full screen background image

விஷால்-லட்சுமி மேனன் கிஸ்-மீடியாவுடன் நடந்த பஞ்சாயத்து..!

விஷால்-லட்சுமி மேனன் கிஸ்-மீடியாவுடன் நடந்த பஞ்சாயத்து..!

இன்று மாலை பிரசாத் லேப்பில் நடைபெற்ற ‘நான் சிகப்பு மனிதன்’ பிரஸ் மீட்டில் எதிர்பார்த்தது போலவே விஷால்-லட்சுமி மேனன் முத்தக் காட்சியே பிரதானமான இடத்தைப் பிடித்தது..!

“இந்த முத்தக் காட்சி கதைக்கு அவசியம் தேவை என்பதால் இதை வைச்சிருக்கோம். வேணும்னு எடுக்கலை.. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வர்ற மாதிரி இந்த முத்தக் காட்சியை எடுக்கலை.. ரொம்பச் சாதாரணமானதுதான்..” என்று ஆரம்பித்தார் விஷால். மீடியாக்கள் விடவில்லை. துளைத்து எடுத்துவிட்டார்கள்..!

“இந்த முத்தக் காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது..” என்றார் விஷால். “நீங்கதான் வேணும்னு சொன்னீங்களாமே.. டைரக்டர் சொல்றார்..” என்று போட்டு வாங்கினார் ஒரு நிருபர். “சொல்லிட்டானா..” என்று முணுமுணுத்த விஷால்.. “அது படம் பார்த்தாதாங்க புரியும்.. படத்துல பாருங்க.. அது நிச்சயமா ஆபாசமா தெரியவே தெரியாது…” என்றார்.

கேள்வி லட்சுமி மேனனிடம் சென்றது.. “யாருடனும் வேண்டுமானாலும் முத்தக் காட்சியில் நடிப்பேன்னு சொல்லியிருக்கீங்களே..? யாருடனும்னா?” என்று கிடுக்கிப்படி போட்டனர். “கதைக்குத் தேவைன்னா என்றுதான் சொன்னேன்” என்றார் லட்சுமி. “அப்போ நடிகரெல்லாம் யாருன்னு பார்க்க மாட்டீங்களா..?” என்று திரும்பவும் கேட்க.. “கதைக்குத் தேவைன்னா நிச்சயமா நடிப்பேன்” என்று மீண்டும் சிணுங்கலுடன் சொல்ல.. இதற்கு மேல் லட்சுமியை குறுக்கு விசாரணை செய்ய பத்திரிகையாளர்களுக்கு மனசில்லாமல் மீண்டும் பார்வையை விஷால் பக்கமே திருப்பினார்கள்.

” படத்துக்கு யு-ஏ சர்பிடிகேட்டா..? அல்லது வெறும் யு சர்டிபிகேட்டா..?” என்றனர்.. “தெரியலை ஸார்.. நாளைக்குத்தான் 10 பேர் கொண்ட ரீவைஸிங் கமிட்டி இந்தப் படத்தை பார்க்கப் போறாங்க.. அவங்க என்ன சொல்வாங்கன்னு தெரியலை.. ஆனா நாங்க யு சர்டிபிகேட்டுதான் எதிர்பார்க்கிறோம்.. அதை வாங்குறதுக்கு அந்தப் படத்துக்கு முழு தகுதியிருக்கு..” என்றார் விஷால்.

மிச்சத்தைத் தொடர்ந்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன். “இந்தப் படத்தை முதல்ல பார்த்த சென்சார் குழு, ‘எதையுமே கட்செய்யாதீங்க.. படம் ரொம்ப நல்லாயிருக்கு. கட் செய்யத் தேவையே இல்லை.. ஆனா யு-ஏ வாங்கிக்குங்க’ என்றனர். அந்த அடிஷனல் ‘ஏ’ கூட படத்தின் கதையின் தன்மைக்காகத்தான்.. படத்துல வேறு எந்த ஆபாசமான காட்சிகளோ, வன்முறை காட்சிகளோ இல்லை.. வரிவிலக்குக்காக என்றில்லை.. காமனாவே சின்னக் குழந்தைகளும் இந்தப் படத்தை பார்க்கணுமேன்றதுக்காக ‘யு’ சர்டிபிகேட் கேட்டு போராடிக்கிட்டிருக்கோம்..” என்றார்.

