“மாதொரு பாகன்’ என்னுடைய சொந்தக் கதை..” – சொல்கிறார் அறிமுக பெண் இயக்குநர்..!

“மாதொரு பாகன்’ என்னுடைய சொந்தக் கதை..” – சொல்கிறார் அறிமுக பெண் இயக்குநர்..!

இப்போது சமூகத்தில் எந்த விஷயம் டாப் லிஸ்ட்டில் இருக்கிறதோ அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வது சினிமாவில் வழக்கம்.

சம்பவங்கள், பெயர்கள், சண்டைகள் என்று பலவற்றையும் நினைவுபடுத்தும் வகையில் திரைப்படங்களை எடுத்து சூட்டோடு சூட்டாக பரபரப்பு பிளஸ் பப்ளிசிட்டி தேடி அதனை கண்டடைவதும் சினிமாத்துறையினரின் வாடிக்கை.

இந்த முறை கைக்கு கிடைத்திருப்பது மாதொரு பாகன் என்ற டைட்டில். எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் என்ற நாவல் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவிலையும், அப்பகுதி மக்களையும் இழிவுபடுத்துவதாக கூறி சென்ற மாதம் பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்தன.  எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்தன.

இதனால் மனம் கசந்த பெருமாள் முருகன் அந்த நாவலை தான் வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் தான் எழுதப் போவதில்லை என்றும், பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளன் செத்துவிட்டான் என்றும் சொல்லி இந்த எழுத்தாளர் உலகத்தில் இருந்து முற்றிலும் தன்னை விலக்கிக் கொண்டார். மேலும் இது நாள்வரையிலும் போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கலில் வசித்து வந்தவர், இப்போது சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டார்.

இந்த அளவுக்கு சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் அந்த மாதொருபாகன் பெயரிலேயே புதிய தமிழ் சினிமா வருகிறதாம். இதனைக் கேள்விப்பட்டவுடனேயே எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு அறிக்கையை வெளிட்டார். அதில் இந்த சர்ச்சையை மென்மேலும் பரப்புரை செய்ய வேண்டாம். சினிமாவாக்கும் முயற்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார்.

இந்தப் படத்தை பெண் இயக்குனர் ஆதிரா பாண்டிலட்சுமி என்பவர் இயக்குகிறார். இது பெருமாள் முருகனின் நாவலை தழுவி எடுக்கிற படமா என்று அவரிடம் கேட்டபோது, “எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. இது என்னுடைய சொந்தக் கதை.

‘மாதொரு பாகன்’ என்பது பெண்களுக்கு சம பங்கு கொடுத்த சிவபெருமானின் பெயர். இந்த பெயரை வைப்பதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.

‘மாதொரு பாகன்’ டைட்டிலை இரண்டு வருடத்துக்கு முன்பேயே தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்து கதையையும் உருவாக்கிவிட்டேன். சில காரணங்களால் அப்போது துவக்க முடியவில்லை. இப்போதுதான் முடிந்தது.

அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற விஷயம்தான் படத்தின் கரு. படத்தில் முக்கியமான ஒரு ஆண் கேரக்டர் இருக்கு. அந்த கேரக்டரைப் பார்த்தா, இப்படி ஒரு கணவன் அல்லது இப்படி ஒரு காதலன் நமக்குக் கிடைக்கணும்னு எல்லா பெண்களும் ஏங்குவாங்க. அந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு பெரிய நடிகர்கிட்ட பேசிட்டு இருக்கோம்.

இந்தப் படம் மதம், சாதி, அரசியலுக்கு சரியான சாட்டையடியா இருக்கும். இப்போ இசை வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. தவிர, ஆடியன்ஸ் என்ஜாய் பண்ண செம குத்துப் பாட்டு ஒண்ணும் இருக்கு. வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.” என்றார்.

Our Score