சிறந்த தேசிய விருதுக்கான தமிழ்ப் படமாக ‘குற்றம் கடிதல்’ தேர்வு..!

சிறந்த தேசிய விருதுக்கான தமிழ்ப் படமாக ‘குற்றம் கடிதல்’ தேர்வு..!

J.S.K. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ தமிழ்த் திரைப்படம் 62-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.

kutram-kadithal-movie-poster

கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ திரைப்படத்திற்கு அடுத்து, இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேசிய விருது பெறும் பெருமையை பெற்றுள்ளது J.S.K. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம்.

பிரம்மா G இயக்கியுள்ள இப்படம் கோவா, ஜிம்பாப்வே, பெங்களூர், மும்பை ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணவர்கள் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய வகையில் இந்தக் 'குற்றம் கடிதல்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Kutram-Kadithal-Images-001

தரமான படங்களின் மூலம் மக்களின் பாராட்டிலும், ஆதரவிலும் வளர்ந்து நிற்கும் J.S.K. ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் நல்ல கதையம்சமுள்ள படங்களை தயாரித்து வருவதை பழக்கமாய்க் கொண்டுள்ளது. அந்தப் பழக்கமே இப்போது எப்போதும் உடனிருக்கும் பண்பாய் மாறி இன்று இந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது இந்நிறுவனம்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல சினிமாக்கான ஆர்வத்தை வளர்க்கவும், உலகத் தரம் வாய்ந்த தமிழ் படங்களை சர்வதேச அளவில் ஈட்டு செல்வதற்கும் நல்ல தளமாக விளங்கி வருகிறது J.S.K. சதிஷ்குமார் அவர்களின் J.S.K. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம்.

தேசிய விருது கிடைத்துள்ளது பற்றி பேசிய தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார், "தொடர்ந்து இரண்டாவது முறையாக எங்களது நிறுவனம் தயாரித்த தமிழ்த் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகப் பெருமையாக இருக்கிறது.

நல்ல படங்களை தயாரிக்கும் நிறுவனம் என்கிற அந்தஸ்தை பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான் இந்நிறுவனத்தை ஆரம்பித்தோம். எல்லா இடங்களிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் ஆதரவும், விருதுகளும் என்னை மென்மேலும் நல்ல படங்களைத் தயாரிக்க  ஊக்கப்படுத்துகிறது.

இந்தக் ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்திற்கு தொடர்ந்து குவியும் விருதுகளாலும், பாராட்டுகளாலும் மக்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

இந்த எதிர்பார்ப்பு வியாபார ரீதியிலும், மக்களுக்கு படத்தை எடுத்து செல்வதையும் எளிதாக்கியுள்ளது. மிக விரைவில் இப்படத்தை வெளியிடுவதற்கான  வேலைகள்  நடந்து வருகிறது.

நல்லெண்ணமும், கனிந்த பார்வையும், தேர்ந்த யுக்திகளும், தரம் வாய்ந்த படைப்புகளுமே எங்கள் நிறுவனத்தின் நான்கு தூண்களாய் நான் கருதுகிறேன்..." என்றார் பெருமையுடன்.