full screen background image

லியோ – சினிமா விமர்சனம்

லியோ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜூன், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூரலிகான், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், மாத்யூ தாமஸ், சாண்டி, ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, தயாரிப்பு – லலித்குமார், இணை தயாரிப்பு – ஜெகதீஷ் பழனிச்சாமி, எழுத்து, இயக்கம் – லோகேஷ் கனகராஜ், இசை – அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, சண்டை இயக்கம் – அன்பறிவ், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – என்.சதீஷ்குமார், நடன இயக்கம் – தினேஷ், உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், ஏகா லகானி, பிரவீன் ராஜா, வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ்வைடி, பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் கே.அஹமத்.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஊரில் காபி ஷாப் வைத்து நடத்தி வருகிறார் நாயகனான பார்த்திபன் என்ற விஜய். இவருக்கு, மனைவி திரிஷாவும், பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் மகனும், மகளும் இருக்கிறார்கள்.

அந்த ஊரில் மிஷ்கின் தலைமையில் ஒரு ரவுடிக் கும்பல் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுகிறது. இந்தக் கும்பல் விஜய்யின் காபி ஷாப்பிலும் தங்களது ரவுடித்தனத்தைக் காட்ட, அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார் விஜய்.

நீதிமன்ற விசாரணையில் தற்காப்புக்காகத்தான் விஜய் அவர்களை கொலை செய்திருக்கிறார் என்று சொல்லி விடுதலை செய்கிறார்கள். உடனேயே வழக்கம்போல விஜய் விடுதலையான செய்தி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது.

அதைப் பார்க்கும் தெலுங்கானாவில் பிரபலமான போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான சஞ்சய் தத், பார்த்திபன் என்ற விஜய் இறந்து போன தன்னுடைய மகன் லியோதாஸ் என்று நினைக்கிறார்.

உடனேயே பெரும் படையைத் திரட்டிக் கொண்டு பார்த்திபன் என்ற விஜய்யைத் தேடி வந்து அவரைத் தன் மகன் லியோ என்று சொல்லி சலசலப்பை ஏற்படுத்துகிறார். டார்ச்சர் செய்கிறார்.

ஒரு பக்கம் செத்துப் போன மிஷ்கினின் ஆட்களும் விஜய்யை கொலை செய்யத் துடிக்கின்றனர். இன்னொரு பக்கம் சஞ்சய் தத்தின் ஆட்களும் விஜய்யை குடும்பத்தோடு கடத்திக் கொண்டு போக முயல்கிறார்கள்.

இவர்களிடமிருந்து விஜய் தப்பித்தாரா…? இல்லையா…? உண்மையில் விஜய் யார்..? அந்த லியோ தாஸ் யார்..? அவருக்கான பின்னணி என்ன…? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

விஜய் 22 வயது ‘லியோ தாஸ்’ என்ற வாலிபராகவும், 40 வயது மத்திய வயதுடைய ‘பார்த்திபன்’ என்று 2 கேரக்டர்களில் நடித்திருக்கிறார். 22-க்கும், 40-க்கும் என்ன வித்தியாசம் எனில் 40 வயது விஜய்யின் தலைமுடி மட்டும் கிராக்குத்தனமாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.

படத்தில் கழுதைப் புலியுடன் சண்டையிட்டு அடக்குகிறார். எதிரிகளை நாலாபுறமும் உதைத்துத் தள்ளி, பறந்து, பறந்து சண்டையிட்டு கொல்கிறார். தன் மகளை கொல்ல நினைப்பவர்களை பாசம் தலைக்கேறியதால் சுட்டுக் கொல்கிறார். மனைவிக்குப் பயப்படுகிறார். மனைவியிடம் மட்டும் கதறி அழுகிறார். இந்த ஒரு காட்சியில் மட்டும் இயக்குநர் சொன்னதைக் கேட்டு நடந்திருக்கிறார் போலும்.

22 வயது ‘லியோ தாஸ்’ கேரக்டரில் யாருக்கும் அடங்காமல் திரிகிறார். எப்போதும் சிகரெட்டும், புகையுமாக இருக்கிறார். தங்கை மீது பாசமாகி அப்பன், சித்தப்பன் மீது காண்டாகி சொந்த அடியாட்களையே போட்டுத் தள்ளுகிறார். ஆக.. இப்படித்தான் படத்தில் விஜய் நடித்திருக்கிறார்.

