அவரைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து பரபரப்பாக்கினார். இந்தியா முழுவதும் ஒரே நாளில் இப்படித்தான் பத்மினி கோலாப்பூரி பிரபலமானார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை..!

Our Score