கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த ‘லிங்கா’ படத்தின் நஷ்டஈட்டு விவகாரம் இன்றைக்கு மீண்டும் தலைதூக்கிவிட்டது.
இன்று மதியம் ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் ‘லிங்கா’வால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள்.
முதலில் சில கிளிப்பிங்ஸ்களை ஒளிபரப்பினார்கள்.
‘லிங்கா படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர்களின் தற்போதைய நிலை’ என்று டைட்டில் போட்டு ‘லிங்கா’ படத்தில் அணை கட்டும் பகுதியில் மக்கள் கொட்டும் மழையில் அப்பாவியாய் நடுநடுங்கிய நிலையில் நிற்கும் காட்சி ஒளிபரப்பானது.
அடுத்து ‘லிங்கா படத்தை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்களின் நிலைமை’ என்று டைட்டில் காட்டப்பட்டு, பின்பு ‘லிங்கா’ படத்தில் அணை கட்டும் வேலையில் இருக்கும் மக்களை சமாதானப்படுத்தும்வகையில் ரஜினி பேசும் வசனக் காட்சி ஒளிபரப்பானது..(டச்சிங்கா காட்டுறாங்களாம்)
தொடர்ந்து ரஜினி ‘லிங்கா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுகள் கட் டூ கட் காட்சிகள் ஒளிபரப்பாகின..
‘லிங்கா’ படத்தின் கதை, தயாரிப்பாளர், இயக்குநரை தானே தேர்வு செய்த்தாக ரஜினி சொல்லும் காட்சிகள்..
தொடர்ந்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை ரஜினி அறிமுகப்படுத்தும் காட்சிகள்..
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் டிவிக்களுக்கு அளித்த பேட்டிகளில் இருந்து சில ஷாட்டுகள்.. ‘படத்தின் பட்ஜெட் 50 கோடிக்குள்’ என்று அவர் அளித்த பேட்டி..
விநியோகஸ்தர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதில் இருந்து சில பகுதிகள் ஒளிபரப்பாகின.
திருப்பூர் சுப்ரமணி இந்த விநியோகஸ்தர்களிடம் போனில் பேசியதை டேப் செய்து ஒலிபரப்பினார்கள். அதில் “படத்தின் ஒட்டு மொத்த வசூல் 182 கோடி. அதில் 25 கோடி விளம்பரச் செலவுன்னு எடுத்துக்கிட்டாங்க. மிச்சம் 157 கோடி வசூலாம்..” என்று சுப்ரமணி சொல்வது பதிவாகியிருக்கிறது.
இதன்படி பார்த்தால் ‘லிங்கா’ படத்தின் சுருக்கமான வரவு செலவு இதுதான் :
‘லிங்கா’ படத்தின் பட்ஜெட் – 45 கோடி
ஈராஸ் நிறுவனம் ராக்லைனுக்கு கொடுத்த தொகை – 157 கோடி
வேந்தர் மூவிஸ் ஈராஸிடம் இருந்து வாங்கிய தொகை – 67 கோடி – (இது தமிழகத்திற்கு மட்டுமே)
விநியோகஸ்தர்கள் வேந்தர் மூவிஸுக்கு கொடுத்த தொகை (சென்னை நீங்கலாக) – 60.8 கோடி
தியேட்டர் வசூல் தொகை – 27.8 கோடி
நஷ்டமடைந்த தொகை – 33 கோடி
ராக்லைன் வெங்கடேஷ் தருவதாகச் சொல்லும் தொகை – 3.3 கோடி
‘லிங்கா’ படத்தை தமிழகத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை – 40 லட்சம் மட்டும்
பின்பு மைக்கை பிடித்த விநியோகஸ்தர் சிங்காரவேலன், “உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பின்பும் எங்களை கண்டு கொள்ளாமல் இருந்த ரஜினி திடீரென்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியை களமிறக்கி விசாரிக்கச் சொன்னார். இதை ரஜினியே தன்னிடம் சொல்லி செய்யச் சொன்னதாக திருப்பூர் சுப்ரமணியே எங்களிடம் தெரிவித்தார்.
அவர் ‘லிங்கா’ படத்தின் முழு கணக்கு வழக்கையும் எங்களிடத்தில் கேட்டார். நாங்களும் அதனை அவரிடத்தில் கொடுத்தோம். அதை அவர் ரஜினி ஸாரிடமும், தயாரிப்பாளரிடத்திலும் காட்டிவிட்டு பதில் சொல்வதாகச் சொன்னார்.
சரியாக இரண்டு வாரங்கள் கழித்து நேற்று முன்தினம் திடீரென்று எங்களுக்கு போன் செய்து ‘தயாரிப்பாளர் தரப்பு 10 சதவிகிதம் தொகைதான் தருவதாகச் சொல்கிறார். இது எனக்கும் ஏற்புடையதல்ல. ஆனால் அவர் அந்தத் தொகையில் உறுதியாக இருக்கிறார்’ என்கிற தகவலைச் சொன்னார்.
