ஏற்கெனவே ‘இந்தப் புள்ளைக்கு இவ்ளோ மச்சமா…?’ என்று சிவகார்த்திகேயன் மீது கடுகடு பொறாமையில் இருக்கும் இரண்டாம் நிலை நடிகர்களின் வயிற்றில் பெட்ரோலை ஊற்றி கூடவே நெய்யையும் வாரியிறைத்திருக்கிறது ‘மான் கராத்தே’ படத்தின் விற்பனை கணக்கு.
வெறும் 15 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு இப்போதே 40 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
சிவகார்த்திகேயன் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர் நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய தொடர் வெற்றிகளால், ‘மான் கராத்தே’ படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
வரும் 4-ம் தேதி ரிலீஸாக உள்ள இந்தத் திரைப்படத்தை வெளியிடும் 345 தியேட்டர்களின் உரிமையாளர்கள் கொடுத்திருக்கும் அட்வான்ஸ் பணம் மட்டுமே 28 கோடியை தாண்டிவிட்டதாம். மேலும் சாட்டிலைட் உரிமைக்காக 9 கோடியை விஜய் டிவி கொடுத்துள்ளது. அதுபோக வெளிநாட்டு உரிமையும் விஜய் பட ரேஞ்ச்சுக்கு 5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இவையெல்லாம் சேர்த்து பார்த்தால் 42 கோடியை இப்பொழுதே வசூல் செய்துவிட்டது ‘மான் கராத்தே’.
இந்த படத்திற்கு அதிகப்பட்ச செலவே சிவகார்த்திகேயனின் சம்பளம் மட்டும்தான்.. 5 கோடி பிளஸ் லாபத்தில் சதவிகிதக் கணக்கில் பங்கு.. இதுதானாம்.. சிம்பிளாக பார்த்தால் இந்த ஒரு படத்தின் மூலமாகவே சிவகார்த்திகேயன் 10 கோடியை பெற இருக்கிறார்.
ஆக மொத்தம் 27 கோடி லாபத்தை ரிலீஸுக்கு முன்பாகவே சம்பாதித்திருக்கும் இந்தப் படத்தின் இமாலாய கணக்குகளை பார்த்தால் இது விஜய், சூர்யா பட ரேஞ்சில் சமமாக நிற்கிறார் சிவகார்த்திகேயன். இவரை வளர்த்துவிட்ட தனுஷிற்குகூட இத்தனை வருமானம் இல்லை.. ஆனால் சிஷ்யனுக்கு கோடி கோடியாய் கொட்டுகிறது..
ஒரு காலத்தில் விஜய் டிவியில் மாதச் சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன்.. இன்றைக்கு அவர் நடித்த படத்தை வாங்க விஜய் டிவியிடமே 9 கோடியை வாங்கியிருக்கிறார் என்றால் அவரது ராசி, நட்சத்திரம், கிரக நிலையை எல்லாம் வடபழனி ஏவி.எம். ஸ்டூடியோவின் அருகில் பிளாட்பாரத்தில் அமர்ந்திருக்கும் கிளி ஜோஸியரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்..!