தெய்வா புரொடக்சன் சார்பில் கேப்டன் சிவபிரகாசம் உதயசூரியன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கிருக்கிறார் இரா.தங்கபாண்டி.
இந்தப் படத்தில் கோகுல் கவுதம், ஷர்மிஷா, டாக்டர் சூர்ய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஸ்ரீபிரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சின்ராஜ் ராம், இசை – விபின். ஆர்., வசனம் – நெய்வேலி பாரதி குமார், படத் தொகுப்பு – ரவிச்சந்திரன்.ஆர், சண்டை இயக்கம் – மாஸ் மோகன், நடன இயக்கம் – ராக் சங்கர், தயாரிப்பு நிர்வாகம் – குட்டி கிருஷ்ணன், தயாரிப்பு மேற்பார்வை – சீனு, பத்திரிக்கை தொடர்பு – விஜய முரளி.
இந்தப் படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
வாராவாரம் எட்டு திரைப்படங்கள் வந்து குவிந்தாலும் அதில் ஏதேனும் ஒன்றுதான் நம்முடைய மனதை பரவசப்படுத்தும். அப்படி இந்த வாரம் நம்மை பரவசப்படுத்த வந்திருக்கும் ஒரேயொரு திரைப்படம் மாடன் கொடை விழா என்ற இந்த படம்தான்.
நெல்லை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இப்பொழுது சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடைய சொந்த ஊரில் அவருடைய அம்மா, அப்பா, பாட்டி மூன்று பேர் வசிக்கிறார்கள்.
அவருடைய குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில்தான் சுடலை மாடன் சாமிக்கு சிலை இருக்கிறது. அங்கேதான் ஒவ்வொரு வருடமும் சுடலைமாடன் கொடை விழாவை நடத்துவார்கள். இந்த கொடை விழாவில் அந்த ஊர் மக்களும் அவர்களை நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டு நேர்த்திக் கடனை சமர்ப்பிப்பார்கள்.
ஆனால் சில ஆண்டுகளாக அந்த நேர்த்தி கடனை செய்ய முடியாத போய்விட்டது. சுடலை மாடன் கொடை விழாவும் நடத்த முடியாமல் இருக்கிறது.
முருகனின் தந்தை திடீரென்று நோய்வாய்ப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்றவர் கடைசியாக தன்னுடைய மருத்துவ செலவுக்காக சுடலை மாடன் சிலை இருந்த அந்த நிலத்தை அதை ஊரைச் சேர்ந்த ஞானமுத்து என்பவரிடம் அடமானமாக வைத்துவிட்டார்.
மருத்துவ சிகிச்சை பெற்று நல்ல உடல் நலம் பெற்று வீடு திரும்பிய அவர் அந்த பணத்தினால்தான் உயிர் பிழைத்ததாக கருதி திடீரென்று கிறிஸ்தவ மரத்துக்கு மாறி தன்னுடைய பெயரையும் தாமஸ் என்று மாற்றிக் கொண்டார். அவருடைய மனைவியும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார். ஆனால் முருகன் மட்டும் இன்னமும் மாறவில்லை.
இந்த நேரத்தில் பாட்டிக்கு சீரியஸ் என்ற செய்தியை அறிந்து ஊர் திரும்ப முருகனிடம் அவருடைய பாட்டி, “இந்த வருஷமாவது சுடலை மாடனுக்கு விழா நடத்துப்பா.. நேர்த்திக் கடன் பண்ண முடியாமல் சொந்தக்காரங்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..” என்று வற்புறுத்துகிறார்.
பாட்டி சொல்லைத் தட்டாமல் சுடலை மாடனுக்கு விழா நடத்த நினைக்கிறார் முருகன். இதன் முதல் கட்டமாக அந்த நிலத்தை மீட்க முயற்சிகள் இறங்குகிறார். ஆனால் பணம் கடனாக கொடுத்த ஞானமுத்து 30 இலட்சம் ரூபாய் கொடுத்தால் நிலத்தை திருப்பி தருவதாக சொல்கிறார். 30 லட்சம் மிகப் பெரிய தொகை என்பதால் அதை தருவதற்கு முருகனால் முடியவில்லை.
இது விஷயமாக பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு நடக்கும் ஒரு பஞ்சாயத்தில் அடிதடி நடந்து அதில் ஒரு கொலையும் நடந்துவிடுகிறது. அந்தக் கொலைப் பழி முருகன் மீது விழுக, முருகனும் சிறைக்கு செல்கிறார்.
இதனால் இந்த கொடை விழா நடக்குமா.. நடக்காதா… என்று மறுபடியும் அந்த ஊர் மக்களிடையே மிகப் பெரிய குழப்பம் ஏற்படுகிறது.
முருகன் சிறையில் இருந்து மீண்டாரா.. ஊர் மக்கள் கொடை விழாவை நடத்தினார்களா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.
முருகனாக நடித்திருக்கும் புதுமுகம் கோகுல் கௌதம் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்திற்கு அப்படியே மிக கச்சிதமாக பொருந்தியுள்ளார். மிக இயல்பாகவே நடித்துள்ளார். கோவப்பட வேண்டிய இடத்தில் கோவப்பட்டு, உறவுகளை விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய அம்மா, அப்பாவையும் வருத்தப்பட வைக்காமலும் எப்படியாவது விழாவை நடத்திவிட வேண்டும் என்ற துடியாய் துடிக்கின்ற அந்த நடிப்பு சிம்ப்ளி சூப்பர்ப்..!
