சிம்புவுக்காக மேடையில் மன்னிப்பு கேட்ட நடிகர்..!

சிம்புவுக்காக மேடையில் மன்னிப்பு கேட்ட நடிகர்..!

தென்னை மரத்தில் தேள் கொட்டி பனை மரத்தில் நெறி கட்டிய கதையாக யாரோ ஒருவர் கமெண்ட் அடிக்க.. அந்த கமெண்ட்டுக்கு வேறொருவர் மேடையேறி மன்னிப்பு கேட்கும் படலமெல்லாம் நடக்கிறது.

‘நெடுஞ்சாலை’ படத்தின் ஹீரோவான ஆரி இன்று காலை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்ற ‘வெத்துவேட்டு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த விழாவில் மிக அதிக நேரம் பேசியதும் இவர்தான்.

தன்னுடைய பேச்சில் படத்தின் இயக்குநர் துவங்கி இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் என்று பலரையும் பாராட்டி பேசியவர் மன்னிப்பு  கேட்பதற்காகவும் தான் இந்த மேடைக்கு வந்ததாகச் சொன்னார்.

ஏதோ இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்குமென்று பார்த்தால், இது எதுவுமே இல்லாமல் அந்த அரங்கத்திலேயே இல்லாத நடிகர் சிம்புவை பற்றிய செய்தியை சொன்னார்.

சமீபத்தில் வெளியான தல அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் முதல் காட்சியை ‘காசி தியேட்டரில்’ பார்த்துவிட்டு நடிகர் சிம்பு டிவிட்டரில் ஒரு கமெண்ட் போட்டிருந்தார். ‘இந்தப் படத்தை நல்லாயில்லை என்பவர்கள் மனநலம் பாதித்தவர்களாக இருப்பார்கள்’ என்று எழுதியிருந்தார் சிம்பு.

சிம்புவின் இந்த பாராட்டு மறைமுகமாக இளைய தளபதி நடிகர் விஜய்யின் ரசிகர்களை திட்டுவதுபோல் இருப்பதாக இணையவுலக துப்பறியும் சிங்கங்கள் எழுதிவிட..  கிளம்பியது இணைய மோதல்கள்.. தொடர்ந்து மூன்று நாட்கள் சிம்புவுக்கும், விஜய்யின் ரசிகர்களுக்கும் இடையில் மற்போரைத் தவிர மற்ற போர்கள் அனைத்தும் நடந்தன. கடைசியில் அஜீத்தின் ரசிகர்களும் சிம்புவுக்கு கை கொடுக்க.. ‘தான் எழுதியதை புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான் இணையத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள்’ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார் சிம்பு.

ஆனாலும் அந்த 2 வரிகள் பொதுவான சினிமா ரசிகர்களையும் பாதிக்கத்தான் செய்த்து. ‘ஒருத்தருக்கு ஒரு படம் பிடிக்கிறது. ஒரு படம் பிடிக்காமல் போகலாம். அது அவரவர் ரசனையைப் பொறுத்த்து. சிம்பு சொன்னபடி பார்த்தால் அவருக்கு ஒத்து வராத ரசனையுள்ளவர்கள் அனைவரும் மன நோயாளிகளா..?’ என்ற கேள்வி இணையத்திலும், பத்திரிகையுலகத்திலும் கேள்விகள் எழுப்ப.. சிம்பு இப்போது கப்சிப்.

இந்த விஷயத்தை இந்த மேடையில் தொட்டுப் பேசிய நடிகர் ஆரி, “அண்ணன் சிம்பு நல்ல மனிதர். என்னுடைய வளர்ச்சியில் பெரிய அளவுக்கு அக்கறை கொண்டவர். என்னுடைய ‘நெடுஞ்சாலை’ படத்தைப் பார்த்துவிட்டு நல்லாயிருக்கு என்று வீடியோ பேட்டியெல்லாம் கொடுத்து பிரமோஷன் செய்து கொடுத்தார். அதேபோல் சமீபத்தில் வெளியான ‘தரணி’ படத்திற்கும் உதவிகள் செய்தார்.

அவர் பேசிய அந்த இரண்டு வரிகள் பல சினிமா ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை காயப்படுத்திவிட்டதாக உணர்ந்தேன். நிச்சயமாக சிம்பு வேண்டுமென்றே அப்படி சொல்லியிருக்க மாட்டார். ஒரு வேகத்தில்.. பாராட்டும் அவசரத்தில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். சிம்பு பேசிய அந்த வரிகளுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

இப்போ சிம்பு திரும்பவும் மைக்குக்கு வந்து “நான் பேசினதே தப்பில்லை’ன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்.. நீ யாருப்பா மன்னிப்பு கேட்க?”ன்னு கேட்டுட்டா என்ன செய்றது..?

சிம்புவின் வாழ்க்கையில் எதுவும் நடக்கும் என்பது அவருடைய ஆரூயிர் தம்பி ஆரிக்குத் தெரியாதா..?

Our Score