தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..!

‘ஆரோஹணம்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’, ‘பரதேசி’, ‘தங்க மீன்கள்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘மதயானைக் கூட்டம்’, ‘குற்றம் கடிதல்’, ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’, ‘தரமணி’, ‘புரியாத புதிர்’ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களைத் தனது JSK Film Corporation நிறுவனத்தின் சார்பில் தயாரித்தவர் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.

இவர் நடிகரும்கூட.. 'பேரன்பு', 'தரமணி' ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இவர், அடுத்து வரவிருக்கும் 'அக்னிச் சிறகுகள்', 'கபடதாரி' உள்ளிட்ட 5 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிகாட்டும் குழுவிலும் உறுப்பினராக இருந்தவர்.

இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்..

"கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் நாட்டின் பல்வேறு துறைகளும் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.

அதிலும், குறிப்பாக தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அனைத்துப் பணிகளும் அப்படியே முடங்கிவிட்டன. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், பட வேலைகள் முடிந்து வெளியீட்டு தருவாயில் இருந்த படங்கள் என திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டன.

இந்த நேரத்தில் தயாரிப்பாளர்களுக்காக சில வேண்டுகோள்களை உங்கள் முன் வைக்கிறேன் :

1. தற்போது தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்கள், திரைக்கு வர இருக்கும் திரைப்படங்களின் கதாநாயகர்கள், கதாநாயகிகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், மற்றும் முக்கியமான டெக்னிஷியன்கள், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்திலிருந்து குறைந்தப்பட்சம் 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து இந்த கடுமையான சூழலில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுத்து பக்கபலமாக இருந்து உதவ வேண்டும்.

2. மத்திய, மாநில அரசுகள், மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இந்த காலக்கட்டத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு கடனுக்கான வட்டியையோ, EMI தொகையையோ வாங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கும், மற்ற நிதி நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையில் திரைத்துறையைச் சார்ந்த பைனான்சியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயாரிப்பாளர்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த காலச் சூழ்நிலை முற்றிலும் மாறி இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை அதாவது 2 மாதங்களோ, 3 மாதங்களோ அல்லது 4 மாதங்களோ அதுவரையிலும் தாங்கள் திரைத்துறையினருக்கு அளித்திருக்கும் கடனுக்கான வட்டி தொகையினை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படி செய்யும்பட்சத்தில் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் சுமை, பயம் அகலும். இயல்பு நிலை திரும்பியதும் நல்ல முறையில் படத்தினை முடித்து வெளியிட இந்த வட்டி தள்ளுபடி மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

3. இந்த ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருந்த படங்களுக்கு இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து, உதவ வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திற்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்.

நிறைய சிறிய தயாரிப்பாளர்கள் சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட தயாராக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இயல்பு நிலை திரும்பியதும் சிறிய பட்ஜெட் படங்கள், அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் என்று மாறி, மாறி வெளியாகும் வகையில் காலச் சூழலை உருவாக்கி சிறு தயாரிப்பாளர்களை வாழ வைப்பதற்கு  தியேட்டர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் துணை நிற்க வேண்டும்.

இந்த வேண்டுகோள்கள் அனைத்தும் ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களின் எண்ணம். அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர்களின் மன நிலையை உணர்ந்து இங்கே இவற்றைப் பதிவு செய்கிறேன்.

இந்த வேண்டுகோள்களுக்கு தயவு கூர்ந்து சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்கள் செவிசாய்த்து தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்குமாறும், இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து... உறுதுணையாக இருந்து... இந்த சூழலை முற்றிலும் முறியடிக்க பக்கபலமாக இருந்து உதவுமாறு ஒட்டு மொத்த தயாரிப்பாளர்கள் சார்பில் மிக மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..."

இவ்வாறு அந்த அறிக்கையில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறியுள்ளார்.