‘இந்த முத்தக் காட்சியினால்தான் பிராப்ளமா?” என்று மீடியா திருப்பிக் கேட்க.. ‘இல்லை’ என்று அவசரமாக மறுத்தார் விஷால். ‘அது ஒரு பிரச்சினையே இல்லை ஸார்’ என்றார். “இதுவரைக்கும் எத்தனையோ ஹீரோயின்கள்கூட நடிச்சிருக்கீங்க.. அவங்ககூடவெல்லாம் லிப் டூ லாக் வைக்கலை. ஆனா லட்சுமி மேனனை கிஸ் பண்ணியிருக்கீங்களே.. என்ன காரணம்..?” என்று கேட்க.. மனிதர் சங்கடப்பட்டு போனார்.. “திரும்பத் திரும்ப சொல்றேன்.. இந்தக் கதைக்கு அந்த முத்தம் தேவைப்பட்டுச்சுங்க.. அதுனால வைச்சோம்ங்க..” என்றார் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு..!

பொறுமையிழந்து போன தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் இது எந்த இடத்தில் வருகிறது என்பதைச் சொல்லியேவிட்டார். “டிரெயிலர்ல பார்த்தீங்கள்ல.. ஒரு பேப்பர்ல 10 விதிமுறைகள் மாதிரி எழுதியிருக்கும். அதுல ஒண்ணு விரும்புற பொண்ணுக்கு முத்தம் கொடுக்கணும்னு எழுதியிருக்கும். அதை விஷால் நிறைவேத்தணும். இது திரைக்கதை.. அதுக்காகத்தான் அந்த முத்தக் காட்சி அவசியம் தேவைப்பட்டுச்சு” என்றார்.

இடையில் ‘சிகப்பு என்ற வார்த்தை இலக்கணத் தமிழ் இல்லையே?’ என்று சிலர் கேட்டனர். “அப்படியா.. எங்களுக்கு இப்போவரைக்கும் தெரியாது.. நாங்க விசாரிக்கிறோம்..” என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

கடைசியாக ஒரு முக்கியமான அவசியமான கேள்வி விஷாலிடம் எழுப்பப்பட்டது. “எல்லா பிரஸ் மீட்டுலேயும் லட்சுமி மேனன் ஸ்கூல்ல படிக்கிற பொண்ணுன்னு திருப்பித் திருப்பிச் சொல்றீங்க. அப்போ ஸ்கூல்ல படிக்கிற பொண்ணுக்கு கிஸ் கொடுத்தா அதுனால கலாச்சாரம் கெடாதா..?” என்றார் ஒரு பத்திரிகையாளர்.. 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்ட விஷால் “நிசமாவே எனக்குத் தெரியலீங்க.. இந்தப் படத்துல.. இந்த கேரக்டருக்கு அது தேவை.. எல்லா படத்துலேயும்தானே முத்தக் காட்சிகள் இருக்கு..” என்றார்.

நட்புக்குக் கை கொடுப்பான் தோழன் என்பதை போல இங்கேயும் உதவிக்கு வந்த தயாரிப்பாளர் தனஞ்செயன், “நீங்க லட்சுமியை ஸ்கூல்ல படிக்கிற பொண்ணா பார்க்காதீங்க. அவங்க படத்துல மீனான்ற காலேஜ் படிக்குற பொண்ணு.. அந்தக் கேரக்டரா பாருங்க.. நாங்க சொல்றது புரியும்.. அது தப்புன்னு ஒரு பக்கம் சொன்னா.. கடைசீல ஸ்கூல்ல படிக்கிற புள்ளையை ஹீரோயினா நடிக்க வைக்கிறதே தப்புன்னு சொல்லுவீங்க.. அப்புறம் எந்தெந்த வயசுல இருக்கிறவங்களைத்தான் நடிக்க வைக்கணும்ன்ற லெவலுக்கு பேச்சு போகும்.. ஸோ.. அந்த அளவுக்கெல்லாம் நாம போக வேண்டாம்.. இதை ஒரு சினிமாவா மட்டும் பாருங்க.. போதும்..” என்று சொல்லி பஞ்சாயத்தை முடித்து வைத்தார்..

ஒரேயொரு கிஸ்.. எத்தனை பஞ்சாயத்தை கூட்டிருச்சு பாருங்க..!

Our Score