இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் இணைந்து, அவர்களின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ சார்பாக தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பிரியன்ஷூ சோப்ராவும், தயாரிப்பாளராக விகாஸ் ஹசிஜாவும் பணியாற்றியிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியே இந்தப் படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – விஸ்வஜித் ஒடுக்கத்தில், படத் தொகுப்பு – ஈ.ராவக், பாடல்கள – மதன் கார்க்கி, சண்டை இயக்கம் – கே.கணேஷ், கலை இயக்கம் – அருண் வெஞ்சாரமூடு, உடைகள் வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, விஷூவல் எபெக்ட்ஸ் – Virzu Studios, நடன இயக்கம் – சாண்டி, புகைப்படங்கள் – ஜி.ஆனந்த் குமார், ஒலி வடிவமைப்பு – ஏ.சதீஷ்குமார், ஆண்டனி ரூபன், ஒலிக் கலவை – ஜி.லாரன்ஸ் விஷ்ணு, வைசாக், பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.
இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் இருக்கும் கவலைகளில் ஒன்று மாமியார் எப்படியிருப்பாரோ.. காதலர் அல்லது காதலியின் குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதுதான்.
அப்படி தனது வருங்கால மாமியாரைப் பற்றி அச்சப்படும் ஒரு மருமகள் மாமியாரைப் புரிந்து கொள்வதற்காக செய்யும் வித்தியாசமான முன் முயற்சிதான் இந்தப் படத்தின் கதைக் களம்.
நாயகன் ஹரீஷ் கல்யாணும், நாயகி இவானாவும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்கள். 2 வருடங்கள் காதலிப்போம். அதற்குப் பிறகும் நமக்குப் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து காதலித்து வருகின்றனர்.
ஒப்பந்தக் காலம் 2 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் இப்போது ஹரீஷ் கல்யாண் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று இவானாவிடம் கேட்கிறார். இவானாவும் ஒத்துக் கொள்ள.. சம்பிரதாயமான பெண் பார்க்கும் படலம் இவானாவின் வீட்டில் நடக்கிறது.
திடீரென்று தனது மாமியாரான நதியாவின் மீது சந்தேகப்படும் இவானா.. உங்கம்மாவோடஎனக்கு செட் ஆகுமான்னு தெரியலையே என்கிறார். இதனால் கோபமடையும் ஹரீஷ் கல்யாண் இந்தத் திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
இரண்டு குடும்பத்தினரும் அதிர்ச்சியாகிறார்கள். கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாலும் இவானாவின் மீது இன்னமும் காதலில் இருக்கிறார் ஹரீஷ். இவானாவும் அப்படியே.. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக டூர் போலாமா.. அப்படிப் போகும்போது உங்கம்மாவைப் பற்றி நான் தெரிந்து கொள்வேன். என்னைப் பற்றி அவரும் தெரிந்து கொள்வார் என்கிறார் இவானா.
பெண் பார்க்க அழைத்துவிட்டு கல்யாணம் வேண்டாம் என்று சொன்னதால் இவானாவின் மீது செம கோபத்தில் இருக்கிறார் ஹரீஷின் தாய் நதியா. அவரையும் கூல் செய்ய வேண்டியிருப்பதால் ஹரீஷ் ஆபீஸ் டூர் என்று பொய் சொல்லி நதியாவையும் டூருக்கு அழைத்து வருகிறார். இரு குடும்பத்தினரும் கர்நாடகாவில் இருக்கும் கூர்க் பகுதிக்கு டூர் செல்கிறார்கள்.
போன இடத்தில் என்ன நடந்தது.. நதியாவும், இவானாவும் கூல் ஆனார்களா.. இவர்களின் திருமணம் நடந்தேறியதா என்பதுதான் இதற்குப் பின்னான திரைக்கதை.
ஹரீஷ் கல்யாணும், இவானாவும் பார்ப்பதற்கே இன்னமும் திருமண வயதுக்கு வராதவர்களாகவே காட்சியளிக்கிறார்கள். அதனால்தான் இவர்களை வைத்து இந்தக் கதைக்கு முடிச்சுப் போட்டிருக்கிறார் இயக்குநர்.
காதல் பார்வையில் சிக்கிக் கொள்ளும் காதலனாக, காதல் போதையில் மாட்டித் தவிக்கும் காதலனாக.. அம்மாவின் பாசமிக்க மகனாக.. கல்யாணம் என்றால் இவளோடுதான் என்ற முடிவோடு இருக்கும் வருங்கால கணவனாக ஹரீஷ் கல்யாண் படம் நெடுகிலும் தவம் கிடைக்கிறார்.
அந்த வயதுக்கே உரித்தான அவசரத்தனத்தோடு கல்யாணத்தை நிறுத்திவிட்ட குற்றவுணர்வில் தவிப்பதும், இவானாவின் டூர் திட்டத்துக்கு ஓகே சொல்லிவிட்டு அம்மாவிடம் பொய் சொல்லி அழைத்துச் சென்று கடைசியில் பல்பு வாங்குவதும், நண்பன் மிர்ச்சி விஜய்யிடமே காதலுக்காக மாட்டிக் கொள்வதுமாக.. தன்னுடைய கேரக்டருக்கு வஞ்சகம் செய்யாமல் நடித்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.