இதன் பிறகுதான் இனி அமைதியாக இருந்து பயனில்லை. வேறு வழிகளில் முயல்வோம் என்று நினைத்து மீண்டும் போராட நினைத்து உங்களைச் சந்திக்கிறோம்.
எங்களுடைய அடுத்தக் கட்ட போராட்டம் பற்றி அறிவிப்பதற்கு முன்பு நீங்கள் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள்…” என்றார் சிங்காரவேலன்.
அடுத்த முக்கால் மணி நேரத்திற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்த பரபரப்பு கேள்விகளால் அரங்கம் சூடாகிவிட்டது.
சிங்காரவேலன் மற்றும் விநியோகஸ்தர்கள் அளித்த பதில்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
“நாங்கள் திடீரென்று போராட்டத்தில் இறங்கவில்லை. படம் முதல் நாள் மட்டுமே ஹவுஸ்புல்லாகி மறுநாளில் இருந்து வசூல் இறங்குமுகமாகி வருவதை தினம்தோறும் ராக்லைன் ஆபீஸுக்கும், ஈராஸ் நிறுவனத்திற்கும், வேந்தர் மூவிஸிற்கும் தொடர்ந்து சொல்லி வந்தோம். ஈமெயிலையும் அனுப்பி வந்தோம்.”
“வசூல் வராது என்று திட்டவட்டமாகத் தெரிந்த பின்பு எங்களுக்கு எத்தனை கோடிகள் நஷ்டமாகியிருக்கிறது என்பதை கணக்குப் போட்டு பார்த்து உடனேயே இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்து வேந்தர் மூவிஸுக்கும் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பினோம். இதற்கு எந்த பதிலும் வரவில்லை.”
“நாங்கள் ரஜினியை நம்பித்தான் இந்தப் படத்தை வாங்கினோம். ரஜினி சொன்ன வார்த்தைகளை நம்பித்தான் படத்தை வாங்கினோம்.”
“ரஜினிதான் இந்தப் படத்தின் கதை, இயக்குநர், தயாரிப்பாளரை நியமித்துள்ளார். அவர்தான் இந்தப் படத்தில் எல்லாமே.. ஆகவே அவரிடம்தான் நாங்கள் இது பற்றி முறையிட முடியும்.”
“ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்குச் சென்று ரஜினி ஸாரை சந்திக்க விரும்பி நேரம் கேட்டோம். கிடைக்கவில்லை.”
“அவருடைய வீட்டுக்குச் சென்று பார்க்க முயன்றோம். உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.”
“மீண்டும ராகவேந்திரா மண்டபத்திற்கு சென்று எங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளித்துவிட்டு வந்தோம். எந்த பதிலும் வரவில்லை.”
“இதற்கு பின்புதான் பத்திரிகையாளர்களை சந்தித்தோம்.. டிவிக்களுக்கு பேட்டியளித்தோம். அப்படி பேட்டியளித்தபோது ரஜினி ஸார் பற்றி நாங்கள் தெரிவித்த சில கருத்துக்களுக்கு அதன் பிறகு சமீபத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டோம்.”
“லிங்கா படத்தை மினிமம் கியாரண்டி முறைப்படி வாங்கியிருப்பதால் ஒப்பந்தப்படி நாங்கள் அவர்களிடம் ரீபண்ட் கேட்க முடியாதுதான். ஆனால் எங்களால் தாங்க முடியாத அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால் கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.”
“இப்போதும் அவர்களுடைய லாபத்தில் இருந்து கொஞ்சம் பகுதியைக் குறைத்துக் கொண்டு எங்களுடைய நஷ்டத்தை ஈடுகட்டுங்கள் என்றுதான் கேட்கிறோம். அவர்கள் நஷ்டமடைந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் கேட்டிருக்கவே மாட்டோம்.”
“சென்னை ஏரியாவை வேந்தர் மூவிஸே சொந்தமாக ரிலீஸ் செய்தது.”
“இந்த ரீபண்ட் கேட்கும் விஷயத்தில் எங்களது விநியோகஸ்தர்கள் சங்கம் தலையிட மறுத்துவிட்டது. அதனால்தான் அவர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைக்கவில்லை.”
“இந்த விநியோகஸ்தர்கள் அனைவருமே இளைஞர்கள். புதியவர்கள்.. விநியோகத் தொழிலில் புதிதாக ஒருவர் வருவதை ஏற்கெனவே இருப்பவர்கள் விரும்பவில்லை. எனவே இவர்களுக்கு உதவி செய்ய மூத்த விநியோகஸ்தர்கள் முன் வரவில்லை.”
“திரையரங்கு உரிமையாளர்கள் வெளிப்படையாக வரவில்லையென்றாலும் அடுத்து ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்கள் ரிலீஸாகும்போது இப்போது திரையங்கு உரிமையாளர்கள் நஷ்டப்பட்டிருக்கும் 18.50 கோடி ரூபாயை செட்டில் செய்தால்தான் அந்தப் படங்களை திரையிட முடியும். நிச்சயம் அவர்கள் ரெட் கார்டு போடுவார்கள்.”
