full screen background image

டிடி ரிட்டர்ன்ஸ் – சினிமா விமர்சனம்

டிடி ரிட்டர்ன்ஸ் – சினிமா விமர்சனம்

ஆர்.கே.எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.ரமேஷ்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் சங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், தீனா, பிபின், தங்கத்துரை, தீபா, சைதை சேது, மானஸி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – எஸ்.பிரேம் ஆனந்த், ஒளிப்பதிவு – தீபக்குமார் பதி, இசை – ஆப்ரோ, படத் தொகுப்பு – என்.பி.காந்த், கலை இயக்கம் – ஏ.ஆர்.மோகன், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், நடன இயக்கம் – சாண்டி, ஒலிக் கலவை – ராஜாகிருஷ்ணன், ஒலி வடிவமைப்பு – சின்க் சினிமா, உடைகள் வடிவமைப்பு – ஜாஸ்மின், புகைப்படங்கள் – ராஜ், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தின் அமோக வெற்றி அடுத்தப் பாகத்திற்கும் ஒரு முன்னுரை கொடுத்திருந்தது. ஆனால் 2-ம் பாகம் சுமாரான வெற்றியைப் பெற்றது ஞாபகம் இருக்கலாம். இப்போது அதன் தொடர்ச்சியாக ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற தலைப்பில் வேறொரு பேய்க் கதையைக் கொண்டு வந்திருக்கிறார் சந்தானம்.

கதைக் களம் பாண்டிச்சேரிதான். அங்கேயிருக்கும் பாழடைந்த ‘பிரெஞ்ச் பங்களா’ என்ற பங்களாதான் கதை நடக்குமிடம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அந்தப் பங்களாவில் வாழ்ந்த வெள்ளையரான பிரதீப் ராவ் அங்கே சூதாட்டம் நடத்துகிறார். அந்த சூதாட்டத்தில் அக்கம், பக்கத்தில் வசிக்கும் ஆண்கள் அனைவரும் தங்களது சொத்துக்களை இழந்து தெருவுக்கு வந்துவிட்டனர்.

இதனால் கோபமடையும் அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து பிரதீப் ராவத்தின் குடும்பத்தினர் அனைவரையும் படுகொலை செய்கிறார்கள். அந்த வீட்டையும் தீ வைத்து எரித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பிரதீப் ராவத்தின் குடும்பத்தினர் அனைவரும், இப்போதும் அந்த வீட்டில் பேயாய் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

பாண்டிச்சேரியில் மிகப் பிரபலமான தாதா பெப்சி விஜயன். ஏகப்பட்ட சாராயக் கடைகளை நடத்தி வருவதால் பெப்சி விஜயனின் வீட்டில் பணமும், நகைகளும் குவிந்திருக்கிறது.

இவரது மகனான ரெடின் கிங்ஸ்லிக்கு பிரெஞ்சு குடியுரிமை பெற வேண்டி, பிரெஞ்சு குடியுரிமையுள்ள சுரபியின் அக்காவை கல்யாணம் செய்து கொள்ள பேசி முடித்திருக்கிறார்கள். இதற்காக தட்சணையாக 25 லட்சம் ரூபாயையும் தந்திருக்கிறார் பெப்சி விஜயன்.

அதே பாண்டிச்சேரியில் ஆர்ட் கேலரி என்ற பெயரில் போதை மருந்து கடத்தல் செய்து வருகிறார் பிபின். இவரிடத்தில் வேலை செய்பவர் முனீஸ்காந்த்.

மொட்டை ராஜேந்திரன், தங்கத்துரை, சைதை சேது மூவரும் சின்னச் சின்னத் திருட்டுக்களில் ஈடுபடும் திருடர்கள். ஒரு நாள் போலீஸ் இவர்களைத் தேடும்போது அவர்களிடமிருந்து தப்பிக்க பிபின் நடத்தும் ஆர்ட் கேலரிக்குள் நுழைகிறார்கள் ராஜேந்திரனும், தங்கத்துரையும்.

