“விஷால் அணிக்கே என் ஆதரவு…” – நடிகை குஷ்பு அறிவிப்பு..!

“விஷால் அணிக்கே என் ஆதரவு…” – நடிகை குஷ்பு அறிவிப்பு..!

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவு தெரிவித்த நடிகை குஷ்பு, சங்க நிர்வாகிகளாக புதியவர்கள்தான் வரவேண்டும் என்று கூறினார்.

பிரபல நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்புவுக்கு 44 வயது முடிந்து நேற்று 45 வயது பிறந்தது.

இதையொட்டி அவருடைய பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதில் குஷ்பு கலந்துகொண்டார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், ராகுல்காந்தி அறக்கட்டளையின் தலைவர் சுமதி அன்பரசு, மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் நாகூர் நவ்சாத், மகளிரணி பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குஷ்பு சத்தியமூர்த்தி பவனிலேயே நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, “எனக்கு இன்றைக்கு 45–வது வயது பிறந்துள்ளது. என்னுடைய பிறந்த நாளை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

1986–ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தேன். அன்று முதல் தமிழக மக்களின் அளவிட முடியாத அன்பு எனக்கு கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டின் மகளாக, மருமகளாக, சகோதரியாக என்னை பார்த்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் என்னை கனவுக் கன்னியாக பார்த்தார்கள். இன்றைக்கு என்னை அண்ணியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதைவிடவும் பெரிய மகிழ்ச்சி இருக்க முடியாது. நன்றியைவிட வேறு எதுவும் சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.

தயாரிப்பாளராகவும், பிரபல டைரக்டரின் மனைவி என்ற முறையிலும் திரையின் வெளியே இருந்து திரைப்பட துறையை பார்க்கிறேன். எனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் படங்களில் நடிப்பேன்.

நடிகர் சங்கம் ஒன்றும் குடும்ப சொத்து இல்லை. ஆகவே புதிதாக இருப்பவர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் நடிகர் சங்க தேர்தலில் என்னுடைய ஆதரவு நடிகர் விஷால் அணியினருக்குத்தான்..” என்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தனது பிறந்த நாளையொட்டி சில திரையுலக பிரபலங்களுக்கு மதிய உணவு விருந்தளித்தார் குஷ்பு. இந்த விருந்தில் நடிகை ராதிகாவும், சரத்குமாரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score