full screen background image

200 பெப்சி ஊழியர்களுக்கு ஆயுட்கால இலவச மருத்துவ சிகிச்சை – தயாரிப்பாளர் ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

200 பெப்சி ஊழியர்களுக்கு ஆயுட்கால இலவச மருத்துவ சிகிச்சை – தயாரிப்பாளர் ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

இயக்குநர் சுந்தர்.சி. இயக்கியுள்ள ‘காபி வித் காதல்’ படத்தில் பணியாற்றிய 200 பெப்சி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தனது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப் போவதாக பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்.

இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக் கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது, “நானும் சுந்தர்.சியும் ரிஷி’ பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில்தான் சந்தித்தோம். அப்போதிலிருந்து எங்களிடையே நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது.

அரண்மனை-3’ படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக ‘காபி வித் காதல்’ படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப் பெரிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் ‘ரம்பம்பம்’ பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

இந்தப் இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள 200 தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச  சிகிச்சை தரும்விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டுகளை வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சைவரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.

அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குநர் சுந்தர்.சி-யின் பன்முகத் தன்மை கொண்ட உழைப்பையும், பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.

Our Score