லிப்ரா புரொடெக்சன்ஸ்.. சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றும் ரவீந்தர் சந்திரசேகரன் என்னும் 25 வயது இளைஞர் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஆரம்பித்த சினிமா நிறுவனம்..!
ஏகப்பட்ட கனவுகளுடன் ஒன்றன் பின் ஒன்றாக பல படங்களைத் துவக்கியது. நளனும் நந்தினியும், சுட்ட கதை, ஒன் பிளஸ் ஒன் த்ரீ, கொலை நோக்குப் பார்வை, ஐ.நா., மற்றும் பெயரிடப்படாத கரு.பழனியப்பனின் படம் என 6 படங்களை வரிசையாக பட்டியலிட்டது.
இதில் ‘சுட்ட கதை’ படம் மட்டும் தியேட்டரில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருந்த சூழலில் திடீரென்று ‘புதுயுகம்’ தொலைக்காட்சியிலும் ஒரு நாள் மாலை ஓடி மறைந்தது.. இப்போது ‘நளனும் நந்தினியும்’ திரைப்படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது..
இந்த நிலையில் ‘திருதிரு துறு துறு’ படத்தை இயக்கிய ஜெ.எஸ்.நந்தினியின் இயக்கத்தில் ‘கொலை நோக்குப் பார்வை’ படத்தின் ஷூட்டிங்கும் நடந்து கொண்டிருந்தது. இந்தப் படத்தில் கார்த்திக் குமாரும், ராதிகா ஆப்தேவும் நடித்துக் கொண்டிருந்தனர்.
இடையில் ‘சுட்ட கதை’யில் ஏற்பட்ட தோல்வி.. ‘நளனும் நந்தினியும்’ படத்தை திரையிட முடியாத அளவுக்கான சிக்கல்கள் என்று பலவித பிரச்சினைகளும் தயாரிப்பாளர் ரவீந்தரை சூழ்ந்து கொள்ள.. இந்தப் படத்தின் தயாரிப்புக்கு அணை போட வேண்டிய கட்டாயம். இப்படி தயாரிப்பில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாய் இயக்குநர் நந்தினிக்கும், தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு விவாதமாகி கடைசியில் இந்தப் படத்தையே டிராப் செய்யும் அளவுக்கு பெரிதாகி இருக்கிறது.
இதுவரையிலும் இந்தப் படத்துக்காக 43 லட்சத்து 62 ஆயிரத்து 559 ரூபாய் செலவாகியுள்ளதாகச் சொல்லும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், இந்த நேரத்தில் இந்தப் படத்தைக் கைவிடுவது தனக்கு மிகுந்த பண நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் தருவதாகக் கூறியிருக்கிறார்.
இயக்குநர் நந்தினியோ, தான் கேட்ட அளவுக்கு தயாரிப்பாளரால் இப்போது செலவு செய்ய முடியவில்லை. இதனால்தான் படம் நிற்கிறது. தயாரிப்பாளர் தன்னால் தொடர்ந்து படத்தை தயாரிக்க முடியும் என்பதை பொருளாதார ரீதியாக நிரூபித்தால் தான் படத்தை இயக்கித் தருவது பற்றி யோசிப்பதாகக் கூறியிருக்கிறார். தயாரிப்பாளரோ தன்னை மிகவும் நெருக்கடியான நேரத்தில் இயக்குநர் கைவிட்டுவிட்டதாக புலம்பித் தள்ளுகிறார்.
இந்தப் பஞ்சாயத்து கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்திலும் நடந்திருக்கிறது.. செலவான 50 ல்டசம் ரூபாயை இப்போது யாரிடமும் கேட்க முடியாது. அது ஹார்டு டிஸ்க்கில் காட்சிகளாகப் பதிவாகியிருக்கிறது. இப்போது தயாரிப்பாளர் முன் நிற்பது இரண்டு விஷயங்கள்தான்.. ஒன்று.. படத்தை வேறு தயாரிப்பாளரிடம் கை மாற்றிவிட வேண்டும். அல்லது இயக்குநரை மாற்றிவிட்டு வேறு இயக்குநரை வைத்து தயாரிப்புக்காக பணம் கிடைத்த பின்பு படத்தைத் தொடரலாம்..
ஏற்கெனவே ‘சுட்டக்கதை’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் பலத்த கசப்பான அனுபவங்களைப் பெற்றிருந்த ரவீந்தர் சந்திரசேகருக்கு இது மேலும் மோசமான ஒரு படிப்பினையைத் தந்திருக்கிறது.. இவர் போன்ற சினிமா மீது ஆர்வமுள்ள, வெறியுள்ள ரசிகர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகள் அமைவது வருந்தத்தக்கது.
‘நளனும், நந்தினியும்’ படத்தின் ஆடியோ விழாவில் பேசும்போதுகூட “நான் எத்தனை முறை நஷ்டப்பட்டாலும் இந்தத் துறையில்தான் முதலீடு செய்வேன்.. இதில்தான் உழைப்பேன்..” என்று கூறியிருந்தார் ரவீந்தர். இது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், வெறும் வாய்ப்பந்தல் போட்டு, உழைக்காமலேயே காசை சுரண்டியெடுக்கும் வித்தகர்கள் கொண்ட திரையுலகத்தில் ரவீந்தர் போன்ற புதியவர்கள், தகுந்த ஆட்கள் துணையின்றி ஜெயிப்பது நடக்காத விஷயம்..
இனியாவது அவர் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்..!