சென்ற ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வாகியுள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராதிகா பிரஷிதா, அஜய், சாய் ராஜ்குமார், பாவல் நவகீதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு-எஸ்.மணிகண்டன், படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம், இசை – ஷங்கர் ரஙகராஜன், தயாரிப்பு ஜெ.சதீஷ்குமார், கிறிஸ்டி சிலுவப்பன், எழுத்து-இயக்கம் – ஜி.பிரம்மா.
சென்ற ஆண்டே இந்தப் படம் தயாராகிவிட்டாலும் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளையும் பெற்றுக் குவித்த்து. மேலும் இந்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் படங்களின் பட்டியலிலும் இந்தப் படம் இடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தைப் பார்த்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, ‘இந்தப் படத்தின் இயக்குநர் ஜி.பிரம்மா என்னைவிட மிகச் சிறப்பான இயக்குநர்’ என்று மனதாரப் பாராட்டியிருக்கிறார்.
நல்ல நேரத்தில் திரையிட வேண்டும் என்பதற்காக காத்திருக்கும் சூழலில் அடுத்த வெள்ளிக்கிழமையன்று இந்தப் படம் ரிலீஸாகும் என்று இன்று காலை அறிவித்துள்ளனர்.
திரைக்கு வருவதற்கு முன்பாகவே சிறந்த படத்திற்கான அங்கீகாரத்தை பல்வேறு இடங்களில் பெற்று கவனத்தை ஈர்த்திருக்கும் இப்படம் திரை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.