பாவம் த்ரிஷா மேடம்.. நடிக்க வந்து இத்தனையாண்டுகளாகியும் அம்மணிக்கு நடிப்பு என்பது சுத்தமாக வரவில்லை. ஆனால் அதே அழகு.. தேஜஸ்.. தேவதை போன்ற ஜொலிப்பு. இதை வைத்தே இன்னும் 10 வருடங்கள் தாக்குப் பிடித்துவிடலாம். சமாளிச்சிருங்க மேடம்..!

சஞ்சய் தத் மட்டுமே பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இது தமிழில் முதல் படம் என்பதால் அவருடைய நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயமாக வித்தியாசம்தான். காபி ஷாப்பில் விஜய்யுடன் பேசும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார் மனிதர்..!

சித்தப்பாவாக அர்ஜூன். தனது கடுகடு முகத்தை வைத்துக் கொண்டு கடைசிவரையிலும் அண்ணன் மகனுடன் சண்டையிட்டு மடிகிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் வனத்துறை அதிகாரியாகவும், விஜய்க்கு உற்ற நண்பனாகவும் வந்து கதையை நகர்த்தி, திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார். எல்லா படங்களை போலவும் இந்தப் படத்திலும் இவரது வசன உச்சரிப்பு யாருக்குமே கேட்கலை..!

சாண்டி, மிஷ்கின் இருவரும் கொள்ளைக்காரக் கும்பலாக வந்து அழிச்சாட்டியம் செய்து செத்துப் போகிறார்கள். விஜய்யின் தர்ம அடி வாங்கிய பின்பு “இதுதான் நீ சொன்ன கோல்டு காபியா..?” என்று மிஷ்கின் கேட்கும்போதுதான் லேசாக சிரிக்க முடிந்தது..!

மன்சூரலிகான் லியோதாஸை பற்றிய கதையைச் சொல்லிவிட்டு, “நாளை மறுநாள் நான் தூக்குல தொங்கப் போறேன்” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போகிறார்.

மடோனா செபாஸ்டியன் விஜய்யின் தங்கையாக.. சண்டையெல்லாம் போடும் வீராங்கனையாகவும் நடித்து சொந்த அப்பாவாலேயே நரபலி கொடுக்கப்பட்டு சாகிறார். பிரியா ஆனந்த் கவுதம் மேனனின் மனைவியாக பவ்யமாக வந்து போகிறார்.

இடையில் ஒரேயொரு காட்சியில் தலையைக் காட்டி பரிதாபமாக செத்துப் போகிறார் பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப்.

போலீஸ் ஏட்டுவாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் தனது குணச்சித்திர நடிப்பை காண்பித்துவிட்டு இவரும் அநியாயமாக உயிரை விடுகிறார்.

நடித்தவர்களெல்லாம் இப்படியாக அநியாயமாக நடித்து, அநியாயமாக உயிரைவிட்டாலும், தொழில் நுட்பக் கலைஞர்கள் நியாயமாக உழைத்து, நியாயமாக படத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படம் நெடுகிலும் வியாபித்திருக்கிறது. படத்தின் பிரம்மாண்டத்தையும், இது விஜய் படம் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது.

“படத்தின் இயக்குநர் அன்பறிவ்வா.. லோகேஷா..?” என்றுகூட கேட்கலாம்..! அந்த அளவுக்கு சண்டை காட்சிகளில் அன்பறிவ் சகோதரர்கள் உழைத்திருக்கிறார்கள். அத்தனை சண்டை காட்சிகளும் அபாரம். கடும் உழைப்பு தெரிகிறது. அந்தக் கடின உழைப்பினை திரையில் பிரம்மாண்டமாகக் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பார்க்குமிடமெல்லாம் பிரம்மாண்டமான செட்டுகளைப் போட்டு தயாரிப்பாளர் செலவிட்ட காசுக்கு நியாயம் சேர்ப்பித்திருக்கிறார் கலை இயக்குநர்.

அடிதடியாகவே படம் நெடுகிலும் ஓடும் திரைப்படத்தை இந்த அளவுக்காகவாவது கத்திரி போட்டுக் குறைத்துக் கொடுத்திருக்கும் படத் தொகுப்பாளருக்கு நமது நன்றி..!

அனிருத்தின் இசையில் பாடல்கள் விஜய்யின் ரசிகர்கள் மட்டும் கேட்பதற்குத் தகுதியானது. பின்னணி இசையில் எந்தவொரு உணர்ச்சியையும் எழுப்பவில்லை. இசைக்காக செலவிட்ட பணம் மொத்தமும் நஷ்டம்தான்..!