அங்கே போதைப் பொருளும், கட்டுக் கட்டாக பணமும் இருப்பதைப் பார்த்து “நாளைக்கே இங்க கை வைச்சுர வேண்டியதுதான்..” என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

அதே நேரம் பிபினிடம் முனீஸ்காந்த் பெப்சி விஜயன் வீட்டில் கொள்ளையடித்தால் லைப் டைம் செட்டில் ஆயிரலாம் என்று ஆசை காட்டுகிறார். “பெப்சி விஜயனின் மகனுக்கு நாளை திருமணம் என்பதால் நாளைதான் அவரது வீட்டில் கொள்ளையடிக்க தகுந்த நேரம்” என்கிறார் முனீஸ்காந்த்.

கல்யாண வீடுகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக வேலை செய்து வரும் சந்தானம் சுரபியைக் காதலித்து வருகிறார். சுரபியின் அக்கா, கல்யாண நாளன்று காலையில் யாருடனோ ஓடிவிட.. சுரபியை ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறார் பெப்சி விஜயன்.

இதையடுத்து ரெடின் கிங்ஸ்லியை தனது காரில் கடத்திச் செல்கிறார் சந்தானம். இந்தக் காரை நடுவழியில் கடத்திச் செல்கிறார் மொட்டை ராஜேந்திரன். வழியில் கார் டிக்கியில் ரெடின் கிங்ஸ்லி இருப்பதை அறிந்து அவரை இறக்கவிடுகிறார்கள்.

பிபின் அண்ட் கோ.. பெப்சி விஜயன் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு ஆர்ட் கேலரிக்குத் திரும்புகிறார்கள். அப்போது அங்கே திருட வந்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் கோஷ்டி, பெப்சி விஜயன் வீட்டில் பிபின் அண்ட் கோ அடித்த மொத்தப் பணத்தையும் பிடுங்கிவிட்டு கிளம்புகிறது.

தங்களுடைய காரைத் தேடி வரும் சந்தானம் அண்ட் கோஷ்டி, ஆர்ட் கேலரி வாசலில் இருந்த காரைக் கண்டுபிடித்து அதில் ஏறி உட்கா, அதே நேரம் அந்தக் காரின் டிக்கியில் பணத்தைப் போடுகிறார் மொட்டை ராஜேந்திரன். அந்தக் கணமே காரைக் கிளப்பிக் கொண்டு செல்கிறார் சந்தானம்.

நடுவழியில் கார் நிற்கும்போது டிக்கியில் ரெடின் கிங்ஸ்லிதான் இருப்பார் என்று நினைத்து டிக்கியைத் திறக்க, அங்கே பெப்சி விஜயன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார் சந்தானம். அந்தப் பணத்தில் இருந்து 25 லட்சத்தை எடுத்து சுரபியிடம் கொடுத்து பெப்சி விஜயனிடம் இந்தக் காசை கொடுத்துவிட்டு பிரச்சினையில் இருந்து மீளும்படி சொல்கிறார் சந்தானம்.

அன்றைய நாள் இரவில் போலீஸ் சோதனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்த தங்கத்துரையும், சேதுவும் அந்தப் பணத்தை பிரெஞ்ச் பங்களாவில் பதுக்கி வைக்கிறார்கள். மறுநாள் சந்தானத்துடன் வந்து பணத்தைத் தேடும்போது பணம் காணாமல் போயிருக்கிறது.

அந்த வீட்டுக்குள் நுழையும் சந்தானம், தங்கத்துரை, சேதுவை வரவேற்கும் அந்தக் குடும்பத்தின் தலைமை பேயான பிரதீப் ராவ், “இனிமேல் எங்களுடன் டாஸ்க்கில் விளையாடி ஜெயித்தால் மட்டுமே நீங்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியும்” என்று சொல்லி அவர்களை விளையாட்டுக்கு அழைக்கிறார். சந்தானமும் விளையாடத் துவங்குகிறார்.

இன்னொரு பக்கம் தன் வீட்டில் கொள்ளையடித்த பணத்தை தன்னிடமே கொடுத்திருப்பதை அறியும் பெப்சி விஜயன், சுரபியையும், அவரது அம்மாவையும் மிரட்டி சந்தானத்துடன் பேச வைத்து பணத்தை மீட்க நினைக்கிறார். கடைசியில் இதற்காக சுரபியும் இந்த வீட்டிற்குள் வந்து சேர்கிறார்.

