full screen background image

“ம.பொ.சிவஞானத்தைப் போற்றக் கூடிய படம் இது” – இயக்குநர் போஸ் வெங்கட் விளக்கம்

“ம.பொ.சிவஞானத்தைப் போற்றக் கூடிய படம் இது” – இயக்குநர் போஸ் வெங்கட் விளக்கம்

சினிமா ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட ‘கன்னி மாடம்’ படத்தை இயக்கிய நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் தனது புதிய படத்தைத் துவக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு மா.பொ.சி. என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை SSS Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிராஜ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விமல் நாயகனாகவும் சாயா தேவி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் ரமா, பருத்தி வீரன் சரவணன், ஜனா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் இனியன், படத் தொகுப்பாளர் சிவா, இசையமைப்பாளர் சித்து குமார், மற்றும் கலை இயக்குநர் பாரதி ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இந்தப் படம் பற்றியும், படத்தின் தலைப்பினால் எழுந்துள்ள சலசலப்பு பற்றியும் இயக்குநர் போஸ் வெங்கட் பேசுகையில், “ம.பொ.சி. என்றதும், மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்’ என்ற பெயர்தான் தமிழர்களின் நினைவிற்கு வரும். ஆனால், தலைப்பு அதுவல்ல. ம’ என்ற எழுத்தோடு துணைக் கால் சேர்த்து ‘மா’ என்று தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதைத் தெளிவுபடுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

முதலில் ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்றுதான் இந்தப் படத்திற்கு பெயர் வைத்திருந்தோம். அது பெரிய தலைப்பாக இருக்கிறது என்று சுருக்கி இப்போது  மா.பொ.சி.’ என்று வைத்திருக்கிறோம்.

ஒருவேளை மறைந்த ‘சிலம்பு செல்வர்’ ‘ம.பொ.சி’ அவர்களை இத்தலைப்பு நினைவுபடுத்தினால் அதுவும் தமிழுக்குச் செய்யக் கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும். நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும்விதமாகத்தான் இப்படம் இருக்குமே தவிர, கலங்கப்படுத்தும் படமாக இருக்காது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது. இப்படம்  ம.பொ.சி. ஐயா அவர்களை போற்றக் கூடிய படமாகத்தான் இருக்கும்..” என்றார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இயக்குநர் போஸ் வெங்கட்டின் சொந்த ஊரான அறந்தாங்கியில் நேற்றைக்கு நடைபெற்றது.

Our Score