பார்ப்பதற்கு சின்னப் பெண் போல தெரிந்தாலும் மெச்சூர்டான பெண்ணுக்கே உரித்தான கெத்துடன் படம் முழுவதும் வளைய வருகிறார் இவானா. நதியாவை நெருங்க முயன்று தோல்வியடையும்போது ஏற்படும் அவமானத்தைத் தாங்கிக் கொண்டு நேருக்கு நேராக நதியாவிடம் பேசி உண்மையை வெளிக்கொணரும் தருணத்தில் நாயகிக்கான நடிப்பைக் காட்டியிருக்கிறார் இவானா.
புலி கடத்தல் பார்ட்டிகளிடம் சிக்கும்போது நதியா மீது அக்கறை செலுத்தும்விதமாய் இவானா பேசும் பேச்சுக்கள் நதியாவை மடை மாற்றி, மனம் மாற்றியும்விடுகிறது.
அன்று பார்த்த அதே நதியா.. அதே கூர்மையான பார்வை. கெத்தான நடை, அழகான உடையலங்காரம், தீர்க்கமான வசன உச்சரிப்பு என்று பல வழிகளிலும் தான் நதியா என்பதை சீனுக்கு சீன் காட்டிக் கொண்டேயிருக்கிறார்.
கோவாவில் இவானாவுடன் சுற்றி வரும் காட்சிகளிலெல்லாம் கேமிரா நதியாவையே சுற்றிச் சுற்றி வருகிறது. பப்பில் வெள்ளைக்காரன் நதியாவிடம் மண்டியிட்டு மோதிரத்தைக் காட்டி பிரபோஸ் செய்வது நதியாவுக்காகவே வைக்கப்பட்ட சீன் என்றே சொல்லலாம்.
வேன் டிரைவராக திடீரென்று காட்சியளிக்கும் யோகிபாபு சிகரெட்டே பிடிக்காத என்னை சிகரெட் பிடிக்க வைச்சிட்டீங்களேடா என்று புலம்பும் கட்டத்தில் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்.
விஜய் டிவி மிர்ச்சி அவ்வப்போது படத்தில் ரகளையைக் கூட்டி சிரிக்க வைக்கிறார். மேலும் வினோதினி வைத்தியநாதன், இவரது கணவர், மகன். தீபா, இவானாவின் அம்மா, அப்பா, தன் மாமியாருக்கும் தனக்குமான உறவு பற்றிச் சொல்லும் பாட்டி என்று அனைவருமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
படத்தின் ரிச்னெஸ்ஸை அப்பட்டமாகக் காட்டுவது ஒளிப்பதிவுதான். தரமான செய்கை என்றே இதை சொல்லலாம். பாடல்களுக்கான இசையும் கேட்கும் ரகம். பப்பில் ஒலிக்கும் பாடல் அந்த நேரத்தில் கொஞ்சம் மூச்சுவிட வைத்தது. பின்னணி இசையை அடித்து ஆடாமல் விட்டு வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
அடுத்தது கல்யாணம்தான் என்னும்போது புகுந்த வீட்டு மனிதர்களைப் பார்த்து பயப்படுவது சகஜம்தான். ஆனால் அதை பயமில்லாமல் எதிர் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தக் கதையை எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் இதை இன்னும் வெளிப்படையாக பேசி உருவாக்கியிருக்க வேண்டும்.
பெண் பார்க்கும் படலத்தின்போது இவானா பேசுவது தெளிவாக இல்லை. எதனால் ஹரீஷ் கல்யாணம் கோபப்பட்டு போகிறார் என்பதையும் தெளிவாகச் சொல்லவில்லை. மாமியாருடன் பழகிப் பார்க்க விரும்புகிறேன் என்று எந்தப் பெண்ணும் இதுவரையில் சொன்னதில்லை. நடக்கவும் நடக்காது.
இவர்கள் இரண்டு வருடங்கள் காதலித்த தருணத்திலேயே வீட்டுக்கு அவ்வப்போது அழைத்து வந்து காட்டியிருந்தாலே போதும்.. ஆனால் வீட்டுக்கே தெரியாமல் காதலித்தது வந்ததாகத் திரைக்கதையில் சொன்னதால் இதையும் செய்ய முடியாமல் போய்விட்டது.
திரைக்கதையின் வசதிக்காக இயக்குநர் இதைச் செய்திருந்தாலும், இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு அறிவுரை சொல்லும்போக்கில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால் கதையைக் கொஞ்சம் மாற்றி அப்படி எடுத்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.
முன் பாதியில் கொஞ்சம், கொஞ்சம் கலகலப்பாகச் செல்லும் படம் பின் பாதியில் அந்த சாமியார் கூட்டம், புலி கடத்தல் பார்ட்டியிடம் சிக்குவது என்று வேறு பக்கமாகத் திசை திரும்பி படத்தின் வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் குறைத்துவிட்டது.
காதலர்களுக்காக வந்திருக்கும் படம்..!
RATING : 3 / 5