காரைத் தேடியலையும் முனீஸ்காந்த் அண்ட் பிபினும் இந்தப் பேய் வீட்டுக்குள் வாலண்டியராக வர… இப்படி இவர்கள் அனைவருமே அந்தப் பேய் வீட்டுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.

அந்தப் பேயின் விளையாட்டில் சந்தானம் கோஷ்டி தப்பித்ததா..? அந்தப் பணம் என்னவானது..? பேய்களின் கதி என்னவானது..? என்பதுதான் இந்த நகைச்சுவை கலாட்டாவின் திரைக்கதை..!

வெறுமனே வசனத்தினால் மட்டுமல்ல.. சிச்சுவேஷினில் காமெடியை வைத்து படத்தை அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தில் நடித்த அனைவருமே இந்த சிச்சுவேஷனில் சிக்கிக் கொண்டு சிரிப்பலையை எழுப்பியிருக்கிறார்கள்.

சந்தானம் முதல்முறையாக பாடி ஷேம் செய்யாத வசனங்களைப் பேசியிருக்கிறார். அவருடைய டிரேட் மார்க் பஞ்ச் வசனங்களும் நிறையவே உள்ளன. ஆடல், பாடலில் கொஞ்சம் நளினம் வரும் அளவுக்கு ஆடியிருக்கிறார். அழகில் தேஜஸ் கொஞ்சம் கூடியிருக்கிறது.

நாயகி சுரபி சந்தானத்திற்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறார். பாடல் காட்சிகளுக்கும், புரியாத மக்கு கேரக்டருக்கும் வெகுவாகப் பயன்பட்டிருக்கிறார். அடித்து ஆடியிருப்பவர்கள் இவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவருமே..!

கார் டிக்கியில் பணத்தைப் போட்டவுடன் கார் பறப்பது, பங்களாவில் புத்தகத்தைத் திறந்து பார்த்து அந்த ஒலிக் கேட்டு ரசிக்கும் முனிஸ்காந்தின் நடிப்பு, கட்டிலுக்கு அடியில் மாறனின் காலைப் பார்த்து தங்கத்துரை பயப்படுவது.. பிபினின் டிரவுசரைக் கிழித்து அடையாளத்திற்காகத் துணிகளை போடுவது.. சுற்றி சுற்றி வந்து பெப்சி விஜயன் களைப்பாவது.. என்று பல காட்சிகளில் கைத்தட்டலுடன் சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

தீபக்குமார்பதியின் சிறப்பான ஒளிப்பதிவும், பின்னணி இசையும், ஒலிக் கலவையும், படத் தொகுப்பும், கலை இயக்குநரின் அட்டகாசமான பங்களா செட்டப்புமாக அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தை மிக, மிக ரசிக்க வைத்திருக்கின்றன.

பிரதீப் ராவத்தின் பேய்க் குடும்பத்தில் கடைசியாக நிகழும் திடீர் மோதலும், பேயாக இருந்து கொண்டே விளையாட்டில் ஒரு நேர்மையைக் கடைப்பிடிக்கும் பிரதீப் ராவத்தின் பண்பு, பேய்க்கும் ஒரு குணம் உண்டு என்பதைக் காட்டுகிறதாம்.

அந்தப் பணம் கடைசியில் சந்தானத்தின் கைகளுக்குப் போய்ச் சேரும் திரைக்கதை அபாரம்..! இது போன்ற பேய்க் கதைகளில், கதையாகச் சொல்வதைவிடவும் திரைக்கதையாக எழுதுவதுதான் மிகவும் சிரமம். இயக்குநர் பிரேம் ஆனந்த் மிகப் பிரில்லியண்ட்டாக இத்திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் தனது தனித்துவமான இயக்கத் திறமையால் அனைத்துக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக நடிக்க வைத்து நம்மையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

மிக நீண்ட நாட்கள் கழித்து நகைச்சுவையுடன் ஒரு பேய்ப் படத்தைப் பார்க்க முடிந்திருக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்..!

பார்க்க, சிரிக்க உகந்த படம்..!

RATING : 4 / 5

Our Score