full screen background image

‘லிங்கா’வினால் நஷ்டம் – விநியோகஸ்தர்கள் புலம்பல்..!

‘லிங்கா’வினால் நஷ்டம் – விநியோகஸ்தர்கள் புலம்பல்..!

என்னங்கடா இன்னமும் சத்தத்தைக் காணோமேன்னு நினைத்தால், நேற்றைக்கு தங்களது கச்சேரியைத் துவக்கிவிட்டார்கள் ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள்.

‘லிங்கா’ படத்தின் ஒட்டு மொத்த தமிழகம் மற்றும் கேரள உரிமையை ‘வேந்தர்  மூவீஸ்’ வாஙகியிருந்தது. ‘வேந்தர் மூவிஸி’டமிருந்து செகண்ட் சேல்ஸ் முறையில் ‘லிங்கா’ படத்தின் விநியோக உரிமையை  பெறுவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பலத்த போட்டி இருந்தது.

விநியோக ஏரியாக்கள் பலவற்றுக்கும் பிரித்து, பிரித்து பல  கோடிகள் விலை வைத்து ‘லிங்கா’ படத்தின் விநியோக உரிமை விற்கப்பட்டது.  ஆனால் இப்போது விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்தபடி  தியேட்டர் வசூல் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

பல விநியோகஸ்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து கடந்த இரு நாட்களாக புலம்பி  வந்தனர். இந்த நிலையில், திருச்சி, தஞ்சாவூர், தென் ஆற்காடு, வட  ஆற்காடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமெ்ன்று கேட்டும் தி.நகரில் உள்ள விஜய் பார்கவி என்டர்டயின்மென்ட் நிறுவனத்தை  நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற பத்திரிகையாளர்களிடம் பேசிய, மெரினா பிக்சர்ஸ்  உரிமையாளர் சிங்காரவேலன், “விஜய் பார்கவி  என்டர்டயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்  பாலா விஸ்வநாதனிடமிருந்து திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 50  திரையரங்குகளின் விநியோக உரிமையை 8 கோடி ரூபாய்க்கு வாங்கினேன். ஆனால் எதிர்பார்த்தபடி ‘லிங்கா’ படம் வசூலை தரவில்லை. இதனால்  எனக்கு 4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை அவர் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்..” என்றார்.

விஜய் பார்கவி என்டர்டயின்மென்ட் நிறுவன உரிமையாளர்  பாலா விஸ்வநாதனோ, “லிங்கா’ படம் வெளி வருவதற்கு முன்  ரஜினிகாந்த் எங்களிடம் ‘படையப்பா’ படத்தைவிட ‘லிங்கா’ 10 மடங்கு  பெரிய படம். இந்த படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்..”  என்று கூறினார். இதை நம்பி நான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திரைப்பட  விநியோக உரிமையை வேந்தர் மூவிஸிடமிருந்து 14 கோடிக்கு வாங்கினேன்.

அதேபோல் என்  தலைமையில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சார்பில்  ரூ.8 கோடியும், தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்ட விநியோகஸ்தர்  சார்பில் ரூ.6 கோடியும் மற்றும் செங்கல்பட்டு விநியோகஸ்தர் சார்பில்  ரூ.14 கோடி என மொத்த பணத்தையும் ‘லிங்கா’ படம் வெளிவருவதற்கு  முன்பே ‘வேந்தர் மூவீஸ்’ உரிமையாளர் எஸ்.மதனிடம் கொடுத்து ‘லிங்கா’  படத்திற்கான உரிமையை பெற்றோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி ‘லிங்கா’ படம் ஓடவில்லை. எனக்கு மட்டும் இந்த  படத்தின் மூலம் ரூ.8 கோடியும், வட ஆற்காடு, தென் ஆற்காடு  விநியோகஸ்தருக்கு ரூ.4 கோடியும், திருச்சி, தஞ்சாவூர்  விநியோகஸ்தருக்கு ரூ.4 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த  பிரச்னையில் ரஜினி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் நான் தற்கொலை செய்வதை தவிர எனக்கு வேறு  வழியில்லை..” என்றார்.

சினிமா என்பதே ஒரு சூதாட்டம்தான்.. எந்தப் படம் ஓடும்.. எந்தப் படம் ஓடாது என்பதை யாராலும் துல்லியமாகக் கணித்து சொல்ல முடியாது.. யோசிக்காமல் இத்தனை கோடிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு இப்போது புலம்பி என்ன புண்ணியம்..?

Our Score