“எங்களுக்கு பணம் வராவிட்டாலும் பரவாயில்லை. ரஜினி ஒரு 10 கோடி.. தயாரிப்பாளர் 10 கோடி என்று கொடுத்தால் அதனை வைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு செட்டில் செய்துவிடுவோம். இல்லையெனில் நாங்கள் இங்கே தொழில் நடத்தவே முடியாது. இப்போது விட்ட பணத்தை எங்களால் மீட்கவும் முடியாது.”
“நாங்கள் ரஜினியை மிரட்டவில்லை. வேண்டுகோள்தான் விடுக்கிறோம். அவரிடத்தில் கோரிக்கைதான் வைக்கிறோம்.”
“எந்தவொரு அரசியல் சக்திகளும் எங்களுக்குப் பின்னால் இல்லை. அன்றைக்கு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வந்தவர்கள் தானாகவே வந்தவர்கள்தான். நாங்கள் வற்புறுத்தி யாரையும் அழைத்து வரவில்லை.”
“எம்.ஜி. முறையில் விற்கப்பட்டு அதிகளவுக்கு நஷ்டமடைந்தால் ரீபண்ட் கொடுப்பது திரையுலகத்தில் வழக்கமானது. இது சட்டப்பூர்வமானதில்லை என்றாலும் திரையுலகில் இதனை ஒரு விதியாகவே வைத்திருக்கிறார்கள்.”
“கத்தி’ மற்றும் ‘ஜில்லா’ படங்களும் இதே எம்.ஜி. முறையில் விநியோகம் செய்யப்பட்டு பின்பு ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனை நாங்களே வாங்கியுள்ளோம்.”
“நாங்கள் எம்.ஜி. முறைப்படி வாங்கியிருந்தாலும் படத்தின் ஒட்டு மொத்த வசூலில் எங்களுக்கு 7 சதவிகித கமிஷன் மட்டுமே கிடைத்திருக்கும். பெரிய லாபம் பார்த்திருக்க முடியாது.”
“பாபா’, ‘குசேலன்’ ஆகிய படங்களுக்கு ரஜினி ரீபண்ட் கொடுத்து உதவியதைப் போலவே எங்களுக்கும் இப்போது உதவ வேண்டும்.”
“ரஜினி மட்டுமில்லாமல் வேறு பல நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ரீபண்ட் அளித்து திரையுலகத்தை காப்பாற்றியிருக்கிறார்கள்.”
“இரண்டு பெரிய நடிகர்கள் இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி ரஜினிக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.”
“நாங்கள் ஒவ்வொருவரும் வட்டிக்கு பணம் வாங்கித்தான் வேந்தர் மூவிஸுக்கு கொடுத்தோம். அந்தப் பணத்திற்கு இந்த நாள்வரையிலும் வட்டியை கட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களால் தாங்க முடியாத நிலைமையில்தான் இங்கே வந்திருக்கிறோம்.”
“ரஜனி இதற்கு பின்பும் இறங்கி வரவில்லையென்றால் அடுத்தக் கட்ட போராட்டத்தைத் துவக்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.”
“மெகா பிச்சை’ என்கிற பெயரில் தமிழகம் முழுவதிலும் பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்துவோம்.”
“ரஜினி படத்தை வாங்கி விநியோகம் செய்தால் அவருக்கு இந்த நிலைமைதான் ஏற்படும் என்பதை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்வோம்.”
“ரஜினியை நம்பினால் அவர்களது கதி இதுதான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவோம்..”
“போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டு முன்பாக பிச்சையெடுக்கும் போராட்டம் துவங்கும். இதனை தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் துவக்கி வைப்பார்…” என்றார்கள்.
ஒரு பக்கம் இவர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் கோபமும் வருகிறது..! சினிமாவின் வெற்றியே சூதாட்டம் என்னும்போது இப்படியொரு மிகப் பெரிய ரிஸ்க்கை எடுக்கத்தான் வேண்டுமா..? யோசித்தல்லவா இவர்கள் இறங்கியிருக்க வேண்டும்..!?
சூப்பர் ஸ்டார் ரஜினியும், தயாரிப்பாளரும் மனமிறங்கி ஈகோ பார்க்காமல் இவர்கள் கேட்கும் நஷ்டஈட்டுத் தொகையை வழங்கினால் அது நிச்சயம் இந்த தமிழ்த் திரையுலகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
அதே நேரம் இனிமேல் பெரிய பட்ஜெட் படங்களை இது போன்று எம்.ஜி. முறைப்படி விநியோகிக்காமல், பெர்சண்ட்டேஜ் முறையிலோ அல்லது டிஸ்டிரிபியூஷன் முறையிலோ விநியோகித்துக் கொண்டால் இது போன்ற சண்டைகள் எழாமல் பார்த்துக் கொள்ளலாமே..?!