இசை மட்டுமல்ல.. படம் மொத்தமும்கூட வேஸ்ட்டு என்றுதான் சொல்ல வேண்டும். லாஜிக்கெல்லாம் இந்தப் படத்துல பார்க்க வேண்டாம் என்று சில விசிலடிச்சான் குஞ்சுகள் கதறினாலும் “மொதல்ல படத்துல கதையே இல்லையேடா.. அது இருந்தால்தானே லாஜிக்கை பார்க்க நினைக்கலாம்…” என்று நாம் திருப்பிச் சொல்லி சாத்த வேண்டியிருக்கிறது.

“லியோ தாஸ் நீதான.. ஒத்துக்க..” என்று சொல்லிச் சொல்லி இரண்டாம் பாதி முழுக்க படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். “இப்போ நான்தான் லியோ தாஸ்…” என்று விஜய் சொல்லிவிட்டால் அதன் பின் என்னவாகும்.. இதை இயக்குநர் எங்கேயுமே சொல்லாமல் “லியோ தாஸ் நீதானே.. நீதானே..” என்று கேட்டுக் கேட்டு நம்மைக் கதறவிட்டிருக்கிறார்.

லியோ தாஸ் தயவு தாட்சண்யமேயில்லாமல் தனக்காக உழைத்த விசுவாசிகளைக்கூட சுட்டுக் கொல்கிறார். இவர் இப்போது உயிரோடு இருந்தால் என்ன.. செத்தால்தான் என்ன என்ற மனநிலையில் ரசிகர்கள் வந்த பின்பு அந்தக் கேரக்டருக்கு எதுக்கு இத்தனை பில்டப்பு..? தேவையா இயக்குநரே..?

பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முனையும் சஞ்சய்தத்தின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தில் மிகப் பெரிய டேமேஜ். இதுக்கு ஒத்து ஊதும் சித்தப்பன் அர்ஜூனும் இதே பல்லவியைப் பாடி கொலை செய்ய வருவதெல்லாம் சாதாரணமான இயக்குநர்களுக்கெல்லாம் தோன்றாத வித்தியாசமான பின் நவீனத்துவமான திரைக்கதை.

“படத்தின் முதல் 10 நிமிடங்களைப் பார்க்கத் தவறாதீர்கள்” என்று தான் பேட்டி கொடுத்த அத்தனை வீடியோக்களிடமும் கதறியிருந்தார் லோகேஷ். படத்தில் பார்த்தால்.. அத்தனை காமெடியாக இருக்கிறது அந்தக் காட்சி.

சி.ஜி.யே இவ்வளவு கேவலம் என்றால் அந்த சிச்சுவேஷன் கதை அதைவிடக் கேவலம். சாதாரணமாக துப்பாக்கியால் சுட்டாலே பொட்டென்று உயிரைவிட்டுவிடும் கழுதைப் புலிக்காக இத்தனை மெனக்கெட்டு காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர் லோகேஷை பார்த்து நாம் பரிதாபப்படத்தான் வேண்டியிருக்கிறது.

மிஷ்கினின் மனைவியான சாந்தி “என் புருஷனை கொன்னவனை கொலை செஞ்ச பின்னாடிதான் என் புருஷன் பொணத்தை புதைப்பேன்..” என்று சபதம் எடுக்கிறார். ஆனால் அந்த சபதம் என்னாச்சு என்று தெரியவில்லை. சஞ்சய்தத் வந்தவுடன் இனி விஜய்க்கு ஏழரை இவருடன்தான் என்று முடிவு செய்துவிட்டார் போலும்..! பின்ன எதுக்கு அந்த வீர, தீர சபதம்..?

‘மாநகரம்’, ‘கைதி’ போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜா இந்தப் படத்தை இயக்கியிருப்பது என்ற சந்தேகமே வருகிறது.

சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து, மிகப் பெரிய சம்பளத்துக்காக படத்தை இயக்கும்போது தங்களது சுயத்தை, தனித்தன்மையை.. திறமை வாய்ந்த, தகுதி வாய்ந்த இயக்குநர்கள் இழந்துவிடுவார்கள் என்பதற்கு லோகேஷ் கனகராஜூம் ஒரு உதாரணமாகிவிட்டார்.

“கழுதை தேய்ந்து கட்டெறும்பானது…” என்று சொல்வார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜோ, “கழுதை தேய்ந்து கோவேறு கழுதை”யான கதையாய் தடம் பிறழ்ந்துவிட்டார்.

‘ஜெயிலர்’ படத்தில் நெல்சன் திலீப்குமார் நாசமாகிப் போனார். இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் இப்படியாக நாசமாகப் போய்விட்டார்.

தமிழ்ச் சினிமாவுக்கு இது கெட்ட காலம்  போலிருக்கிறது..!

RATING : 2 / 5

Our Score