full screen background image

லில்லி ராணி – சினிமா விமர்சனம்

லில்லி ராணி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை கிளப்பின் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில் கண்டியார் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சாயா சிங், தம்பி ராமையா, துஷ்யந்த், ஜெயப்பிரகாஷ், பேபி ராபத் பாத்திமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – விஷ்ணு ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவு – சிவதர்ஷன், இசை – ஜெர்வின் ஜோஷூவா, பின்னணி இசை – சேரன், படத் தொகுப்பு – பேஸ்வந்த் வெங்கடேஷ், கலை இயக்கம் – விஜயவீரன், பாடல்கள் – ஞானக்கரவேல், எழுத்து – ஏ.கே., பத்திரிகை தொடர்பு – வெங்கடேஷ்.

நாயகி லில்லி என்ற சாயாசிங் ஒரு விலை மாது. அவருக்கு ஒன்றரை வயதில் ராணி என்ற பெண் குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு இப்போது ஒருவித கேன்சர் நோய் வந்திருக்கிறது. இந்த நோய்க்காக குழந்தையின் தந்தையிடமிருந்து இரத்த அணுக்களை வாங்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இதனால் தான் யாரால் கர்ப்பமுற்றோம் என்பதை சாயாசிங் கண்டுபிடிக்க முனைகிறார். அவருடை.ய உள்ளுணர்வுப்படி அன்றைய தினம் இரண்டு பேர் தன்னிடம் ஹோட்டலில் உறவு கொண்டதை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் சாயா சிங்.

ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டரான தம்பி ராமையா. இன்னொருவர் தற்போதைய அமைச்சரான ஜெயப்பிரகாஷின் மகனான மைக்கேல். இதில் தம்பி ராமையாதான் தன் குழந்தையின் அப்பா என்பதை டி.என்.ஏ. மூலமாக கண்டறிகிறார் சாயா சிங்.

இதையடுத்து குழந்தையின் சிகிச்சைக்கு பண உதவி செய்யும்படி சாயா சிங் தம்பி ராமையாவிடம் போய்க் கேட்க அவர் மறுக்கிறார். இன்னொரு பக்கம் மைக்கேலும் இந்தப் பிரச்சினையில் இருப்பதால் அவனை அப்பாவாக்கி.. அவனிடமிருந்து பணம் பெற்று குழந்தையின் சிகிச்சைக்குப் பயன்படுத்தி குழந்தையைக் காப்பாற்றலாம் என்று தம்பி ராமையா ஐடியா கொடுக்க.. இதற்கு வேறு வழியில்லாமல் சாயா சிங் ஒத்துக் கொள்கிறார்.

யாருடனும், ஒட்டுதல் இல்லாமல் தனி மரமாக இருக்கும் மைக்கேல் என்ற துஷ்யந்திடம் சாயா சிங்கும், தம்பி ராமையாவும் டிராமா போட.. கதை அப்போது வேறுவிதமாக திசை திரும்புகிறது..!

இறுதியில் நடப்பதென்ன.. பணம் கிடைத்ததா.. ராணிக்கு சிகிச்சை முடிந்ததா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

சாயாசிங் தனது பரிதாபமான நடிப்பை பல காட்சிகளில் தொடர்ச்சியாகக் காண்பித்திருக்கிறார். ஆனாலும் இயக்குநரின் திறமையின்மையால் அதுவும் போதாமையாக இருக்கிறது. சாயாசிங் மீதான ஐயையோ என்ற பரிதாப உணர்வினை மட்டும் கிளைமாக்ஸ்வரையிலும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் ஒட்டு மொத்தமாக சாயாசிங் மற்றும் குழந்தை மீது ஒருவித பாவப்பட்ட உணர்வுடன் இருந்த ரசிகர்களை கிளைமாக்ஸில் செய்த முட்டாள்தனத்தில் மொத்தமாக மூக்குடைத்துவிட்டார் இயக்குநர். இதன் மூலமாக சீரியஸான படத்தை காமெடியாக்கி நம்மையும் காமெடியனாக்கிவிட்டார் இயக்குநர்.

தம்பி ராமையா சிற்சில இடங்களில் சிறப்பாக தனது நடிப்பைக் காண்பித்திருந்தாலும் காமெடி இன்ஸ்பெக்டராக இவரையும் காட்டி ஜோலியை முடித்துவிட்டார் இயக்குநர்.

மைக்கேலாக நடித்திருக்கும் துஷ்யந்த் மட்டுமே தனது கேரக்டர் ஸ்கெட்ச்சை உணர்ந்து கச்சிதமாக நடித்துள்ளார். தனக்கும் ஒரு வாரிசு இருக்கிறது என்பதை அறிந்தவுடன் அவர் அந்தக் குழந்தை மீது அட்டாச்மெண்ட் ஆகும் காட்சிகள் மட்டும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

கதை என்னவோ புதுமையான கதைதான். ஆனால் திரைக்கதையிலும், நடிப்பிலும், தொழில் நுட்பத்திலும் சொதப்பலோ சொதப்பல் செய்திருக்கிறார் இயக்குநர்.

பல இடங்களில் டப்பிங் மிஸ்டேக், லிப் மூவ்மெண்ட் பொருந்தி வரவில்லை. பல இடங்களில் பின்னணி இசை அதிகமாகவும், குறைவாகவும் போய் போய் வருகிறது. வசனமே இல்லாமல் வெறும் உதட்டசைவுடன் காட்சிகள் நகர்கின்றன. ரீரெக்கார்டிங் என்ற ஒன்றே இல்லாததுபோல தெரிகிறது. சில காட்சிகள் பாதியிலேயே முடிந்திருக்கிறது.

இதனாலேயே இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, படத் தொகுப்பு என்று எதையும் குறிப்பிட முடியவில்லை.

இந்த 2022-ம் ஆண்டிலும் இது போன்று படத்தை எடுத்து அதையும் தியேட்டருக்குக் கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் ‘தைரியத்தை’ நாம் வெகுவாகப் பாராட்டியே ஆக வேண்டும்.

RATING : 2 / 5

Our Score