செய்யாத தவறுக்காக ஜெயிலுக்குள் இருக்கும் முருகன், இந்தக் கொலையை நான் செய்யலை.. ஆனா நீங்க செஞ்சீங்க என்று தன்னுடைய உறவினரிடம் பேசுகின்ற பேச்சு மிகவும் உருக்கமானது. அதே சமயம் கிளைமாக்ஸ் சீனில் அவருடைய உடலுக்குள் சுடலை மாடன் புகுந்தவுடன் அவர் ஆடுகின்ற அந்த வெறி ஆட்டம் அட்டகாசம் என்று சொல்லலாம். அதிலேயே தன்னுடைய நடிப்பை உடல் மொழி மூலமாகவே காண்பித்தும் இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஷர்மிஷா ஒரு அட்டகாசமான புது வரவு என்றே சொல்லலாம். கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதே சமயம் தடாலடியாக பேசுகின்ற அந்த கேரக்டர் ஸ்கெட்ச் நமக்கு மிகவும் பிடித்து போகிறது. நிச்சயம் இவருக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் சூப்பர்குட் சுப்பிரமணியம் தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை காண்பித்திருக்கிறார். தன்னுடைய இயலாமை, கோபம் தன்னுடைய குடும்பத்திற்கு தன்னால் நடந்திருக்கின்ற இவ்வளவு பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டு… ஞானமுத்துவிடம் போய் மறுபடியும் கெஞ்சுகின்ற பொழுது இப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு சோதனையா என்று நாம் பரிதாபப்படத்தான் முடிகிறது. அந்த பரிதாபத்தை நம்மிடம் இருந்து வரவழைத்து விட்டார் சூப்பர்குட் சுப்பிரமணியம்.
ஸ்டெல்லாவாக நடித்திருக்கும் அம்மா ஸ்ரீபிரியாவும் இன்னொரு பக்கம் தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை காண்பித்திருக்கிறார். ஞானமுத்துவாக வில்லனாக நடித்திருக்கும் டாக்டர் சூரிய நாராயணன் ஒரு வில்லனுக்குரிய முகப்பாவனையுடன் உடல் மொழி அனைத்தையும் காண்பித்து இறுதியில் ஒரு நல்லவனாக திருந்த வேண்டிய கட்டாயத்தில் அவருடைய மாற்றத்தை ரசிகர்களால் உடனடியாக ஏற்க முடிகிறது.
சிறிய கதாபாத்திரம் என்றாலும் திருநங்கை மாலதியாக நடித்த ரஷ்மிதாவை நிச்சயம் நம் பாராட்டலாம். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு இங்கே வெளிப்பட்டிருக்கிறது மேலும் பால்ராஜ், மாரியப்பன் மற்றும் நாயகனின் சித்தப்பாவாக நடித்தவர் என்று அனைத்து நடிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள்.
சின்ராஜ் ராமின் ஒளிப்பதிவில் அந்த கிராமத்து அழகு பளீச்சென்று தெரிகிறது. கிராமத்தை அப்படியே நம் கண்முன்னே காண்பித்திருக்கிறார். விபினின் இசையில் பாடல்கள் கேட்கும்விதமாக மிக, மிக எளிமையான வார்த்தைகளினால்… நம் காதுகளுக்குள் நுழைந்து புரிய வைத்திருக்கின்றன. அதேபோல் பின்னணி இசையையும் மென்மையாக போட்டிருக்கிறார். ஆனால், கடைசியாக சுடலை மாடன் சாமி ஆடுகின்ற ஆட்டத்திற்கு போட்டிருக்கும் அந்த இசை அட்டகாசம். ஆர்ப்பாட்டமானது. அந்த இசையாலேயே அந்தக் காட்சி முழுவதையுமே நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் சாமிகள் உண்டு. அந்த சாமிதான் அந்த கிராமத்தில் இருக்கும் அனைவரையுமே வழி நடத்துகிறது என்று கிராம மக்கள் எண்ணமும் நம்புகிறார்கள். அவர்களுடைய அந்த ஆன்மீக நம்பிக்கை, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இதன் மூலமாக அவர்கள் சக மனிதர்களிடையே ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு, உறவு இவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து இந்த சுடலை மாடன் கொடை விழாவும் மையமாக வைத்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனரான இரா.தங்கபாண்டி.
இந்தப் படத்தில் மைனுட்டாக சொல்லப்பட்டிருக்கும் மதமாற்றம் என்பது ஒரு மனிதனுக்கு அமைதியை தருமா? அவனுடைய வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்குமா.. அவனுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை சொல்லுமா… என்பதை இந்த படத்தில் ஒரு மிக அழகாக காண்பித்து இருக்கிறார் இயக்குநர்.
அதற்கான வசனங்களும் இந்த படத்தில் மிக அழகாக எழுதப்பட்டிருக்கின்றன, அந்த வகையில் கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி.. அன்பையும், பண்பையும், நேசத்தையும், பாசத்தையும் காட்டுகின்ற எந்த மதமும் ஏற்புடையதுதான் என்பதை இந்தப் படத்திலும் அழுத்தந்திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
மிகச் சிறப்பான கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம் இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைப்படத்திற்கான போட்டியில் இடம் பிடித்திருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.
RATING : 4 / 5









