full screen background image

“இதுல அரசியலும் இருக்கு” – ‘லால் சலாம்’ பற்றி இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி கருத்து!

“இதுல அரசியலும் இருக்கு” – ‘லால் சலாம்’ பற்றி இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி கருத்து!

பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில், ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் உருவாகியிருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

அதை ஒட்டி ‘லால் சலாம்’ திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் நடிகர் தம்பி ராமையா பேசும்போது, “தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம், ஆனால் மனித மனங்கள் ஒன்றாக இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா. குடும்பத்துடன் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கான உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் படம் உருவாகி உள்ளது…” என்றார். 

நடிகர் செந்தில் பேசும்போது, “இந்த அருமையான கதையை இயக்குநர் ஐஸ்வர்யா உருவாக்கி தந்ததற்காக அவருக்கு நன்றி. அவர் கதையை கூறும்பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கு நன்றி..” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, “படத்தில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்கக் கூடாது என்பதுதான் படத்தின் இந்தப் படத்தின் கரு. இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் கொடுக்கப் போகும் விமர்சனம் ஆழமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கும், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் ‘மூணாறு’ ரமேஷ் பேசும்போது, “சிறு வயதில் இருந்தே நான் ரஜினி ரசிகன். அவருடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்தது எனக்குப் பெருமையாக உள்ளது. அதே சமயம், அவருடைய மகளின் இயக்கத்தில் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம். எங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார். 

நடிகை நிரோஷா பேசும்போது, “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஏற்கனவே ஒரு முறை வாய்ப்பு வந்து, கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போனது. இதனால் எனது திரையுலக வாழ்க்கை ஒரு முழுமை பெறாமல் இருந்ததை இந்தப் படம் மூலமாக ஐஸ்வர்யா நிவர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு மிகப் பெரிய நன்றி. ஒரு இயக்குநராக தனக்கு என்ன தேவையோ அதை மிகவும் தெளிவுடன் நடிகர்களிடம் இருந்து சிறப்பான ஒரு நடிப்பை பெற்றுக் கொள்வார்  ஐஸ்வர்யா…” என்று பாராட்டினார்.

நடிகர் திவாகர் பேசும்போது, “முதல்முறையாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் நடித்ததில் மிகவும் பெருமையாக இருக்கிறது. நகைச்சுவை கதாபத்திரமாக மட்டுமில்லாமல், குணச்சித்திர வேடத்துடன் கூடிய கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளார்கள். ஒரு திரை பல்கலைக்கழகத்தில் நுழைந்து வந்த அனுபவத்தை இந்தப் படம் எனக்குக் கொடுத்திருக்கிறது. அந்த அளவிற்கு அத்தனை கலைஞர்களுடன் நான் பணிபுரிந்துள்ளேன்..” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

நடிகர் விக்ராந்த் பேசும்போது,  “எனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கவலையுடன் இருக்கும்போதுதான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அப்போதுதான் எனக்கு இன்னும் திரைப் பயணம் இருப்பதாகவும், இது கடவுள் கொடுத்த பரிசு என்றும் பெரிதும் சந்தோஷப்பட்டேன். இந்த வாய்ப்பினை வழங்கிய ஐஸ்வர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் இந்த படத்தில் நடித்ததில் மிகவும் சந்தோஷம். ரஜினி ஸார் நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனைகளை கொடுத்து, நல்லதொரு ஊக்கத்தையும் கொடுத்துள்ளார்..” என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது, “15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்தப் படம் எனக்கு ஒரு பரிசாக கிடைத்திருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும்பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடித்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

இக்கால கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்துள்ளது.  ஒரு இயக்குநராக இந்தக் கருத்தை படமாக்குவதும், அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப் பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயமாகும். அதை ஐஸ்வர்யா திறம்பட செய்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.

படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா பேசும்போது, “ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா. அதையொட்டி நடக்கும் கிரிக்கெட் போட்டி. அந்த போட்டியில் நடக்கும் பிரச்சனைகளை சார்ந்து இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதைத்தான் இந்தப் படம் பேசுகிறது.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கதாசிரியரான என்னிடம் இரண்டு கதைகள் இருக்குன்னு என்கிட்ட சொன்னார். அதில் ஒன்றுதான் இந்த ‘லால் சலாம்’.

இந்தப் படம் மக்களைச் சார்ந்த ஒரு சிறிய அரசியல் கருத்தை பேசுகிறது. இந்த நாட்டில் ஒரு குடிமகனாக இருக்கக் கூடிய அனைவருக்கும் அரசியலுடன் ஒரு பங்கு உள்ளது. அரசியல் இல்லாமல் எந்த நாடும் ஜனநாயகமும் இயங்க முடியாது. அரசியல் என்பது எல்லாவற்றிலும் உள்ளது அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில்தான் எல்லாமே உள்ளது.

இந்தப் படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் தன்னுடைய சக தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி..” என்றார்.

Our Score