ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் என்ன நடக்கும் என்பதை இரண்டரை மணி நேர நகைச்சுவை கலாட்டாவில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜீன்ஸ்..
படத்தின் பெயர் ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி.’ பூந்தியை கையால் மொத்தமாகப் பிடித்து உருண்டை செய்தால், அதுதான் லட்டு. “இங்கே தலைப்பே உல்டாவா இருக்கே…?” என்று கேட்டதற்கு “அதுதான் படத்தின் கரு…” என்கிறார் இயக்குநர்.
கேல்வின் சினிமாஸ் என்ற நிறுவனம் சார்பாக இயக்குநர் ஜீன்ஸ் மற்றும் பென்னி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகர்கள் அனைவரும் பெண்களாகவும், நடிகைகள் அனைவரும் ஆண்களாகவும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் கதாநாயகனாக கிரண்மை என்ற நடிகை நடித்திருக்கிறார். கதாநாயகியாக இயக்குநர் ஜீன்ஸே நடித்திருக்கிறாராம். மற்றும் தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் இருவரும் பெண்களாகவும்.. ஆர்த்தி, மதுமிதா இவர்களுடன் பக்காவான ஆண் வில்லன் வேடத்தில் தேவதர்ஷினியும் நடித்திருக்கிறார்கள். ‘தலைவாசல்’ விஜய்யும், மகாநதி சங்கரும் மீசையுடனேயே பெண்ணாக வருகிறார்கள்..
தேவதர்ஷினிக்கு இதுவரை கிடைக்காத ஒரு கேரக்டர்.. “டைரக்டர் ஜூன்ஸ் என்கிட்ட கதையை சொன்னப்ப எனக்கு நம்பிக்கையே இல்லை. இந்த கதையை ரசிகர்கள் ஏத்துப்பாங்களான்னு எனக்கே நெறைய டவுட்ஸ் இருந்துச்சு. ஆனா எந்த ஒரு வித்தியாசமான கான்செப்ட்டையும் முதல் தடவை பண்ணும்போது இப்படித்தான் நிறைய டவுட்ஸ் இருக்கும். நானும் விடாமல் நிறைய கேள்விகளை கேட்டு அவரை டயர்டாக்கிட்டு கடைசியாத்தான் ஒத்துக்கிட்டேன்.. ஆனா ரொம்ப கான்பிடண்ட்டோட ஜெயிப்போம்ன்னு நம்பி எடுத்திருக்கிறார்.
நான் வில்லியாகக்கூட எந்தப் படத்திலேயும் நடிச்சதில்ல. அப்படிப்பட்ட என்னை பொம்மைக்கு சேலை கட்டினால்கூட விட மாட்டேன்ங்கிற மாதிரியான ஒரு ஆம்பளை கேரக்டர்ல.. அதான் பக்காவான ஒரு பொம்பளை பொறுக்கியா காட்டிட்டார்.(ரேப் சீன் இருக்கான்னு தெரியலை…)
என்னைப் போய் எப்படி இப்படிக் காட்டனும்னு டைரக்டருக்கு தோணுச்சுன்னே தெரியல..” என்றவர் “எப்படி ஸார்.. என்னைய தேடி வந்து நடிக்கச் சொன்னீங்க…?” என்று இயக்குநரிடம் நேருக்கு நேராகவே கேட்டார்.
மைக்கை வாங்கிய இயக்குநர் ஜீன்ஸ், “இவங்க நடிச்ச எல்லா படத்தையும் பார்த்திருக்கேன். இவங்களோட பெர்பார்மென்ஸ்ல கொஞ்சமும் செயற்கைத்தனம் இருக்காது.. ஒரு மிடுக்கு இருக்கும். ஆம்பளைங்களுக்கு இருக்குற துடுக்குத்தனமும் கலந்திருக்கும். அதனாலதான் இவங்களை செலக்ட் செஞ்சேன்.. அதுக்கேத்த மாதிரி என் கணிப்பை பொய்யாக்காம அற்புதமா நடிச்சிருக்காங்க.. என்றார்.
“படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் இயல்பு நிலைமைக்கு மாறாக நடித்திருப்பதால் காஸ்ட்யூம் டிபார்ட்மெண்ட்டும், மேக்கப் டிபார்ட்மெண்ட்டும், அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் யூனிட்டும் பம்பரமாக வேலை பார்த்ததாம்.. ரொம்ப உன்னிப்பா.. ஒவ்வொரு ஷாட்டையும் கவனிச்சு.. ஒரு சின்ன கன்டினியூட்டிகூட மிஸ் ஆகாம பார்த்து பார்த்து எடுத்திருக்கோம்..” என்றார் இயக்குநர்.
“சரி.. படத்தின் கதைதான் என்ன..?” என்று கேட்டால், “அது சஸ்பென்ஸ்.. தியேட்டர்ல பார்த்துக்குங்களேன்.. ஒரு வரில சொல்லலாம். ஆனா அதுவே படமாயிரும்..” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டார்.
கிளம்பும்போது மைக்கை பிடுங்கிய ஒளிப்பதிவாளர், “கொஞ்சம் இருங்க.. முக்கியமான ஒரு விஷயம் சொல்றேன்.. படத்துல ஹீரோவா நடிச்ச பொண்ணு ஆம்பளை மேக்கப், காஸ்ட்யூம் போட்டு நடிச்சிட்டிருந்தாங்க.. நாங்க ஒரு மால்ல ஷூட்டிங் எடுத்துக்கிட்டிருந்தோம். இவங்க பாத்ரூமுக்குள்ள போயிருக்காங்க.. யாரோ ஒரு ஆம்பளைதான் வந்துட்டான்னு சொல்லி இவங்களை புடிச்சு வைச்சுக்கிட்டாங்க.. கடைசில நாங்கெள்லாம் போயி இதெல்லாம் நடிப்பு.. செட்டப்புன்னு சொல்லி சமாளிச்சு கூட்டிட்டு வந்தோம்..” என்றார் சிரிப்போடு..
வெளில சொல்லி சிரிக்கிற மாதிரியா இருக்கு இது..?